search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பத்திரகாளி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
    X
    பத்திரகாளி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

    தில்லைவன பத்திரகாளி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

    தில்லைவன பத்திரகாளி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழாவில் சுத்துக்குளம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    கடலூர் முதுநகர் சுத்துக்குளத்தில் பிரசித்திபெற்ற தில்லை வன பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆனிமாதம் தீமிதி திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தீச்சட்டி மற்றும் தீமிதி திருவிழா கடந்த 24-ந் தேதி தொடங்கியது. இதைத் தொடர்ந்து தில்லைவன பத்திரகாளி அம்மனுக்கு 108 கிலோ புஷ்ப அர்ச்சனை, திருக்கல்யாண உற்சவமும், 108 பால்குட அபிஷேகம், மயான கொள்ளை உற்சவம் என ஒவ்வொருநாளும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தீச்சட்டி ஏந்தி தீமிதி திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. முன்னதாக காலையில் தில்லைவன பத்திரகாளி அம்மனுக்கு பல்வேறு அபிஷேக ஆராதனையும், அதைத் தொடர்ந்து காலை 11 மணியளவில் அதர்வனபிரத்யங்கரா தேவிக்கு நிகும்பலா என்கிற மிளகாய் யாகமும், சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.

    பின்னர் இரவு 8 மணியளவில் கோவில் முன்புஉள்ள தீ குண்டத்தில் பக்தர்கள் தீச்சட்டி கையில் ஏந்தியும், அலகு குத்தியும் தீமிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர். அப்போது அங்கே சுற்றியிருந்த பக்தர்கள் ஓம்சக்தி, பராசக்தி என கோஷம் எழுப்பினர். பின்னர் அம்மன் வீதி உலா நடைபெற்றது. இதில் சுத்துக்குளம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். நேற்று மாலை 6 மணிக்கு மஞ்சள்நீர் மற்றும் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
    Next Story
    ×