search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வேலால் வினையை அழித்த வெற்றி வீரன்...
    X

    வேலால் வினையை அழித்த வெற்றி வீரன்...

    முருகப்பெருமான் சூரர்களுடன் போரில் ஈடுபடும் முன் தன் தாய், தந்தையை வணங்கி பயணத்தை தொடங்கியதாக கூறப்படுகிறது. இதுவே பங்குனி உத்திரமாக கொண்டாடப்படுகிறது.
    தமிழ் மாதத்தில் கடைசி மாதமாக திகழும் பங்குனியில், உத்திர நட்சத்திரம் வரும் நாளே பங்குனி உத்திர திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. தென்மாவட்டங்களில் ‘குலதெய்வ வழிபாட்டால் குலம் விருத்தியாகும்’ என்ற வழக்காடு வெகு சிறப்புற்று காணப்படுகிறது. இந்நாளில் தங்களுடைய குலதெய்வம், சாஸ்தாவை மக்கள் வழிபட்டு வருகின்றனர். ஆனால் பழனியில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றாக இது சிறப்பு பெற்று விளங்குகிறது.

    குறிப்பாக முருகப்பெருமான் சூரர்களுடன் போரில் ஈடுபடும் முன் தன் தாய், தந்தையை வணங்கி பயணத்தை தொடங்கியதாக கூறப்படுகிறது. இதுவே பங்குனி உத்திரமாக கொண்டாடப்படுகிறது.

    அதாவது குதிரைகள் பூட்டிய தேரில் முருகப்பெருமானுக்கு வாயு பகவான் தேரோட்டியாக இருக்க முருகனின் படைகள் அணிவகுத்து சென்றன. அப்போது வழியில் ஒரு சிறிய மலை முருகனின் படைகளை வழிமறிக்கும் விதமாக பெரிதாக வளர ஆரம்பித்தது. காரணம் அறியாமல் அனைவரும் திகைத்து நிற்க, அங்கிருந்த நாரதர் அம்மலையை பற்றி சொல்ல தொடங்கினார்.

    அதில், கிரவுஞ்சன் என்னும் மன்னன் எல்லோருக்கும் தீமைகளை புரிந்த தீய சக்தியானவனாக இருந்தான். அகத்திய முனிவரின் சாபத்தால் அசையாமல் மலையாகி நின்றாலும் இருந்த இடத்தில் இருந்து கொண்டே தன்னை கடந்து செல்பவர்களை ஏமாற்றி தொல்லை தந்து கொண்டிருக்கிறது என்றார். மேலும் இந்த மலைக்கு அருகில் உள்ள மாயாபுரிப்பட்டனம் என்னும் நகரில், சூரபத்மனின் தம்பியும், யானை முகம் கொண்டவனுமான தாரகாசரன் ஆட்சி செய்து கொண்டு தேவர்களை மிகுந்த துன்பங்களுக்கு உள்ளாக்கி வருகின்றான் என்ற தகவலையும் நாரதர் சொன்னார்.

    அதைகேட்ட முருகப்பெருமான், தன் தளபதி வீரபாகுவிடம் படையில் பாதியை அழைத்து கொண்டுபோய் தாரகாசுரனை அழித்துவிட்டு வரும்படி கட்டளையிட்டார். தலைவனின் கட்டளைப்படி வீரபாகுவின் தலைமையில் முருகனின் படைகள் மாயாபுரிபட்டினத்துக்குள் நுழைந்தன. இதையறிந்த தாரகாசுரனும் பெரும்படையுடன் எதிர்த்து வந்தான். கடும் போர் நடந்ததில் இரு பக்கத்திலும் வீரர்கள் இறந்து விழுந்தனர்.

    போர்க்களத்தில் நின்று யுத்தம் செய்த தாரகாசுரன், முருகப்பெருமானின் படையில் இருந்த வீரகேசரியை தன் கதாயுதத்தால் மார்பில் அடித்து சாய்த்தான். இதைக் கண்ட வீரபாகு வெகுண்டெழுந்து, தாரகாசுரனை கடுமையாக தாக்கினான். இதனால் கோபம் கொண்ட தாரகாசுரன் திரிசூலத்தால் வீரபாகுவின் மார்பில் குத்தி சாய்த்தான். மூர்ச்சையாகி வுழுந்த வீரபாகுவை தாரகாசுரன் எள்ளி நகையாடினான்.

    மயக்கம் கலைந்து எழுந்த வீரபாகு, மீண்டும் மூர்க்கத் தனமாக தாரகாசுரனை தாக்கினான். எதிர்தாக்குதல் நடத்த முடியாமல் தாரகாசுரன் தன் மாய வேலைகள் மூலம் எலியாக மாறி கிரவுஞ்ச மலைக்குள் சென்றான். வீரபாகுவும் அவனைதொடர்ந்து மற்ற வீரர்களும் விடாது மலைக்குள் நுழைய, மலை தன் வேலையை காட்ட ஆரம்பித்தது. தாரகாசுரனின் அசுரப்படைகள் முருகப்பெருமானின் படைகளை பெரிய அளவில் தாக்கி அழித்தன.

    இதை நாரதர் மூலம் அறிந்த முருகப்பெருமான் போர்க்களத்திற்கு வந்தார். வந்தவரின் வலிமை அறியாமல் தாரகாசுரன் சிறுவன் என முருகனை கிண்டல் செய்தான். கோபம் கொண்ட முருகப்பெருமான் அவனை கடுமையாக தாக்க ஆரம்பித்தார். தாக்குதலை சமாளிக்க முடியாமல் மீண்டும் எலியாக மாறி மலைக்குள் நுழைந்து மாய வேலைகளை காட்ட ஆரம்பித்தான். முருகப்பெருமான் தன் வேலாயுதத்தை கையில் எடுத்து வீசி எறிந்தார். துள்ளி வந்த வேல் மலையை பல கூறுகளாக்கி உடைத்தெறிந்து தாரகாசுரனை கொன்றது. அதன்பிறகு முருகப்பெருமான் தெய்வானையை மணந்தார். 
    Next Story
    ×