search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் இறங்கும் விழா: லட்சக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்தனர்
    X

    பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் இறங்கும் விழா: லட்சக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்தனர்

    சத்தியமங்கலம் அருகே உள்ள பிரசித்திபெற்ற பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தீ மிதித்தார்கள்.
    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்து உள்ள பண்ணாரியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது. பண்ணாரி அம்மன், பண்ணாரி மாரியம்மன் என்ற பெயர்களால் அழைக்கப்படும் இந்த கோவில் கொங்கு மண்டலம் மட்டுமின்றி தமிழகம் மற்றும் கர்நாடகா, கேரள மாநில மக்களாலும் புகழப்படும் கோவிலாகும். சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான இந்த கோவிலின் குண்டம் திருவிழா ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு பங்குனி குண்டம் விழா கடந்த 4-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 5-ந் தேதி நித்தியபடி பூஜை நடந்தது.

    6-ந் தேதி பண்ணாரி அம்மன் திருவீதி உலா தொடங்கியது. சிக்கரசம்பாளையத்தில் முதல் நாள் வீதி உலா நடந்தது. சப்பரத்தில் வீதி உலா வரும் பண்ணாரி அம்மன் அம்பிகைத்தாய் அன்று இரவு புதூர் வந்து, அங்கு உள்ள மாரியம்மன் கோவிலில் தங்கினார். தொடர்ந்து 12-ந் தேதி வரை திருவீதி உலா நடந்தது.

    வெள்ளியம்பாளையம் புதூர், தக்கரைதத்தப்பள்ளி, உத்தண்டியூர், அய்யன்சாலை, ராமாவரம், தாண்டாம்பாளையம், இக்கரை நெகமம், கெஞ்சனூர், திருவள்ளுவர்நகர், சத்தியமங்கலம், வடக்குப்பேட்டை, கடைவீதி, அக்ரகாரம், ரங்கசமுத்திரம், எஸ்.ஆர்.டி. கோணமூலை, காந்திநகர், திம்மையன்புதூர், கோட்டு வீராம்பாளையம், பட்டவர்த்தி அய்யம்பாளையம், புதுவடவள்ளி, புதுக்குய்யனூர், பசுவபாளையம், புதுப்பீர்கடவு, பட்டரமங்கலம், ராஜன் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சப்பரத்தில் உலா வந்து அனைத்து கிராம மக்களுக்கும் பண்ணாரி அம்மன் அருள் ஆசி வழங்கி 12-ந்தேதி பண்ணாரி மாரியம்மன் சப்பரம் கோவிலை வந்தடைந்து.

    அன்றைய தினம் இரவு கம்பம் நடப்பட்டது. 13-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை மலைவாழ் மக்கள் தாரை தப்பட்டை முழங்க, பழங்குடியினர் இசைக்கருவியான பீனாட்சி இசையுடன் கம்பத்தை சுற்றி களியாடும் நிகழ்ச்சி நடத்தினார்கள்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்கும் விழா நேற்று அதிகாலை நடந்தது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் பக்தர்கள் தங்கள் காணிக்கையாக ஊஞ்ச மர விறகுகள் (எரி கரும்பு) கொண்டு வந்து குவித்தனர். பண்ணாரி அம்மன் கோவிலில் குண்டத்துக்கு ஊஞ்ச மரம் பயன்படுத்துவது வழக்கம். எனவே காணிக்கையாக ஊஞ்ச மரக்கட்டைகள் எரிகரும்புகளாக பெறப்படும்.

    அதன்படி பக்தர்கள் கொண்டு வந்த எரிகரும்புகள் குண்டம் அமைக்கும் பகுதியில் குவிக்கப்பட்டது. மாலையில் குண்டம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கின. சுமார் 6 அடி உயரத்துக்கு விறகுகள் அடுக்கி வைக்கப்பட்டது.

    இரவு 9.30 மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு குண்டம் பற்றவைக்கப்பட்டது. நள்ளிரவு சுமார் 2.30 மணி வரை எரிகரும்புகள் தீ ஜூவாலையுடன் கொழுந்து விட்டு எரிந்தது. விறகுகள் எரிந்து முடிந்தபோது குண்டம் முழுமையாக தீக்கனலாக மாறியது. அதைத்தொடர்ந்து குண்டம் அமைக்கும் பணி தொடங்கியது.

    பச்சை மூங்கில் கட்டைகளால் தீக்கனல்கள் அடித்து நொறுக்கப்பட்டன. பக்தர்களின் கால்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தீக்கனல்கள் நொறுக்கப்பட்டு குண்டம் அமைக்கப்பட்டது. குண்டம் 12 அடி நீளம், 6 அடி அகலத்தில் தயார் செய்யப்பட்டது.

    கொதிக்கும் வெப்பத்திலும் தங்கள் உடலில் தண்ணீரை ஊற்றிக்கொண்டே இந்த பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர். அதிகாலை 4 மணி அளவில் பக்தர்கள் இறங்க வசதியாக குண்டம் தயார் செய்யப்பட்டது.

    இதற்கிடையே அதிகாலை 3 மணி அளவில் அம்மன் அழைத்தல் பூஜை தொடங்கியது. பண்ணாரி அம்மன் கோவிலில் இருந்து பூசாரிகள் மேள தாளங்கள் முழங்க கோவில் தெப்பக்குளத்துக்கு சென்றனர். அங்குள்ள சருகுமாரியம்மன் கோவிலில் அம்மன் அழைத்தல் பூஜை நடந்தது. அங்கிருந்து அம்மன் அருள் வாக்கு கிடைத்ததும் தெப்பக்குளத்தில் இருந்து படைக்கல ஊர்வலம் தொடங்கியது. அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் பண்ணாரி அம்மன் வீற்றிருக்க, பக்தர்கள் ஊர்வலமாக சுமந்து வந்தனர். ஊர்வலத்தில் பூசாரி செந்தில் என்பவர் படைக்கலத்தை சுமந்து வந்தார். பிற பூசாரிகள் மற்றும் பக்தர்கள் பூஜை பொருட்கள், முத்துக்குடை, தீப்பந்தம் ஆகியவற்றை பிடித்துக்கொண்டு வந்தனர்.

    தப்பட்டை, கொம்பு வாத்தியங்கள் இசைக்க இந்த ஊர்வலம் நடந்தது. அதிகாலை 3.55 மணிக்கு சப்பர ஊர்வலம் குண்டத்தை வந்து சேர்ந்தது. அங்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் குண்டத்தை சுற்றி கற்பூரம் ஏற்றப்பட்டு பூஜை நடந்தது. குண்டத்துக்கு பூசாரி செந்தில் தீபாராதனை காட்டினார். படைக்கலம் மற்றும் சப்பரத்தில் இருந்த உற்சவ அம்மனுக்கும் பூஜை செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அதிகாலை 4.05 மணிக்கு தீபாராதனை செய்த பூசாரி செந்தில் குண்டத்தில் இறங்கி முன்னால் நடந்து சென்றார். அவரைத்தொடர்ந்து பூசாரிகள் வரிசையாக குண்டத்தில் இறங்கி நடந்து சென்றனர்.

    அப்போது ‘பண்ணாரி தாயே அம்மா‘ என்ற பக்தி கோஷத்தை பக்தர்கள் எழுப்பினார்கள். பின்னர் கோவில் நிர்வாகத்தினர், பக்தர்கள் குண்டம் இறங்க தொடங்கினார்கள்.

    குண்டம் இறங்க காத்திருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் இறங்கி தீமிதித்து பண்ணாரி மாரியம்மனை பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். குண்டத்தில் இறங்கி ஓடிய பக்தர்கள் “ஓம் சக்தி“ என்று பக்தி கோஷம் எழுப்பியபடி சென்றனர்.

    தமிழக உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆணையாளர் பி.அமுதா, மாவட்ட அதிகாரி டாக்டர் கலைவாணி, ஈரோடு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமாரின் மனைவி ஸ்ரீவித்யா சிவக்குமார், பா.ம.க. மாநில துணை தலைவர் என்.ஆர்.வடிவேல் உள்பட முக்கிய பிரமுகர்கள் என ஏராளமானவர்கள் குண்டம் இறங்கி வழிபட்டனர்.

    விழாவில் பவானிசாகர் எம்.எல்.ஏ. ஈஸ்வரன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையாளர் (கோவை) க.ராஜமாணிக்கம், உதவி ஆணையாளர்கள் நந்தகுமார், பழனிக்குமார், சத்தியமங்கலம் தாசில்தார் கார்த்திக் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    குண்டம் விழாவையொட்டி கடந்த 5 நாட்களுக்கு முன்னதாகவே வரிசையில் காத்து இருந்த பக்தர்கள் கோவில் முன்பகுதியில் இருந்து அங்குள்ள மிகப்பெரிய மைதானம் முழுவதும் நிரம்பி இருந்தனர். அவர்கள் வரிசைப்படி குண்டம் இறங்க அனுமதிக்கப்பட்டனர். பல்வேறு வேண்டுதல்களுடன் வந்த பக்தர்கள் பய பக்தியுடன் தீ மிதித்தனர். பண்ணாரி அம்மனை வேண்டி குழந்தை வரம் பெற்றவர்கள் அந்த குழந்தைகளை கைகளில் சுமந்து கொண்டு குண்டத்தில் இறங்கி பக்தி பரவசத்துடன் நடந்து வந்தனர். சிறுவர், சிறுமிகள், இளைஞர்கள், இளம்பெண்கள், பெரியவர்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளும் குண்டத்தில் இறங்கினார்கள். போலீசார், ஊர்க்காவல்படையினர், தீயணைப்பு படையினர், சிறப்பு இலக்கு படையினரும் பக்தர்களுடன் வரிசையில் நின்று குண்டத்தில் இறங்கி வழிபட்டனர்.

    ஈரோடு மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்தனபாண்டியன் தலைமையில் ஈரோடு, நாமக்கல், தர்மபுரி உள்ளிட்ட மாவட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் குண்டத்தில் இறங்குபவர்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து காவல் துறை சார்பில் தொடர்ந்து அறிவுரைகள் வழங்கப்பட்டன. பலர் செல்போன்களை சட்டை மேல் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு குண்டத்தில் ஓடியபோது அவை குண்டத்தில் தவறி விழுந்தன. தீயணைப்பு வீரர்களும் குண்டத்தை சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஒருசிலர் குண்டத்தில் தடுமாறியபோது தீயணைப்பு படை வீரர்கள் அவர்களை காப்பாற்றி மீட்டனர்.

    அதையும் மீறி நேற்று 4 பெண்கள் குண்டத்தில் தவறி விழுந்து காயம் அடைந்தனர். அவர்களை தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் மீட்டு கோவில் வளாகத்தில் முதலுதவி மையத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர்களில் மேல் சிகிச்சை தேவைப்பட்டவர்கள் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும் ஒரு பெண் நிலை தடுமாறி குண்டத்தில் விழுந்தார். ஆனால் காயமின்றி அவர் தப்பினார்.

    குண்டம் விழாவை காண தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா, கேரளாவில் இருந்தும் பல ஆயிரக்கணக்கானவர்கள் வந்து கோவிலில் குவிந்து இருந்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்தே பக்தர்கள் வருகை மிகவும் அதிகமாக இருந்தது. கோபி, சத்தியமங்கலம் பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக கோவிலுக்கு வந்தனர். குண்டம் இறங்கும் பக்தர்கள் வரிசையாக நிற்க வேண்டிய தடுப்பு வேலி பகுதியை தாண்டியும் ராஜன் நகர் ரோட்டில் பக்தர்கள் கூட்டம் குவிந்தது. ஒரு கட்டத்தில் மைசூர் ரோட்டிலும் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு கூட்டம் நிரம்பியது. இதனால் அந்த பகுதியை வாகனங்கள் கடந்து செல்லசுமார் ஒரு மணி நேரம் ஆனது.

    குண்டம் இறங்கும் பக்தர்களுக்காக பலரும் உணவு பொருட்களை கொண்டு வந்து அந்தந்த பகுதிகளிலேயே வழங்கினார்கள். லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலை சுற்றிலும் குவிந்து இருந்தனர். குண்டம் இறங்குபவர்கள் தவிர அவர்களுடன் வந்த உறவினர்களும் ஏராளமானவர்கள் இருந்தனர். இதனால் எங்கு பார்த்தாலும் நெரிசலாகவே காணப்பட்டது. நேற்று காலை 6 மணியை தாண்டியும் வெளியூர்களில் இருந்து பக்தர்கள் வந்து குண்டம் இறங்கும் பகுதியில் நீண்ட வரிசையில் தடுப்பு வேலிகளுக்கு அப்பாலும் நின்று கொண்டிருந்தனர்.

    முதலில் ஒருவர் பின் ஒருவராக குண்டம் இறங்க அனுமதிக்கப்பட்டனர். நேரம் செல்லச்செல்ல 2 வரிசையாக பக்தர்கள் குண்டம் இறங்க அனுமதிக்கப்பட்டனர். அன்பிறகே கூட்டம் குறைய தொடங்கியது. நண்பகல் 1 மணியை கடந்தும் பக்தர்கள் குண்டம் இறங்கிக் கொண்டே இருந்தனர். நேற்று பண்ணாரி அம்மன் குண்டம் விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து குண்டத்தில் இறங்கி தீமிதித்து அம்மனை வழிபட்டு தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினார்கள். பக்தர்களை தொடர்ந்து விவசாயிகளின் கால்நடைகள் குண்டத்தில் இறக்கப்பட்டன.

    கோவிலை சுற்றிலும் எங்கும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. எனவே அசம்பாவிதங்கள் ஏதும் நடந்து விடாமல் இருக்க போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து இருந்தனர். 1,500-க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் இருந்தனர்.

    இவர்களுடன் சுமார் 300 ஊர்க்காவல் படையினர், போலீஸ் நண்பர்கள், நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்களும் பணியில் ஈடுபட்டனர். திருட்டு மற்றும் குற்றங்களை தடுக்க குற்றப்பிரிவு போலீசார் மாறுவேடத்தில் கண்காணித்து வந்தனர்

    இன்று (புதன்கிழமை) நண்பகல் 12 மணிக்கு மாவிளக்கு பூஜை நடக்கிறது. இரவு 10 மணிக்கு புஷ்ப ரதம் மற்றும் சிம்ம வாகனத்தில் அம்மன் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (வியாழக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழா பூஜை மற்றும் அன்னதானம் நடக்கிறது. 22-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை நடக்கிறது. அதைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு தங்கரத புறப்பாடு நடக்கிறது. 25-ந் தேதி மறுபூஜையுடன் பண்ணாரி அம்மன் பங்குனி குண்டம் திருவிழா நிறைவடைகிறது. 
    Next Story
    ×