search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பண்ணாரி அம்மன் கோவிலில் குழிக்கம்பம் சாட்டப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.
    X
    பண்ணாரி அம்மன் கோவிலில் குழிக்கம்பம் சாட்டப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

    பண்ணாரி அம்மன் கோவிலில் குழிக்கம்பம் சாட்டப்பட்டது

    பண்ணாரி அம்மன் கோவிலில் குழிக்கம்பம் சாட்டப்பட்டது. கம்பத்தை சுற்றி மலைக்கிராம மக்கள் விடிய, விடிய ஆடிப்பாடி கொண்டாடினர்.
    சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் குண்டம் திருவிழா கடந்த 4-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து வீதி உலா தொடங்கியது. சப்பரத்தில் பண்ணாரி அம்மன் மற்றும் சருகு மாரியம்மன் உற்சவ சிலைகள் வைக்கப்பட்டு பல்வேறு கிராமங்கள் தோறும் வீதி உலா வந்தது.

    இந்த வீதி உலாவை முடித்துக்கொண்டு சப்பரம் நேற்று முன்தினம் நள்ளிரவு கோவிலை வந்தடைந்தது. அதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    அதன்பின்னர் கோவிலை சுற்றியுள்ள பரிவார தெய்வங்களுக்கு பூஜை நடந்தது. தொடர்ந்து குழிக்கம்பம் சாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக குண்டம் அருகே 11 அடி சுற்றளவும், 3 அடி ஆழமும் உள்ள குழி ஏற்கனவே தோண்டப்பட்டு தயார் நிலையில் இருந்தது. அதைத்தொடர்ந்து வெள்ளியம்பாளையம், வெள்ளியம்பாளையம்புதூர், சிக்கரசம்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரங்களில் உள்ள பக்தர்கள் ஊஞ்சல் மற்றும் வேம்பு மர காய்ந்த குச்சிகளில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி தீப்பற்ற வைத்தனர்.

    அதன்பின்னர் கோவிலை சுற்றி வலமாக வந்து தயார் நிலையில் உள்ள குழிக்கம்பத்தில் குச்சிகளை போட்டார்கள். இதேபோல் கோவில் துணை ஆணையர் பழனிக்குமார், அறங்காவலர்கள் மற்றும் கோவில் அலுவலரும் அம்மனை வேண்டி குழிக்கம்பத்தில் குச்சிகளை போட்டார்கள். இதில் தீ கொளுந்து விட்டு எரிந்தது.

    உடனே மலைவாழ் மக்கள் தாரை, தப்பட்டை பீனாட்சி வாத்தியம் வாசித்தபடி குழி கம்பத்தை சுற்றி ஆடி அம்மன் புகழை பாடினார்கள். விடிய விடிய இந்த கொண்டாட்டம் நடந்தது. அதேபோல் பெண்களும் ஆடினார்கள். 18-ந் தேதி இரவு 1 மணி அளவில் அம்மை அழைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. அதைத்தொடர்ந்து 19-ந் தேதி அதிகாலை கோவிலில் அமைக்கப்பட்ட குண்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×