search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வெங்கடாஜலபதி கோவிலை, திருமலை-திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் அனில்குமார் சின்கால் ஆய்வு செய்தபோது எடுத்தபடம்.
    X
    வெங்கடாஜலபதி கோவிலை, திருமலை-திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் அனில்குமார் சின்கால் ஆய்வு செய்தபோது எடுத்தபடம்.

    வெங்கடாஜலபதி கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 27-ந்தேதி நடக்கிறது

    கன்னியாகுமரியில் கட்டப்பட்ட திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 27-ந்தேதி நடக்கிறது என்று திருமலை- திருப்பதி தேவஸ்தான அதிகாரி அனில்குமார் சின்கால் கூறினார்.
    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர வளாகத்தில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக 5½ ஏக்கர் நிலத்தை விவேகானந்த கேந்திரம் நன்கொடையாக வழங்கியது.

    அதைத்தொடர்ந்து 2013-ம் ஆண்டு ஜூலை மாதம் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் கட்ட பூமிபூஜை நடந்தது. 5 ஆண்டுகளாக நடந்த கோவில் கட்டுமானப்பணி முடிவடைந்துள்ளது.

    அதைத்தொடர்ந்து திருமலை-திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் அனில்குமார் சின்கால் நேற்று காலை கன்னியாகுமரி வந்து கோவில் பணிகளை ஆய்வு செய்தார்.

    பின்னர், அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

    கன்னியாகுமரியில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் கட்டிடப்பணி முழுமை அடைந்துள்ளது. இங்கு பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது. இந்த கோவிலுக்கு சின்னமுட்டத்தில் இருந்து இணைப்பு சாலையும், 4 மாட வீதிகளும், தோரண வாயில்களும் அமைக்கப்பட்டு உள்ளது. அடுத்த மாதம்(டிசம்பர்) 31-ந் தேதிக்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்படும். கோவில் வளாகத்தை அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

    இந்த கோவிலின் கும்பாபிஷேகம் வருகிற ஜனவரி மாதம் 27-ந்தேதி நடத்த திட்டமிட்டு உள்ளோம். அதற்கு முன்னதாக 4 நாட்கள் யாகசாலை பூஜைகள் நடைபெறும், கும்பாபிஷேகத்தின்போது, சாமிசிலைகள், கொடிமரம் பிரதிஷ்டை நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது, அவருடன் திருமலை-திருப்பதி தேவஸ்தான தலைமை பொறியாளர் சந்திரசேகர ரெட்டி, நிதி மற்றும் கணக்கு ஆலோசகர் பாலாஜி, செயற்பொறியாளர் சத்திய நாராயணன், உதவி செயற்பொறியாளர் சந்திரமவுலி ரெட்டி, மின்பிரிவு கோட்ட பொறியாளர் ரவிசங்கர் ரெட்டி, உதவி பொறியாளர்கள் பார்த்தசாரதி, அமர்நாத் ரெட்டி, திட்ட பொறியாளர் அப்சாராவ், ஒப்பந்ததாரர் ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    முன்னதாக கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர செயலாளர் மற்றும் பொருளாளர் அனுமந்தராவுடன் அனில்குமார் சின்கால் கோவில் கும்பாபிஷேகம் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். 
    Next Story
    ×