search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    புரிதலை விட தெளிதல் அவசியம்
    X

    புரிதலை விட தெளிதல் அவசியம்

    எப்போதும் புரிதலை விட மனம் தெளிதலே அவசியமும், முக்கியமானதும் என்பதை உணர்த்தும் ஆன்மிக கதையை விரிவாக பார்க்கலாம்.
    சிவ பக்தனான அந்த குடியானவனுக்கு திருமணமாகி சில மாதங்கள்தான் ஆகியிருந்தது. தன்னுடைய வேலையை முடிக்கும் குடியானவன், அதன் பிறகு தினமும் கோவிலுக்குச் சென்று, அங்கு நடக்கும் திருவாசகத்தின் சொற்பொழிவைக் கேட்பான். அதன்பிறகே வீட்டிற்குத் திரும்புவான். இதனால் அவன் ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வருவதற்கு இரவு வெகுநேரமாகிவிடும்.

    ஆரம்பத்தில் இதனைக் கண்டுகொள்ளாமல் இருந்த மனைவி, பின்னர் செல்லச் செல்ல நயமாகச் சொல்லிப் பார்த்தாள். ‘என்னங்க.. வீட்டிற்கு சீக்கிரம் வந்து விடுங்கள்’ என்பாள். ஆனாலும் அந்த குடியானவன், திருவாசக சொற்பொழிவைக் கேட்டு விட்டுத்தான் வீடு திரும்புவான். அவனுக்கு திருவாசகத்தின் மீது அப்படியொரு ஈர்ப்பு.

    பொறுமையாக இருந்து வெறுப்பாகிப் போன அவனது மனைவி, ஒருநாள் வீட்டிற்குள் நுழைந்த கணவனை தடுத்து நிறுத்தி, ‘அப்படி என்னதான் அந்த திருவாசகத்துல கொட்டிக் கிடக்கு?. ஒரு நாளாவது நேரத்தோடு வீட்டிற்கு வர வேண்டும் என்று நினைத்திருக்கிறீர்களா? சரி.. தினமும் அங்கப் போய் திருவாசகம் கேட்டு விட்டு வருகிறேன் என்கிறீர்களே? அதில் உங்களுக்கு என்ன புரிந்தது சொல்லுங்க?’ என்று ஒரு பிடிபிடித்து உலுக்கினாள்.

    அதற்கு அந்தக் குடியானவன், ‘எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆனால் போய் கேட்டு விட்டு வருவது நன்றாக இருக்கு’ என்றான்.

    அவனது பதிலைக் கேட்டு மேலும் ஆத்திரம் அடைந்த குடியானவன் மனைவி, ‘முதல்ல வீட்டில் இருக்கும் சல்லடையில் கொஞ்சம் தண்ணீர் விட்டுக் கொண்டு வாங்க’ என்றாள்.

    குடியானவனும் மனைவி எதற்காகவோ சொல்கிறாள் என்று நினைத்து சல்லடையில் தண்ணீர் எடுத்து வந்தான். அதைக் கொண்டு வரும்போது வீடு முழுவதும் சிந்தியது. மனைவியிடம் வந்தபோது சல்லடையில் தண்ணீர் இல்லாமல் போயிருந்தது.

    அதைப் பார்த்த மனைவி, ‘தினமும் வீட்டிற்கு தாமதமாக வருகிறீர்கள். ஏனென்று கேட்டால், திருவாசகம் கேட்கப் போனேன் என்கிறீர்கள். என்ன சொன்னாங்கன்னு கேட்டாலும், ஒன்றும் தெரியலைன்னு சொல்றீங்க. நீங்க திருவாசகம் கேட்கிற லட்சணம், இதோ இந்த சல்லடையில் ஊத்திக் கொண்டு வந்த தண்ணீர் மாதிரிதான். எதுக்கும் பயன்படாமல் வீணாகத்தான் போகிறது’ என்றாள்.

    அதைக் கேட்டு அமைதியாக இருந்த அந்த குடியானவன், மனைவியைப் பார்த்துச் சொன்னான். ‘நீ சொல்வது சரிதான். சல்லடையில் தண்ணீர் வேண்டுமானால் நிரப்ப முடியாமல் போயிருக்கலாம். ஆனால் மிகவும் அழுக்காக இருந்த சல்லடை இப்போது எப்படி நல்லா சுத்தமாகியிருக்கு பாரு!. அதுபோலத்தான் என்னோட மனசுல இருக்கிற அழுக்கை எல்லாம் படிப்படியாக, திருவாசகம் அகற்றுவதை என்னால் நன்றாக உணர முடிகிறது’ என்றான்.

    ஆம்.. எப்போதும் புரிதலை விட மனம் தெளிதலே அவசியமும், முக்கியமானதும் ஆகும். 
    Next Story
    ×