search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆன்மிக கதை: கடவுளை அறிவது சாத்தியமா?
    X

    ஆன்மிக கதை: கடவுளை அறிவது சாத்தியமா?

    மனிதர்களின் சிறு அறிவினால் கடவுளையும், அவனது குணங்களையும் அளவிட்டு விட என்பதை உணர்த்தும் ஆன்மிக கதையை பார்க்கலாம்.
    கல்வியில் முதிர்ச்சி கண்டிருந்த முதியவர் ஒருவர், உலகின் பல மொழிகளை அறிந்திருந்தார். பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு தனது அறிவு முதிர்ச்சியால் அதில் வெற்றிகளையும் கண்டிருந்தார். அவருக்குள் இப்போது புதிய சிந்தனை ஓடிக் கொண்டிருந்தது. அவரது ஆராய்ச்சி கடவுளை நோக்கி திரும்பியிருந்தது. ‘கடவுள் எப்படி இருப்பார்?, கடவுளின் குணம் எப்படிப்பட்டது? கடவுள் எந்த வண்ணம் கொண்டவர்?’ என்பதை கண்டறிவதே அவரது புதிய ஆராய்ச்சி.

    அதற்கான சிந்தனையில் ஆழ்ந்தபடி ஒரு கடற்கரையில் அமர்ந்திருந்தார். அப்போது கடற்கரையில் அங்கும் இங்குமாக ஓடிக்கொண்டிருந்த ஒரு இளைஞனின் செய்கை அவருக்கு வியப்பை அளித்தது. இளைஞனின் முகத்தில் எதையோ சாதிக்க வேண்டும் என்ற வெறி இருப்பதைக் கண்டார். அந்த இளைஞன் என்ன செய்கிறான்? என்று சற்று உற்று நோக்கினார்.

    அந்த இளைஞன், தன் கையில் இருந்த சிறிய கிளிஞ்சலில் கடல் நீரை எடுத்துக் கொண்டு, கரையில் கொட்டினான். பின்னர் மீண்டும் கடலுக்குள் இறங்கி, கடல் நீரை அந்த கிளிஞ்சலில் சேகரித்து வந்து மணலில் கொட்டினான். பல மணி நேரமாக இதுதான் அவனது செய்கையாக இருந்தது. அவனது செய்கை, பெரிய வருக்கு விசித்திரமாக இருந்தது.

    அவர், இளைஞனிடம், ‘நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?’ என்றார்.

    ஆனால் இளைஞனிடம் இருந்து பதில் வரவில்லை, கேள்விதான் வந்தது. அவன் பெரியவரைப் பார்த்து, ‘ஐயா! இந்த உலகத்தில் அதிகமாக இருப்பது ஏழைகளா? பணக்காரர்களா?’ என்றான்.

    ‘ஏழைகள்தான் அதிகம்’ என்றார் பெரியவர்.

    ‘சரியாக சொன்னீர்கள். அந்த ஏழைகள் அனைவரையும் பணக்காரர்களாக மாற்றப்போகிறேன். அதற்கான வேலையைத்தான் இப்போது செய்து கொண்டிருக்கிறேன்’ என்று கூறிவிட்டு மீண்டும் கடலை நோக்கி ஓடினான்.

    பெரியவருக்கு தலை சுற்றுவது போல் இருந்தது. அதே நேரம் இளைஞனின் மீது வியப்பும் ஏற்பட்டது. இளைஞன் கடலுக்குள் ஓடுவதும், கிளிஞ்சலில் நீர் எடுத்து வந்து மணலில் கொட்டுவதுமாக இருந்தான். சில மணி நேரம் இப்படியே கடந்து போயிற்று. ஆனாலும் இளைஞன் தன் வேலையை நிறுத்தவில்லை.

    பொறுமையை இழந்த பெரியவர் மீண்டும் அந்த இளைஞனை தடுத்து நிறுத்தி, ‘தம்பி! உன் வேலை முடிந்து விட்டதா?’ என்றார்.

    ‘நான் மேற்கொண்டிருக்கும் பணி எவ்வளவு பெரியது என்பது உங்களுக்கு தெரியவில்லையா? அவ்வளவு எளிதில் முடிகிற காரியமா அது?’ என்றான் இளைஞன்.

    ‘அது சரி தம்பி! ஆனால் இந்த சிறிய கிளிஞ்சலில் நீர் எடுத்து வந்து மணலில் கொட்டுவதனால், ஏழைகள் எப்படி பணக்காரர்களாக மாறுவார்கள்?’ என்றார் பெரியவர்.

    ‘பெரியவரே! சமுத்திரத்திற்கு கடல் என்பதை போலவே, ரத்னாகரம் என்ற பெயரும் உண்டு என்பது உங்களுக்கு தெரிந்திருக்குமே! கடலில் முத்து, பவளம், நவரத்தினங்கள் போன்ற விலை உயர்ந்த பொருட்கள் கிடைப்பதால் இந்த பெயர் வந்தது. கடல் நீரை கிளிஞ்சலில் எடுத்து வந்து மணலில் கொட்டி விட்டால், கடல் நீர் வற்றிவிடும். பின்னர் கடலில் இருக்கும் விலை உயர்ந்த பொருட்களை எடுத்து ஏழைகளுக்கு கொடுத்து, அவர்களை பணக்காரர்களாக மாற்றிவிடலாம் அல்லவா?. அதற்காகத்தான் நான் போராடிக் கொண்டிருக்கிறேன்’ என்றான்.

    சிரிப்பை அடக்க முடியவில்லை பெரியவருக்கு. எவ்வளவு நேரம் சிரித்தார் என்பதே தெரியவில்லை. இடை இடையே ‘கடலை வற்ற வைப்பது முடிகிற காரியமா? முட்டாள்தனமாக இருக்கிறதே!’ என்றும் கூறிக்கொண்டார். வயிறு வலி எடுத்ததும் தான் கொஞ்சம் கொஞ்சமாக சிரிப்பை நிறுத்தினார்.

    அவர் சிரிப்பை நிறுத்தியதும், ‘ஐயா! நீங்கள் ஏதோ ஆழ்ந்த யோசனையில் இருந்தீர்களே! எது பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தீர்கள்?’ என்று கேட்டான் இளைஞன்.

    அதற்கு, ‘நான் கடவுளைப் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தேன்’ என்றார் பெரியவர். இப்போது சிரிப்புச் சத்தம் இளைஞனிடம் இருந்து, பெரியவர் சிரித்ததை விட பலமாக வெளிப்பட்டது.

    பெரியவருக்கு எரிச்சல் ஏற்பட்டது. ‘எதற்காக சிரிக்கிறாய்?’ என்றார்.

    ‘சிறிய கிளிஞ்சலில் தண்ணீர் எடுத்து வந்து மணலில் கொட்டினால் கடல் வற்றிவிடுமா? என்று கூறுகிறீர்கள். கடவுளைப் பற்றிய உங்களின் ஆராய்ச்சியும் அது போன்றதுதான். மனிதர்களின் சிறு அறிவினால் கடவுளையும், அவனது குணங்களையும் அளவிட்டு விட முடியுமா என்ன?. சாத்தியம் என்று நீங்கள் கூறினால், கடவுளை ஆராயும் உங்கள் வேலை முடிவதற்குள், நான் என் வேலையை முடித்து விடுவேன்’ என்றான் இளைஞன்.
    Next Story
    ×