search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவிலில் ராகு பெயர்ச்சி விழா 27-ந் தேதி நடக்கிறது
    X

    திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவிலில் ராகு பெயர்ச்சி விழா 27-ந் தேதி நடக்கிறது

    தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவிலில் ராகு பெயர்ச்சி விழா வருகிற 27-ந் தேதி நடக்கிறது.
    தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் நாகநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நாகநாதர், பிறையணி அம்மன், கிரிகுஜாம்பிகை ஆகியோர் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். வெளிப்பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் ராகுபகவான் தனது இருதேவியர்களான நாககன்னி, நாகவள்ளி ஆகியோருடன் எழுந்தளியுள்ளார். இந்த கோவிலில் ராகுபகவான், நாகநாதசுவாமியை வழிபட்டதாக புராண வரலாற்றில் கூறப்பட்டுள்ளது.

    சுசீல முனிவரின் குழந்தையை அரவாகிய ராகு தீண்டியதால் ராகுவிற்கு சாபம் ஏற்பட்டது. இந்த சாபம் நிவர்த்தி பெற ராகுபகவான் நான்கு தலங்களுக்கு சென்று வழிபட்டு நிறைவாக திருநாகேஸ்வரத்தில் அருள்பாலிக்கின்ற நாகநாதசுவாமியை மகா சிவராத்திரி நாளில் வழிபட்டு சாபம் நீங்க பெற்றார். சிவபெருமான், ராகுவே என் அருள் பெற்ற நீ என்னை வழிபட்டு பிறகு உன்னை வணங்கும் அடியார்களுக்கு உன்னால் ஏற்படக்கூடிய காலசர்ப்பதோஷம், சர்ப்பதோஷம், களத்திரதோஷம், புத்திரதோஷம் ஆகியவைகளை நீக்கி அருள்பாலிக்க வேண்டும் என பணித்தார்.



    அதுபோலவே ராகு பகவானும் மங்கள ராகுவாக தன்னை வணங்கும் அடியார்களுக்கு மேற்கூறிய தோஷங்களை நீக்கி நிருதி மூலையில் அமர்ந்து அருள்பாலிக்கிறார். ராகுவின் மேனியில் பாலாபிஷேகம் செய்யும்போது பாலானது நீலநிறமாக மாறுவது தனிச்சிறப்பாகும். பல்வேறு சிறப்புகள் பெற்ற நாகநாதர் கோவிலில் வருகிற 27-ந்தேதி (வியாழக்கிழமை) மதியம் 12.48 மணிக்கு ராகுபகவான் சிம்ம ராசியில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இதையொட்டி மேஷம், மிதுனம், கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்ளலாம்.

    ராகு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு ராகு பகவானுக்கு 21-ந் தேதி முதல் 24-ந்தேதி வரை முதல் கட்ட லட்சார்ச்சனையும், 31-ந் தேதி முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 3-ந் தேதி வரை 2-ம் கட்ட லட்சார்ச்சனையும் நடைபெறுகிறது. 25-ந்தேதி மாலை 6 மணிக்கு ராகு பகவானுக்கு முதல்கால யாகபூஜை தொடங்குகிறது. 26-ந் தேதி காலையில் 2-ம் கால யாக பூஜை, மாலையில் 3-ம் கால யாக பூஜை நடைபெறுகின்றன. 27-ந் தேதி காலை 10 மணிக்கு 4-ம் கால யாக பூஜை நடைபெறுகிறது.

    விழாவினையொட்டி சிறப்பு ஹோமங்கள், தயிர் பள்ளயம், சந்தனகாப்பு அலங்காரம், அன்னதானம் மற்றும் இன்னிசை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் இ.ஜீவானந்தம், தக்கார் சு.ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×