search icon
என் மலர்tooltip icon

  ஆன்மிகம்

  சீரடி சாய்பாபாவின் செல்லக் குழந்தை
  X

  சீரடி சாய்பாபாவின் செல்லக் குழந்தை

  சாய்பாபாவின் செல்லக் குழந்தை என்பதால் ரேகே புகழ் இன்றும் சீரடியில் பேசப்படுகிறது. இது குறித்து இன்று விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
  கலியுகக் கண்கண்ட தெய்வம், சீரடி சாய்பாபாவின் அருள் பார்வை தங்கள் மீது படாதா என்று லட்சக்கணக்கான பக்தர்கள் ஏங்கி தவித்தது உண்டு. அவர் அருகில் போய் அஞ்சு நிமிடம் உட்கார்ந்து விட மாட்டோமா என்று எத்தனையோ பேர் முயன்றதுண்டு. ஆனால் பாபா யாருக்கு, எப்படி ஆசி வழங்குவார் என்பதை யாராலும் யூகிக்கவே இயலாது. அதே சமயத்தில் அவர் பார்வையில் இருந்து யாரும் தப்பவும் இயலாது.

  சிலரை கனவில் சென்று பேசி, சீரடிக்கு வருமாறு அழைத்து ஆசி வழங்குவார். இந்தூரைச் சேர்ந்த எம்.பி. ரேகே என்பவரையும் பாபா அப்படித்தான் கனவில் தொடர்பு கொண்டு சீரடிக்கு வரவழைத்தார். அவரது முழுப் பெயர் மேகச்யாம் பகவந்த் ராவ் ரேகே. வசதியான குடும்பத்தில் பிறந்த அவர் நல்ல அறிவாளி. மிகச் சிறப்பாக கல்வி கற்று இந்தூர் கோர்ட்டில் நீதிபதி பதவியைப் பெற்று பணிபுரிந்தார்.

  தனது 22-வது வயதில் அவரது கனவில் சாய்பாபா தோன்றி அழைத்தார். சில நாட்கள் கழித்து ரேகே சீரடி சென்றார். துவாரகமாயி மசூதிக்குள் அவர் நுழைந்து சாய்பாபாவை கண்ட மறு வினாடி இந்த உலகையே ரேகே மறந்தார். சர்வமும் பாபாவே என்பதை நொடியில் உணர்ந்தார்.

  கண்களில் இருந்து தாரை, தாரையாக கண்ணீர் வழிந்தோட அவர் நேராக சென்று பாபா பாதங்களில் தலை வைத்து வணங்கினார். உடனே பாபா சிரித்துக் கொண்டே, “மனிதனை வணங்கலாமா?” என்றார். ரேகேக்கு தூக்கி வாரி போட்டது. ஏனெனில் ரேகே அடிக்கடி “மனிதனை மனிதன் வணங்கக் கூடாது” என்று கூறியபடி இருப்பார். தனது பேச்சை கூட பாபா இங்கிருந்தபடியே கண்காணித்து இருக்கிறாரே என்று நினைத்தபோது ரேகேக்கு சிரிப்பு ஏற்பட்டது.

  மசூதிக்கு வெளியில் வந்து யோசித்தப்படியே இருந்தார். பக்தர்கள் கூட்டம் குறைந்தது. பாபா தனிமையில் இருப்பது தெரிந்தது. ரேகே மீண்டும் பாபாவிடம் சென்றார். அவரை புன்னகையோடு வரவேற்ற பாபா, “ நீ என் குழந்தை” என்றார்.

  இதைக் கேட்டதும் மசூதியில் இருந்த அனைவருக்கும் ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. ஏனெனில் சாய்பாபா தம் வாழ்நாளில் யாரையும் “குழந்தை” என்று சொன்னதே இல்லை. அந்த தனித்துவமான சிறப்பு ரேகேக்கு மட்டுமே கிடைத்தது. அன்று முதல் எல்லாம் ரேகேயை- பாபாவின் செல்லக் குழந்தை என்று அழைக்கத் தொடங்கினார்கள்.

  வெளியூர்களில் இருந்து தன்னைத் தேடி வரும் பக்தர்களை தன் நம்பிக்கைக்குரியவர்களின் வீடுகளுக்கு அனுப்பி தங்க வைப்பது பாபாவின் பழக்கமாகும். ரேகேயை அவர் ராதாகிருஷ்ண ஆயி என்பவர் வீட்டில் தங்க வைத்தார். ராதாகிருஷ்ண ஆயியை பாபா தம் தாயாகவே பாவித்து நடத்தி வந்தார். எனவே அவர் வீட்டுக்கு ரேகே அனுப்பப்பட்டதால் அவர் மீதான மதிப்பு உயர்ந்தது.  ராதாகிருஷ்ண ஆயியும் ரேகேயும் தினமும் பாபா மீதான பக்திப்பாடல்களைப் பாடுவார்கள். சாய் நாமத்தை சொல்லி இருவரும் ஜெபம் செய்வார்கள். இதன் காரணமாக பாபாவுடன் ரேகே இரண்டற கலந்திருந்தார். ரேகே மனதுக்குள் என்ன நினைத்தாலும் மறுவினாடி அது பாபாவுக்கு தெரிந்து விடும். ஏராளமான சம்பவங்கள் இதற்கு உதாரணங்களாக உள்ளன.

  ஒருநாள் பாபா அருகில் ரேகே அமர்ந்திருந்தார். அப்போது ஒரு பக்தர் செவ்வாழைப் பழங்களை கொண்டு வந்து கொடுத்து ஆசி பெற்று சென்றார். செவ்வாழைப் பழங்கள் என்றால் ரேகேக்கு மிகவும் பிடிக்கும். பாபா எப்படியும் அதில் ஒரு பழத்தையாவது தனக்கு தருவார் என்று ரேகே மனதுக்குள் நினைத்துக் கொண்டார். சிறிது நேரத்தில் பாபா செவ்வாழை பழத்தை உரித்தார். பழத்தை தாம் தின்று விட்டு தோலை ரேகேயிடம் கொடுத்து சாப்பிட சொன்னார்.

  ரேகே திக்கி திணறி சாப்பிட்டார். பாபா விடவில்லை. மற்ற செவ்வாழை பழங்களையும் உரித்து, பழத்தை மற்ற பக்தர்களிடம் கொடுத்து விட்டு தோலை மட்டும் ரேகேயிடம் கொடுத்து சாப்பிட வைத்தார். கடைசி பழத்தை எடுத்த அவர் அதை ஒரு கடி கடித்து விட்டு மறு பகுதியை ரேகேயிடம் கொடுத்தார். ரேகே ஆனந்த கண்ணீர் வடித்தார். அப்போது அவரைப் பார்த்து பாபா, “எந்த ஒரு பொருள் மீதும் அளவு கடந்த அதிக ஆசை வைக்காதே” என்றார்.

  மற்றொரு தடவை பவுர்ணமி தினத்தன்று பாபாவை தரிசனம் செய்ய ரேகே வந்திருந்தார். எல்லா பக்தர்களும் பாபாவுக்கு அடுத்தடுத்து மாலை அணிவித்து வணங்கியபோது, ச்சே மலர் மாலை வாங்காமல் வந்து விட்டோமே என்று அவர் மனதுக்குள் தன்னைத் தானே நொந்து கொண்டார். அப்போது தலை உயர்த்தி பார்த்த பாபா, ரேகேயை தம் அருகில் அழைத்தார். “மாலை கொண்டு வரவில்லையே என்று வருத்தப்படாதே என் கழுத்தில் போடப்பட்டுள்ள மாலைகள் அத்தனையும் உனக்குதான் சொந்தம்” என்றார்.

  பாபா தன் மீது கொண்டுள்ள இந்த பாசத்தை எண்ணி, எண்ணி ரேகே கண்ணீர் விட்டார். பாபாவிடம் அனுமதி பெற்று ஊர் திரும்பிய அவர் மீண்டும் சில நாட்களிலேயே சீரடிக்கு வந்து விட்டார். கையோடு அவர் ஒரு காமிராவையும் எடுத்து வந்திருந்தார். மசூதியில் அமர்ந்திருந்த பாபாவிடம் உரிய அனுமதி கேட்காமலே அவர் போட்டோ எடுத்தார். பாபாவை விதம், விதமான கோணங்களில் படம் எடுத்துத் தள்ளினார்.

  அப்போது ரேகேயை அழைத்த பாபா, “என்ன செய்தாய்?” என்று கேட்டார். அதற்கு ரேகே போட்டோ பிடித்ததாக கூறினார். கலகலவென சிரித்த பாபா, “என்னை இந்த சிறிய பெட்டிக்குள் எப்படி உன்னால் அடக்க முடியும்?” என்றார். அப்போது அதை உணராத ரேகே மும்பை சென்று லேப்பில் கொடுத்து படச்சுருளை கழுவிய போதுதான் உணர்ந்தார். ஒரு போட்டோவில் கூட பாபாவின் உருவம் பதிவாகவில்லை.  பாபா அருகில் இருந்த அனைவரும் போட்டோக்களில் தெளிவாக இருந்தனர். ஆனால் பாபா இருந்த இடம் மட்டும் வெள்ளையாக இருந்தது. ஒரே ஒரு போட்டோவில் மட்டும் பாபாவின் பாதம் மட்டும் தெரிந்தது. அதை கண்ட ரேகே, “நம்மை பாபா செல்லக் குழந்தையாக ஏற்றுக் கொண்டிருப்பதால் இந்த பாத தரிசனத்தையாவது தந்து இருக்கிறார் என்று புரிந்து கொண்டார்.

  மீண்டும் சீரடி சென்றதும் இதுபற்றி அவர் பாபாவிடமே கேட்டார். அப்போது பாபா அவரிடம், “நீ படம் பிடித்துதான் என்னைக் காண வேண்டும் என்ற அவசியம் இல்லை. உனக்குத் தேவை என்றால் என்னை உன் உள்ளத்தில் வைத்து பூஜித்து பார்க்க வேண்டும்” என்றார். பாபாவின் இந்த அறிவுரைகளை எல்லாம் தன் மனதில் ஆழமாக பதிவு செய்து கொண்ட ரேகே அதன் பிறகு பாபாவை சோதித்துப் பார்த்ததே இல்லை.

  1916-ம் ஆண்டு ரேகே சீரடிக்கு சென்றிருந்தார். அப்போது அவரை அழைத்த பாபா, “என் கஜானா காலி இப்போது உன்னிடம் உள்ளது. உனக்கு எவ்வளவு வேண்டுமோ எடுத்துக் கொள். அல்லது உனக்கு வேறு என்ன வேண்டுமானாலும் கேள். நான் தருகிறேன்” என்றார். உடனே ரேகே, “பாபா, எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நான் உங்கள் அருகிலேயே இருக்க வேண்டும். உங்களை விட்டு நான் ஒரு போதும் பிரியக் கூடாது. இந்த வரத்தை நீங்கள் எனக்குத் தாருங்கள்” என்றார்.

  பாபா மிகவும் மகிழ்ச்சி அடைந்து, “ நீ எதுவாக இருந்தாலும் சரி... என்னவாக இருந்தாலும் சரி.... உன்னுடன் நான் இருப்பேன்” என்றார். அவ்வாறே ரேகேவுடன் பாபா இருந்தார். 1918-ம் ஆண்டு பாபா மகாசமாதி அடைந்த பிறகு கூட ரேகே மூலம் பாபா பல அற்புதங்களை நிகழ்த்தினார்.

  நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து சாய்பாபா புகழைப் பரப்பினார். சென்னைக்கும் ரேகே வந்து நீண்ட நாட்கள் தங்கி இருந்தார். “பாபா என்னிடம் தன் மனம் மூலம் பேசுவதுண்டு. சில சமயம் நான் வீட்டில் இருக்கும்போது, பாபா கூப்பிடுவது போல இருக்கும். உடனே நான் துவாரகமாயி மசூதிக்கு ஓடிச் சென்று பார்ப்பேன். அங்கு பாபா என் வருகைக்காகவே உட்கார்ந்திருப்பார். அவர் கடவுள் அவதாரம் என்பதற்கு இதை விட வேறு என்ன ஆதாரம் வேண்டும்.

  பாபா எந்த சமயத்திலும் சிக்காதவர். அவர் சமயங்களுக்குள் பேதமற்ற பார்வையைக் கொண்டிருந்தார். இவ்வாறு பாபாவை நன்கு உணர்ந்திருந்த ரேகே 1971-ம் ஆண்டு மரணம் அடைந்தார். அவர் தந்து சென்ற தகவல்களும் குறிப்புகளும் சாய்பாபா பற்றி அறிந்து கொள்ள இன்றும் உதவியாக உள்ளன.

  பாபாவின் செல்லக் குழந்தை என்பதால் ரேகே புகழ் இன்றும் சீரடியில் பேசப்படுகிறது.
  Next Story
  ×