என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    `பாகுபலி-2' படத்திற்கு அடுத்த படியாக அமீர்கான் நடிப்பில் வெளியான `தங்கல்' படமும் ரூ.1000 கோடி வசூல் சாதனை படைத்து வரலாற்று சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளது.
    எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா முன்னணி வேடத்தில் நடித்து வெளியாகிய `பாகுபலி-2' இந்திய சினிமாவில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியான இப்படம் தற்போது வரை ரூ.1250 கோடி வசூல் செய்துள்ளது. இந்திய சினிமாவிலேயே ரூ.1000 கோடியை தாண்டிய முதல் படம் என்ற பெருமையையும் `பாகுபலி-2' பெற்றிருந்தது. இந்தியாவில் மட்டும் `பாகுபலி-2'-ன் வசூல் ரூ.900 கோடியை எதிர்நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

    இந்நிலையில், நித்தேஷ் திவாரி இயக்கத்தில் அமீர்கான் நடிப்பில் உருவாகியிருந்த `தங்கல்' படம், ரூ.1000 கோடியை தாண்டி இந்திய சினிமாவில் வரலாற்று சாதனை படைத்திருக்கிறது.

    அமீர்கான் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான `தங்கல்' சுமார் ரூ.800 கோடியை வசூலித்திருந்த நிலையில், டப் செய்யப்பட்டு கடந்த வாரம் சீனாவில் ரிலீஸ் செய்யப்பட்டது. இதில் சீனா மக்களால் விரும்பி பார்க்கப்பட்ட இப்படம் வசூலில் அடுத்த மைல்கல்லை எட்டி வரலாற்று சாதனை படைத்திருக்கிறது.



    சீனாவில் வெளியாகிய ஒரே வாரத்தில் `தங்கல்' சுமார் ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து இப்படத்தின் மொத்த வசூல் ரூ.1026 கோடியாக உயர்ந்துள்ளது. இதையடுத்து ரூ.1000 கோடி வசூலை தாண்டிய இரண்டாவது இந்திய படம் என்ற பெருமையை `தங்கல்' படம் பெற்றுள்ளது.

    விமர்சகர்கள் மத்தியில் பாராட்டுக்களைப் பெற்ற இப்படம் இந்தியாவில் மட்டும் ரூ.375 கோடிகளை வசூலித்திருந்தது.
    ‘குக்கூ’ படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த மாளவிகா நாயர், சினிமாவில் நடித்தாலும் தொடர்ந்து படிப்பேன் என்று கூறியிருக்கிறார்.
    ‘குக்கூ’ படத்தில் பார்வையற்ற பெண்ணாக நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் மாளவிகா நாயர். பின்னர் சினிமாவை விட்டுவிட்டு படிக்கச் சென்று விட்டார்.

    இந்நிலையில் தற்போது மீண்டும் தமிழ் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ என்ற படத்தில் வீரா ஜோடியாக நடிக்கிறார்.

    இப்படத்தை அவினாஷ் ஹரிகரன் இயக்குகிறார். மீண்டும் நடிக்க வந்திருப்பது பற்றி கூறிய மாளவிகா நாயர், “எங்கள் குடும்பத்தில் எல்லோரும் படித்து நல்ல உத்தியோகத்தில் இருக்கிறார்கள். எனக்கும் படிப்பில் ஆர்வம் அதிகம். நான் ஏற்கனவே நடித்த படங்கள் அனைத்தும் கோடை விடுமுறை நாளில் நடித்தவைதான்.



    ‘குக்கூ’ படம் நான் 10-வது வகுப்பு விடுமுறையின்போது நடித்தது. அடுத்து பிளஸ்-1, பிளஸ்-2 படிப்பு முக்கியமானது. எனவே, நடிப்புக்கு இடைவெளி விட்டு படிக்கச் சென்று விட்டேன். இப்போது பிளஸ்-2 எழுதி விட்டு ரிசல்ட்டுக்காக காத்திருக்கிறேன். கோடை விடுமுறை என்பதால் படத்தில் நடிக்கிறேன். இனி கல்லூரிக்கு குறிப்பிட்ட நாட்கள் சென்றால் போதும். அந்த நாட்கள் தவிர மற்ற நாட்களில் நடிப்பேன்” என்றார்.

    சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் `விவேகம்' படத்தின் டீசர் 1 கோடி பார்வையாளர்களை பெற்று புதிய சாதனை படைத்திருக்கிறது.
    `சிறுத்தை' சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் `விவேகம்' படத்தின் டீசர் புதிய மைல்கல்லை எட்டி தமிழ் சினிமாவில் புதிய சாதனை படைத்துள்ளது. கடந்த வியாழனன்று(11.5.17) நள்ளிரவு 12.01-க்கு வெளியான `விவேகம்' படத்தின் டீசர் வெளியான 12 மணிநேரத்திலேயே முதலிடத்தில் இருந்த `கபாலி' படத்தின் டீசர் சாதனையை முறியடித்திருந்தது.

    இந்நிலையில், டீசர் வெளியாகிய 68 மணிநேரத்தில் 1 கோடி (10 மில்லியன்) பார்வையாளர்களை பெற்று புதிய சாதனையையும் படைத்திருக்கிறது. `கபாலி' டீசர் வெளியாகி 3 நாட்களில் படைத்த சாதனையை `விவேகம்' டீசர் 68 மணிநேரத்திலேயே படைத்திருப்பது அஜித் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.



    அதுமட்டுமல்லாமல் அஜித் பட டீசர் 1 கோடி பார்வையாளர்களை பெற்றிருப்பது இதுவே முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. அஜித் நடித்துள்ள படங்களிலேயே அதிக பொருட்செலவில் உருவாகி இருக்கும் படமும் இதுதான்.

    ஹாலிவுட் தரத்தில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இப்படத்தின் டீசர், அதிக பார்வையாளர்களை பெற்றிருப்பதற்கு சிவாவின் இயக்கமும், அஜித்தின் லுக், ஸ்டைல், வசனங்கள், அனிருத்தின் பின்னணி இசை, ருபனின் எடிட்டிங் என விவேகம் பட கூட்டணியின் பிரம்மாண்டமே காரணம் என்று கூறுகிறார்கள்.



    விவேகம் ஓபராய், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கிறது.
    பாதுகாப்பு பணிகளின் போது வீரமரணம் அடைந்த சி.ஆர்.பி.எப். வீரர்களின் குடும்பத்துக்கு 25 வீடுகளை நடிகர் விவேக் ஓபராய் வழங்கினார்
    புதுடெல்லி:

    பாதுகாப்பு பணிகளின் போது வீரமரணம் அடையும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரின் (சி.ஆர்.பி.எப்.) குடும்பத்தினருக்கு உதவ நன்கொடைகளை அளிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மத்திய அரசின் இந்த அழைப்பை ஏற்று பல்வேறு பிரபலங்கள் உதவிகளை வழங்கி வருகின்றனர். அதன்படி இந்தி நடிகர் விவேக் ஓபராய், 25 வீடுகள் கொண்ட 2 அடுக்குமாடி குடியிருப்பை வழங்கி உள்ளார். மும்பை அருகே உள்ள தானேயில் கட்டப்பட்டு உள்ள இந்த வீடுகள் வீரமரணம் அடைந்த சி.ஆர்.பி.எப். வீரர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    இதில் 3 வீடுகள், சமீபத்தில் சத்தீஷ்காரில் நடந்த நக்சலைட்டு தாக்குதலில் கொல்லப்பட்ட 3 வீரர்களின் குடும்பத்துக்கு வழங்கப்பட்டது. மீதமுள்ள வீடுகளுக்கும் பயனாளிகள் பட்டியலை இறுதி செய்து வருவதாக கூறியுள்ள சி.ஆர்.பி.எப். அதிகாரிகள், இந்த வீடுகள் தானேயில் உள்ளதால், மராட்டியத்தை சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை அளிப்பதாக தெரிவித்தார். இந்த வீடுகளை வழங்கியதற்காக நடிகர் விவேக் ஓபராய்க்கு சி.ஆர்.பி.எப். நன்றி தெரிவித்து உள்ளது.

    முன்னதாக மற்றொரு இந்தி நடிகர் அக்‌ஷய் குமார், சத்தீஷ்கார் தாக்குதலில் உயிரிழந்த 12 வீரர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.9 லட்சம் வீதம் வழங்கினார். இதைப்போல பிரபல பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலும் தலா ரூ.50 ஆயிரம் வழங்கி இருந்தார். 
    இசை அமைப்பின்போது, இளையராஜாவிடம் இருந்த திறமை, ஞாபகசக்தி ஆகியவற்றைக் கண்டு ஜி.கே.வெங்கடேஷ் வியப்படைந்தார்.
    இசை அமைப்பின்போது, இளையராஜாவிடம் இருந்த திறமை, ஞாபகசக்தி ஆகியவற்றைக் கண்டு ஜி.கே.வெங்கடேஷ் வியப்படைந்தார்.

    பல்வேறு வாத்தியங்களை இசைக்க, தன்ராஜ் மாஸ்டரிடம் இளையராஜா பயிற்சி பெற்று வந்த காலக்கட்டம் அது.

    அப்போது நடந்த நிகழ்ச்சி பற்றி இளையராஜா கூறியதாவது:-

    "ஒருநாள் ஜி.கே.வெங்கடேஷிடம் இருந்து ஒருவர் வந்தார். இசை `கம்போஸ்' செய்ய என்னை அழைத்து வருமாறு ஜி.கே.வி. கூறியிருப்பதாக, அவர் தன்ராஜ் மாஸ்டரிடம் கூறினார்.

    மாஸ்டர் என்னைப் பார்த்து, "கோடம்பாக்கம் போறியா?'' என்று கேட்டார்.

    "நீங்க போகச்சொன்னா போகிறேன் சார்!'' என்றேன்.

    "அங்கே போனா, மிïசிக் போயிடும். உருப்பட மாட்டானுங்க!'' என்று கூறிய மாஸ்டர் "உன்னை அப்படி நினைக்கவில்லை. போய் வா!'' என்றார்.

    அவர் முழு மனதுடன் என்னை வாழ்த்தி அனுப்ப வேண்டும் என்று நினைத்தேன். "பாடல் பதிவு நடந்த அன்றைக்கு, என்னை மிïசிக் டைரக்டர் என்று ஜி.கே.வி.க்கு அறிமுகம் செய்து வைத்தீர்கள். அதனால்தான் என்னை அவர் அழைத்திருக்கிறார்'' என்றேன்.

    "சரி, போயிட்டு வா!'' என்றார், மாஸ்டர்.

    ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு படக்கம்பெனிக்கு என்னை அழைத்துச் சென்றார்கள். அங்கே ஜி.கே.வெங்கடேஷ், `தபேலா' கன்னையா, தயாரிப்பாளரும் டைரக்டருமான பகவான்துரை ஆகியோர் இருந்தனர்.

    ஆபீஸ் நடுவில், ஒரு ஜமுக்காளத்தில் ஹார்மோனியம், தபேலாவுடன் நாங்கள் உட்கார்ந்திருந்தோம். ராஜ்குமார் நடிக்கும் "கோவாவில் சி.ஐ.டி. 999'' என்ற கன்னடப்படத்தில் வரும் பாடலுக்கான காட்சியை டைரக்டர் விவரித்தார்.

    "ட்ïனை கம்போஸ் செய்து வையுங்கள். எங்களுக்கு வேலை இருக்கிறது. மாலையில் வந்து டிïனை கேட்கிறோம்'' என்று கூறிவிட்டு டைரக்டர் போய்விட்டார்.

    பாடலை ஜி.கே.வெங்கடேஷ் கம்போஸ் செய்யத் தொடங்கியபோது, "ஸ்வரத்தை நோட்ஸ் எழுதிக்கோ!'' என்று என்னிடம் கூறினார்.

    "ஸ்வரம் எல்லாம் எனக்குத் தெரியாது சார்!'' என்றேன்.

    "பின்னே எப்படி ஆர்மோனியம் வாசிச்சே?'' என்று கேட்டார், ஜி.கே.வி.

    "அதெல்லாம் மனப்பாடம் செஞ்சது'' என்றேன்.

    "காதடியா?'' என்று கேட்டார், ஜி.கே.வி.

    (ஸ்வரம் தெரியாமல், காதில் கேட்பதை வைத்து வாசித்தால், அதற்குப் பெயர் "காதடி'')

    "இப்படியெல்லாம் வாத்தியம் இல்லாமல் நீ வரவேண்டாம். மாஸ்டர் ரூமில் இருந்து கிட்டார் எடுத்து வா!'' என்று ஜி.கே.வி. கூறினார்.

    கிட்டார் வாசித்து ஏற்கனவே எனக்குக் கொஞ்சம் பழக்கம் இருந்ததால், மதியம் மாஸ்டர் ரூமில் இருந்த கிட்டார்களில் ஒன்றை, மாஸ்டரிடம் கேட்டு வாங்கி வந்தேன். ஜி.கே.வி. முன் போய் நின்றேன்.

    "டேய்! நீ ஸ்வரம் எல்லாம் எழுதவில்லை என்றால், நான் கம்போஸ் பண்ணினதை நீ எப்படி திரும்ப எனக்குச் சொல்ல முடியும்?'' என்று ஜி.கே.வி. கேட்டார்.

    "சார்! எனக்கு ட்ïனை இரண்டு தடவை கேட்டா மனப்பாடம் ஆயிடும். அப்படியே திரும்பச் சொல்லிடுவேன்!'' என்றேன்.

    "அதெல்லாம் சரிப்படாது!'' என்று கூறிய ஜி.கே.வி., பிறகு "சரி. பார்க்கலாம்'' என்று சொல்லிவிட்டு, ட்ïன்களை கம்போஸ் செய்யத் தொடங்கினார். கிடுகிடுவென்று, பத்து ட்ïன்களை கம்போஸ் செய்து விட்டார்.

    அதற்குள் டைரக்டர் பகவான்துரை வந்துவிட்டார். "வெங்கடேஷ்! ட்ïன்களைப் போடுங்கள், கேட்போம்!'' என்றார்.

    "முதல் ட்ïன் எது?'' என்று என்னிடம் கேட்டார், ஜி.கே.வி.

    நான் பாடினேன். உடனே அதை ஞாபகப்படுத்திக்கொண்டு ஜி.கே.வி. பாடிக்காட்டினார்.

    "இரண்டாவது ட்ïன்?'' என்று ஜி.கே.வி. கேட்க, அதைப் பாடினேன்.

    இப்படியே மூன்றாவது, நான்காவது என்று, பத்து ட்ïன்களையும் நான் ஞாபகத்தைக்கொண்டே பாடிக்காட்டினேன். ஜி.கே.வி.க்கு ஒரே ஆச்சரியம்! தபேலா கன்னையாவைப் பார்த்து, "என்னடா இவன்!'' என்று சொல்லிவிட்டு, என்னைப் பார்த்து, "நீ என்ன, டேப் ரிக்கார்டரா?'' என்று கேட்டார்.

    சிறிய டேப் ரிக்கார்டர் வராத காலம் அது.

    ஜி.கே.வி. ஆச்சரியம் தீராதவராக பகவான் துரையைப் பார்த்து, "துரை! இந்தப் பையனைப் பாருங்க!'' என்றார்.

    "ஆமாம், ஆமாம். ஆச்சரியமாகத்தான் இருக்கு!'' என்றார், பகவான் துரை.

    அவர் கன்னடக்காரராக இருந்தாலும் தெளிவாகத் தமிழில் பேசினார்.

    "வெங்கடேஷ்! இது நம் படத்தில் நீச்சல் குளத்தில் ஒரு பெண் நீச்சல் உடையில் பாடுகிற பாட்டு! நீங்கள் மூன்றாவதாக போட்டிருக்கும் ட்ïன் ரொம்ப நல்லா இருக்கு...'' என்று பகவான் துரை கூற, "அப்ப, அதையே வச்சுக்கலாம்'' என்றார், ஜி.கே.வெங்கடேஷ்.

    பிறகு அவர் என்னிடம், "நீ இப்படியே காலத்தை ஓட்டிவிடலாம் என்று நினைக்காதே. நீதான் இந்தப் பாடலுக்கு உரிய ஸ்வரங்களை வாத்தியம் வாசிப்பவர்களுக்கு சொல்லணும்'' என்றார்.

    அன்றிரவு எனக்கு தூக்கம் வரவில்லை. `இங்கேதான் ட்ïன் தொடங்குகிறது. இதுதான் ஸட்ஜமாக இருக்க வேண்டும். இதுதான் ரி...க...ம...ப...த..நி... என்று, ஒவ்வொரு ஸ்வரமாகத் தேடிக் கண்டுபிடித்து, அதை நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்தேன்.

    எல்லாம் சரியாக இருந்தது.

    பிறகு பாடலை எல்.ஆர்.ஈஸ்வரி பாட, கோல்டன் ஸ்டூடியோவில் ரெக்கார்டிங் நடந்தது.''

    இவ் வாறு இளையராஜா கூறினார்.
    அடையாள அட்டை இருந்தால் மட்டுமே ரஜினிகாந்தை சந்தித்து போட்டோ எடுக்க முடியும் என்று அகில இந்திய ரஜினிகாந்த் தலைமை ரசிகர் நற்பணி மன்றம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
    நடிகர் ரஜினிகாந்த் வருகிற 15-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை ரசிகர்களை சந்திக்கிறார்.

    முதல் கட்டமாக 15 மாவட்டங்களில் உள்ள ரஜினி ரசிகர்களை வரவழைத்து அவர்களுடன் தனித்தனியாக புகைப்படம் எடுக்க ரஜினி திட்டமிட்டுள்ளார். 15-ந்தேதி முதல் தினமும் 3 மாவட்ட ரசிகர்கள் வீதம் 5 நாட்களில் 15 மாவட்ட ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்.

    சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

    ரஜினியை சந்திக்கும் ரசிகர்களுக்கு மாவட்ட வாரியாக அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. யார் எந்த நாளில் ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற தகவலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    இதன்படி அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டும் குறிப்பிட்ட நாளில் சென்னை வந்து ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும். அடையாள அட்டை இல்லாதவர்கள் நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு வர வேண்டாம் என்று வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அகில இந்திய ரஜினிகாந்த் தலைமை ரசிகர் நற்பணி மன்ற நிர்வாகிகள் வி.எம்.சுதாகர், சிவராம கிருஷ்ணன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அன்புத் தலைவர் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள், மதிப் பிற்குரிய ரஜினிகாந்த்துடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள மாவட்ட வாரியாக மன்ற உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை உள்ளவர்களுக்கு மட்டும்தான் அனுமதி. அடை யாள அட்டை இல்லாதவர்கள் கண்டிப்பாக மண்டபத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். வந்து ஏமாற்றம் அடைய வேண்டாம். அன்பு டன் ஒத்துழைக்கவும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் - அகஷய் குமார் - ஏமி ஜாக்சன் நடித்துவரும் `2.0' படம் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
    ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2010-ல் வெளியான `எந்திரன்' படத்தின் இரண்டாவது பாகமான `2.0' படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்து வருகிறார். இந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் உருவாகி வரும் `2.0' படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பாக ராஜு மகாலிங்கம் சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.

    பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். எமி ஜாக்சன் கதாநாயகியாக நடித்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வரும் இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 25-ல் வெளியாக இருக்கிறது.



    நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகரித்து வரும் இப்படத்தின், டப்பிங் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் `2.0' படத்தில் தனது காட்சிகளை நடித்து முடித்துவிட்டு தற்போது, டப்பிங் பணிகளில் இறங்கி இருப்பதாக புதிய தகவல் ஒன்று கிடைத்திருக்கிறது. மேலும் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    `3டி' வடிவிலும் வெளிவர இருக்கும் இப்படத்தை, ஐமேக்ஸ் திரையரங்கிலும் வெளியிட படக்குழு யோசித்து வருகிறது.

    அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் விஜய் 61 படத்தில் ரகசியமாக வைக்கப்பட்ட விஜய்யின் மூன்றாவது கதாபாத்திரம் என்ன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
    விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் பெயரிடப்படாத படம் ஒன்றில் நடித்து வருகிறார். சென்னை, மதுரையில் படமாக்கப்பட்ட இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஐரோப்பாவில் நடந்து வருகிறது.

    இப்படத்தில் மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கும் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் நடித்து வருகின்றனர். மேலும், சத்யராஜ், வடிவேலு, சத்யன் உள்ளிட்டோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இயக்குநரும், நருகருமான எஸ்.ஜே.சூர்யா இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். இந்நிலையில் ஹரீஷ் பேரடியும் இப்படத்தில் இணைந்திருக்கிறார்.

    ஆக நட்சத்திரப் பட்டாளமே களமிறங்கி இருக்கும் இப்படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100-வது படமாக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு `இசைப்புயல்' ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.



    இதில் விஜய் நடிக்கும் மூன்று கதாபாத்திரங்களில் ஊர் தலைவர், மருத்துவர் என்ற இரு கதாபாத்திரங்கள் குறித்த தகவல் நாம் அறிந்ததே. இந்நிலையில், விஜய்யின் மூன்றாவது கதாபாத்திரம் என்னவென்பது ரகசியமாக வைக்கப்பட்டிருந்த நிலையில், அந்த கதாபாத்திரம் குறித்த தகவலும் தற்போது கசிந்துள்ளது. அதாவது மூன்றாவது கதாபாத்திரத்தில் விஜய் ஒரு மேஜிக் கலைஞராக நடித்து வருகிறாராம். இந்த மேஜிக் விஜய்க்கு சமந்தா ஜோடி என்றும் கூறப்படுகிறது.

    விஜய் 61 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வருகிற ஜுன் 22-ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து படம் தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது.
    நடிகை ஸ்ருதியின் புகைப்படங்கள் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் போலீஸ் கமிஷனர் பிரவீன் சூட்டை நேரில் சந்தித்து புகார் கொடுத்துள்ளார்.
    கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் ஸ்ருதி ஹரிகரண். இவர், கன்னடத்தில் தாரக், யுர்வி, ஹேப்பி நியூ இயர், விஸ்மயா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இதுதவிர தமிழில் ‘நெருங்கி வா முத்தமிடாதே‘ என்ற படத்திலும், மலையாள படங்களிலும் நடிகை ஸ்ருதி நடித்திருக்கிறார்.

    இந்த நிலையில், நடிகை ஸ்ருதியின் புகைப் படங்களை ஆபாசமாக சித்தரித்து சில மர்மநபர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருந்தார்கள். இதுபற்றி அறிந்த நடிகை ஸ்ருதி அதிர்ச்சியும், ஆதங்கமும் அடைந்தார். இந்த நிலையில், நேற்று காலையில் பெங்களூரு போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நடிகை ஸ்ருதி வந்தார்.



    பின்னர் அவர், போலீஸ் கமிஷனர் பிரவீன் சூட்டை சந்தித்து தனது புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் மர்மநபர்கள் வெளியிட்டு இருப்பதாகவும், அவர்களை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் கொடுத்தார். அந்த புகாரை போலீஸ் கமிஷனர் பிரவீன் சூட் பெற்றுக் கொண்டார்.

    இந்த நிலையில், போலீஸ் கமிஷனரின் உத்தரவின் பேரில் நடிகை ஸ்ருதியின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அந்த மர்மநபர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். நடிகை ஸ்ருதியின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    அஞ்சல் நிலைய பின்னணியில் சந்தோஷ் பிரதாப் நடிப்பில் சமூக கருத்தை சொல்லும் ‘தபால்காரன்’ படத்தின் முன்னோட்டம்.
    ஸ்ரீவீனஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் வி.எஸ்.பாலமுருகன் தயாரிக்கும் படம் ‘தபால் காரன்’

    இந்த படத்தில் சந்தோஷ் பிரதாப் நாயகனாக நடிக்கிறார். நிஹாரிகா நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ‘லொள்ளு சபா’ சாமிநாதன். ஞான சம்பந்தன். டெல்லிகணேஷ், முனீஷ்காந்த், ‘எங்கேயும் எப்போதும்‘ வினோதினி, ரேகாசுரேஷ் ஆகியோர் நடிக் கிறார்கள்.

    ஒளிப்பதிவு- ஜி.செல்வ குமார், இசை- நீரோ பிரபா கரன், எடிட்டிங் - சங்கர்.

    இயக்கம்- டி.உதயகுமார் இவர் இயக்குனர் ராஜ் மோகனின் உதவியாளர். தெலுங்கு இயக்குநர் கிரிஷிடமும் பணியாற்றியவர்.



    படம் பற்றி கூறிய இயக்குனர்...

    “இது ஒரு அஞ்சல் நிலையத்தின் பின்னணியில் உருவாகும் படம்.

    வெளிநாடு போகிற கனவில் இருக்கும் நாயகனுக்கு அரசு வேலை கிடைக்கிறது. வேண்டா வெறுப்பாக அந்த வேலையில் சேர்கிறான். அங்கு அவனுக்கு பல தவறுகள் தென்படுகின்றன. அதனால் பல முதியோர் பாதிக்கப்படுகின்றனர். அந்தச் சவாலை எதிர்கொண்டு எப்படி தீர்வு காண்கிறான் என்பதே கதை.

    இந்த படத்தில் காதல், காமெடி, சென்டிமெண்ட் எல்லாம் இருக்கும். இது ஒரு முழுநீள கமர்சியல் படம், பொழுதுபோக்குடன் சமூகக் கருத்தும் சொல்லும் படம்” என்றார்.

    இந்த படத்தின் தொடக்க விழா பூஜை போரூரில் நடைபெற்றது.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனான சந்திப்பு குறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் விளக்கமளித்துள்ளார்.
    சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தென்னிந்திய நடிகர் சங்க செயலாளரும், திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவருமான நடிகர் விஷால், தியேட்டர் அதிபர்கள் சங்க நிர்வாகிகள் அபிராமி ராமநாதன், பன்னீர்செல்வம், நடிகர் பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் சந்தித்து பேசினர். பின்னர் வெளியில் வந்த நடிகர் விஷால் நிருபர்களிடம் கூறியதாவது:-

    படப்பிடிப்பின் போதும், திரைப்படங்களை வெளியிடும் போதும் சில பிரச்சினைகளை சந்திக்க வேண்டியது உள்ளது. இதனால் படம் வெளியாவதில் தாமதமும், தயாரிப்பாளர்களுக்கு நஷ்டமும் ஏற்படுகிறது. இந்த பிரச்சினையில் தமிழக அரசு தலையிட்டு உரிய தீர்வுகாண வேண்டும் என்று முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைத்தோம்.

    ஜூன் மாதம் முதல் தமிழகத்தில் ஜி.எஸ்.டி. மசோதா அமல்படுத்தப்பட உள்ளது. இதனால் திரைப்படத்துறைக்கும் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதுபற்றியும் முதல்- அமைச்சரிடம் விரிவாக விவாதித்தோம். புதிய திரைப்படங்கள் வெளியாகும் நாளிலேயே இணையதளங்களில் அந்த படங்களை திருட்டுத்தனமாக வெளியிட்டு விடுகிறார்கள்.



    இதை தடுக்க அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய படங்களின் திருட்டு சி.டி.க்கள் அதிக அளவில் தயாரிக்கப்படுகின்றன. இதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சரை கேட்டுக்கொண்டோம்.

    சிறிய அளவிலான பட்ஜெட் படங்கள் தயாரிப்பதற்கு அரசால் வழங்கப்படும் மானியத்தொகை சமீபகாலமாக வழங்கப்படாமல் உள்ளது. அதை வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கடந்த 7 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள தமிழக அரசு திரைப்பட விருதை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டோம்.

    எங்கள் கோரிக்கைகளை கனிவுடன் கேட்ட முதல்- அமைச்சர் அவற்றின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கே.ஜி.வீரமணி இயக்கத்தில் ஜெய ஆனந்த் - ரஹானா இணைந்து நடித்திருக்கும் `திறப்பு விழா' படத்தின் விமர்சனம்.
    நடிகை ரஹானா அவளது அப்பாவான ஜி.எம்.குமாருடன் ஒரு கிராமத்தில் வாழ்ந்து வருகிறாள். மறுபுறத்தில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான அப்பாவால் தனது குடும்பத்தை இழந்த நாயகன் ஜெயஆனந்த், அவனது சொந்த ஊரில் உள்ள மதுபானக் கடையில் வேலைக்கு வருகிறான்.

    குடிப்பழக்கத்தை வெறுக்கும் நாயகன், குடியால் ஆங்காங்கே மயங்கி விழுந்துக் கிடக்கும் குடிமகன்களின் வீட்டிற்கு தகவல் தெரிவித்து, தேவையான பண உதவிகளையும் செய்கிறார். இவ்வாறு தனக்கென ஒரு கொள்கையுடன் வாழ்ந்து வரும் ஜெயஆனந்தின் மீது நாயகி ரஹானாவுக்கு காதல் வருகிறது. நாயகன் மீதான தனது காதலை அவரிடம் தெரிவித்த போது, அவளை காதலிக்க ஜெய ஆனந்த் மறுப்பு தெரிவிக்கிறார்.

    இதுஒருபுறம் இருக்க அந்த மதுபானக் கடையின், பார்களில் போலி மதுபான விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இது நாயகனுக்கு தெரிய வர, அதனை எதிர்த்து போராடும் ஜெய ஆனந்த் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கிறார். இவரது போக்கு பிடிக்காத போலி மதுபான கும்பல் இவரை போலீசில் சிக்க வைக்கிறது.



    போலீசும் போலி மதுபான கும்பலுக்கு ஆதரவாக ஜெயஆனந்த்தை கைது செய்து மிரட்டி அனுப்புகிறது. இந்நிலையில், தனது மகளின் மனதை புரிந்து கொண்ட ரஹானாவின் தந்தை ஜி.எம்.குமார், அவளை திருமணம் செய்து கொள்ளும்படி நாயகனிடம் கேட்கிறார். தனக்கென சில கொள்ளைகள் இருப்பதாக கூறி மறுப்பு தெரிவிக்கும் ஜெயஆனந்த், பின்னர் ஜி.எம்.குமார் குடிப்பதை நிறுத்தினால் தான் நாயகியை திருமணம் செய்து கொள்வதாக தெரிவிக்கிறார்.

    நாயகனின் கோரிக்கையை ஏற்கும் ஜி.எம்.குமார் கடைசியாக ஒரு முறை குடிப்பதாக கூறி, தனது நண்பர்களுக்கும் மது வாங்கிக் கொடுக்கிறார். அந்த மதுவில் மர்ம கும்பல் போலி மதுபானத்தை கலந்து வைக்கிறது. அதனை குடித்த நாயகியின் தந்தை உள்பட பலரும் உயிரிழந்து விடுவதால், மறுபடியும் ஜெயஆனந்தை போலீசார் கைது செய்கின்றனர்.



    பின்னர் இந்த பிரச்சனையில் இருந்து மீண்டு வரும் நாயகன், தனது கொள்கையான அந்த மதுபானக் கடையை மூட என்ன செய்தார்? மதுபானக் கடையை மூடுவதற்காக நாயகனுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளித்தார்களா? மதுபானக் கடைக்கு மூடுவிழா நடந்ததா? நாயகன் - நாயகி என்ன ஆனார்கள் என்பது படத்தின் மீதிக்கதை.

    புதுமுக நாயகன் ஜெயஆனந்த் தனது முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மதுக்கடைக்கு எதிராக போராடும் ஒரு இளைஞனாக அவரது துடிப்பு படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. நாயகி ரஹானா தனது கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் நின்றிருக்கிறார். அவரது இயல்பான நடிப்பு ரசிக்கும்படி இருக்கிறது.

    குடிகாரர்களாக ஜி.எம்குமார், பசங்க சிவக்குமார் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். மற்றபடி பாவா லஷ்மன், முனிஸ், விஜய் சந்தர், கவிதா பாலாஜி, ரெங்கநாயகி என அனைவரும் அவரவர் கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை சிறப்பாக அளித்திருக்கின்னறர்.



    தற்போதைய சூழலின் முக்கிய பிரச்சனையாக கருதப்படும் மதுபானக் கடையால் ஏற்படும் பாதிப்பு, மதுப்பிரியர்களால் அவர்களது குடும்பத்திற்கு ஏற்படும் பிரச்சனையை சிறப்பாக திரையில் காட்டியிக்கிறார் படத்தின் இயக்குநர் கே.ஜி.வீரமணி. மது, மதுக்கடையால் ஏற்படும் பிரச்சனையை சுளிப்பு இல்லாமல் சிறப்பாக இயக்கிப்பதற்காக வீரமணிக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்ளலாம். நிலம் என்பவரின் வசனங்கள் படத்திற்கு மேலும் பலத்தை கூட்டியிருக்கிறது. மதுவுக்கு அடிமையாகி குடும்பத்தை இழக்காமல், தனது மனைவி, குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதை படத்தின் இந்த மூலம் உணர்த்தி இருக்கின்றனர். குடி குடியை கெடுக்கும், குடிப்பழக்கம் உடல்நலத்தை கெடுக்கும் என்பதற்கு சாட்சியாக தற்போது நடந்து வரும் போராட்டங்களுக்கு மத்தியில், மதுவுக்கு எதிராக இப்படம் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    ஆர்.பி.செல்வா ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது. படத்தின் பின்னணி இசையில் வசந்தரமேஸ் முயற்சிக்கு பலன் கிடைத்திருக்கிறது.

    மொத்தத்தில் `திறப்பு விழா' மதுபானக்கடையின் மூடு விழா.
    ×