என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    ஹாஜி மஸ்தானை தவறாக சித்தரித்து படம் எடுக்கக்கூடாது என அவரது வளர்ப்பு மகன், நடிகர் ரஜினிகாந்துக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
    மும்பையில் பிரபல தாதாவாக விளங்கியவர் ஹாஜி மஸ்தான். இவரது வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் கதையம்சம் கொண்ட படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கப்போவதாக தகவல் வெளியானது.

    இந்த நிலையில் பாரதீய சிறுபான்மையினர் பாதுகாப்பு கட்சியின் தலைவர் சுந்தர் சேகர் நடிகர் ரஜினிகாந்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    பாரதீய சிறுபான்மையினர் பாதுகாப்பு கட்சியின் நிறுவனரான நான், ஹாஜி மஸ்தானின் வளர்ப்பு மகன். சமீபத்தில் பத்திரிகைகள் மூலமாக, நீங்கள் இயக்குனர் ரஞ்சித்துடன் இணைந்து எனது தந்தையின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க உள்ளதை தெரிந்துகொண்டேன். நீங்கள் எனது தந்தையை கடத்தல்காரர், நிழல் உலக தாதா போல சித்தரித்து படம் எடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. எனது தந்தையை தவறாக சித்தரித்து படம் எடுப்பதை எதிர்க்கிறேன்.



    ஹாஜி மஸ்தான் கடத்தல், தாதா வழக்குகளில் குற்றவாளி என எந்த ஒரு இந்திய நீதிமன்றமும் தீர்ப்பு அளிக்கவில்லை. அப்படி இருக்கையில் அவரை நிழல் உலக தாதா, கடத்தல்காரர் என அழைப்பதோ, சித்தரிப்பதோ அவரது நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும்.

    நாங்கள் 2 பேரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். சிறுவயதில் இருந்து நான் அவருடன் இருந்தேன். அவர் என்னை சொந்த மகனாகவே வளர்த்தார். ஆனால் மதம் மாறும்படி ஒருநாளும் என்னை வற்புறுத்தியது இல்லை. அவர் எங்கு, எப்போது சென்றாலும் நான் அவருடன் செல்வேன். என்னைப்போல வேறு யாரும் அவருடன் நெருங்கி பழகியது கிடையாது.

    நீங்கள் ஹாஜி மஸ்தானின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க விரும்புகிறீர்கள் என்றால் நான் உங்களுக்கு அவரை பற்றி சொல்கிறேன். எனக்கும் அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. நான் தயாரிப்பாளர் சங்கத்தில் வாழ்நாள் உறுப்பினராக உள்ளேன்.

    ஹாஜி மஸ்தானுக்கு மிகப்பெரிய அரசியல் பின்புலம் உண்டு. நிழல் உலக தாதா, கடத்தல்காரர் என அவரை தவறாக சித்தரிப்பவர்கள் மீது அவரது ஆதரவாளர்கள் கோபத்தில் உள்ளனர். நீங்கள் ஹாஜி மஸ்தானை தவறாக சித்தரிக்கும் வகையில் படம் எடுத்தால் உங்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரவியதற்கு எதிர்ப்பு தெரிவித்து `விவேகம்' பட எடிட்டர் ரூபன் குறிப்பிட்ட தளங்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
    சிறுத்தை சிவா - தல அஜித் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் `விவேகம்'. அஜித் நடித்த படங்களிலேயே பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டு வரும் படமும் `விவேகம்' தான். இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. படப்பிடிப்பு பெரும்பாலும் வெளிநாடுகளிலேயே படமாக்கப்பட்டிருக்கிறது.

    ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கும் இப்படத்தின் டீசர் நேற்று முன்தினம் நள்ளிரவில் இணையதளங்களில் வெளியிடப்பட்டது. ஆனால் அதற்கு முன்னதாகவே படத்தின் டீசர் சமூக வலைதளங்களில் வெளியாகி படக்குழுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் படத்தின் டீசரை எடிட்டர் ரூபனின் உதவியாளர் தான் கசியவிட்டார் என்று சில இணையதளங்களில் கிசுகிசுக்கப்பட்டது. இந்த தகவல் ரூபனுக்கு தெரிய வர, அதனை மறுத்த அவர், இந்த தகவலை வெளியிட்ட செய்தி நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார். இதுகுறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்ததாவது,



    "`விவேகம்' படத்தில் எனது குழுவில் யார் யார் பணியாற்றுகிறார்கள் என்று தெரியுமா? தவறான தகவல்களை பரப்பாதீர்கள், பரப்பினால் என் பெயரை பயன்படுத்தியதாக சட்ட நடவடிக்கை எடுப்பேன்" என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார். மேலும் நாளுக்கு நாள் சமூக வலைதளங்களின் போக்கு எங்கோ சென்று கொண்டிருக்கிறது. "வேண்டாத, தகாத தகவல்களை பரப்பும் மீடியா நண்பர்களே, நீங்கள் செய்திகளை பதிவு செய்வதற்கு முன்பாக கொஞ்சம் யோசியுங்கள்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

    ரூபனின் டுவிட்டை பார்த்த அந்த செய்தி நிறுவனம் மன்னிப்பு கேட்டு, அந்த பொய்யான தகவலை அழித்துவிட்டதாக குறிப்பிட்டிருக்கிறது.
    இந்தி நடிகர் அர்பாஸ்கான்-நடிகை மலைக்கா அரோரா தம்பதிக்கு விவாகரத்து வழங்கி மும்பை பாந்திரா குடும்ப நல கோர்ட்டு உத்தரவிட்டது.
    பிரபல இந்தி நடிகர் சல்மான்கானின் சகோதரர் அர்பாஸ்கான். நடிகரும், தயாரிப்பாளருமான இவர், 1998-ம் ஆண்டு நடிகை மலைக்கா அரோரா மீது காதல் வயப்பட்டார். இதையடுத்து இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு அர்கான் என்ற மகன் உள்ளான்.

    நட்சத்திர தம்பதிகளான இவர்களது திருமண வாழ்க்கையில் திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்து விவாகரத்து கேட்டு கடந்த ஆண்டு மும்பை குடும்பநல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.



    இந்த வழக்கில் அவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டு, 6 மாதம் அவகாசம் அளிக்கப்பட்டது. இதில் ஒருமித்த கருத்து ஏற்படாததால் பாந்திரா குடும்பநல கோர்ட்டில் இவர்களது மனு மீண்டும் விசாரணைக்கு ஏற்கப்பட்டது.

    இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது அர்பாஸ்கான் மற்றும் மலைக்கா அரோரா ஆகியோர் தங்களது வக்கீல்களுடன் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்மிதா சாவாஸ்கர், விசாரணை நிறைவில் இருவருக்கும் பரஸ்பர சம்மதத்தின் பேரில் விவாகரத்து வழங்கி தீர்ப்பு அளித்தார்.
    என்னை ராசி இல்லாத நடிகை என்று ஒதுக்கினார்கள். படங்கள் தோல்வி அடைவதற்கு கதைதான் காரணம் என்று நடிகை டாப்சி கூறியுள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியை பார்க்கலாம்.
    நடிகை டாப்சி அளித்த பேட்டி வருமாறு:-

    “நான் தமிழ், தெலுங்கு மொழிகளில் நிறைய படங்களில் நடித்து விட்டேன். ஐதராபாத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இரு மொழி படங்களிலும் நடித்து வந்தேன். சொந்தமாக வீடு வாங்கவும் திட்டமிட்டேன். ஆனால் வணிக படங்கள் அமையாததால் நான் நடித்த பல படங்கள் தோல்வி அடைந்து விட்டன.

    இதனால் என்னை ராசி இல்லாத நடிகை என்று முத்திரை குத்தி ஒதுக்கினார்கள். வருத்தமாக இருந்தது. நடிப்பது மட்டும்தான் எனது வேலை. படம் தோல்வி அடைவதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்? நல்ல கதை, திரைக்கதையாக இருந்தால் ஓடும். இல்லாவிட்டால் ஓடாது. கதைக்கும் நடிகையான எனக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது.

    ஆனாலும் நஷ்டத்துக்கு என்னை முழு பொறுப்பாக்கி விட்டு அவர்கள் தப்பித்தனர். சம்பளமும் குறைவாகவே தந்தார்கள். இவற்றை மற்றவர்களிடம் சொல்ல முடியாமல் எனக்குள்ளேயே வைத்து மன அழுத்தத்துக்கு உள்ளாகி தவித்தேன். குடும்பத்தினர்தான் ஆறுதலாக இருந்தார்கள்.



    அதன்பிறகு இந்திக்கு போனேன். அங்கு எனக்கு நல்ல கதைகள் அமைந்தன. நான் நடித்த தேவி, பிங்க், நாம் சபானா போன்ற படங்கள் நன்றாக ஓடி பெயர் வாங்கி கொடுத்தன. இப்போது இந்தியில் பட வாய்ப்புகள் குவிகிறது. தற்போது பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சத்தில் நிறைய படங்கள் வருகின்றன.

    இந்த மாற்றத்துக்கு ரசிகர்கள்தான் காரணம். அவர்கள் நிறைய ஹாலிவுட் படங்கள் பார்க்க ஆரம்பித்து விட்டனர். அவர்களால்தான் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்கள் அதிகம் தயாராகின்றன. இது நல்ல வளர்ச்சி. சினிமா துறைக்கு பெண்கள் அதிகமாக வர ஆரம்பித்து இருக்கிறார்கள்.

    நான் அவர்களுக்கு சொல்லும் அறிவுரை என்னவென்றால் நீங்கள் யாரையும் சார்ந்து இருக்க கூடாது. அம்மா, அப்பா, அண்ணன்கள் துணைக்கு வரவேண்டும் என்று எதிர்பார்க்க கூடாது. உங்கள் தேவைகளை நீங்களே கவனித்துக்கொள்ள வேண்டும். எந்த பிரச்சினைகளையும் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும்”.

    இவ்வாறு டாப்சி கூறினார்.
    விஜய் பிறந்தநாளான வருகிற ஜுன் 22-ஆம் தேதி விஜய் 61 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அதேநாளில் விஜய் படம் குறித்த முக்கிய தகவலும் அதே நாளில் வெளியாகிறது.
    விஜய் தற்போது அட்லி இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். சென்னை, மதுரையில் படமாக்கப்பட்ட நிலையில், இந்த படத்தின் முக்கிய படப்பிடிப்பு தற்போது ஐரோப்பாவில் நடந்து வருகிறது.

    இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோர் நடித்து வருகின்றனர். மேலும், சத்யராஜ், வடிவேலு, சத்யன் உள்ளிட்டோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.
    இந்நிலையில் இந்த கூட்டணியில் மற்றொரு வில்லன் நடிகரும் இணைந்திருக்கிறார். `ஆண்டவன் கட்டளை' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஹரீஷ் பேரடி விஜயின் 61-வது படத்தில் இணைந்திருக்கிறார்.



    ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100-வது படமாக தயாரித்து வரும் இப்படத்திற்கு `இசைப்புயல்' ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.

    படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வருகிற ஜுன் 22-ஆம் தேதி வெளியிடப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அதேநாளில் விஜய் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் மற்றொரு அறிவிப்பும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, விஜய்யின் 62-வது படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

    அந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விஜய் பிறந்தநாளில் வெளியானால் விஜய் ரசிகர்களுக்கு அது இரட்டை விருந்தாகும். 
    நடிகை ரம்யாகிருஷ்ணன் குறித்து பரவி வந்த வதந்தி குறித்து அவரே விளக்கம் அளித்திருக்கிறார்.
    ரம்யா கிருஷ்ணன் மகனுடன் சென்னையில் வசிக்கிறார். இவருடைய கணவர் இயக்குனர் வம்சி ஐதராபாத்தில் இருக்கிறார். இதனால் இருவரும் பிரிந்து விட்டார்கள் என்று வதந்தி கிளம்பியது. இதற்கு பதில் அளித்துள்ள ரம்யா கிருஷ்ணன், “ கணவர் தெலுங்கு படம் இயக்குவதால் ஐதாராபாத்தில் இருக்கிறார்.

    நான் டி.வி. தொடர்களில் நடிக்க வசதியாக சென்னையில் வசிக்கிறேன். நேரம் கிடைக்கும் போது கணவர் சென்னை வருவார். அல்லது நான் அங்கு செல்வேன். ஒரே நேரத்தில் விடுமுறை கிடைத்தால் குடும்பத்துடன் சுற்றுலா செல்வோம். நாங்கள் மகிழ்ச்சியாகவே இருக்கிறோம்” என்று கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

    அந்த முத்தக் காட்சியை மட்டும் மறக்கவே முடியாது என்று கயல் படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகமான சந்திரன் தெரிவித்துள்ளார்.
    பிரபுசாலமன் இயக்கிய ‘கயல்’ படத்தில் அறிமுகமானவர் சந்திரன். தற்போது . ‘ரூபாய்’, ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ படங்களில் நடிக்கிறார். ‘கிரகணம்’ படத்தில் கிருஷ்ணாவுடன் இணைந்து இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடித்திருக்கிறார்.

    இதில் கயல் சந்திரன் ‘பாசிட்டிவ்’ வேடத்திலும், கிருஷ்ணா ‘நெகட்டிவ்’ வேடத்திலும் நடித்திருக்கிறார்கள். சந்திரன் ஜோடியாக நந்தினி ராய் நடித்துள்ளார். இவர்களுக்கு காதல் காட்சி இருக்கிறது. முத்தக்காட்சி கிடையாது.



    ஆனால் இதில் நகைச்சுவை வேடத்தில் நடித்துள்ள சிங்கப்பூர் தீபனுக்கும், கயல்சந்திரனுக்கும் இடையே உதட் டோடு உதடு இணையும் முத்தக்காட்சி உள்ளது.

    இது பற்றி கூறிய கயல் சந்திரன்....

    பெரும்பாலும் நாயகன், நாயகி இடையே தான் முத்தக் காட்சிகள் இருக்கும். இந்த படத்தில் நகைச்சுவை நடிகர் சிங்கப்பூர் திலீபனுடன் முத்தக்காட்சியில் நடித்திருக்கிறேன். அதுவும், உதட்டு முத்தக்காட்சி. இது நான் சினிமாவுக்கு வந்த பிறகு நடந்த முதல் முத்த காட்சி.எனவே எனக்கு இது மறக்க முடியாத முத்தக்காட்சியாக அமைந்து விட்டது” என்றார்.
    எழில் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் - ரெஜினா கசாண்ட்ரா - ஸ்ருஷ்டி டாங்கே - சூரி நடிப்பில் உருவாகியுள்ள `சரவணன் இருக்க பயமேன்' படத்தின் விமர்சனம்.
    டெல்லியை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தேசியக் கட்சி ஒன்றில் முக்கிய பொறுப்பில் இருக்கும் மதன் பாப் பிரியானியில் சிக்கன் பீஸ் இல்லாத காரணத்தால் கட்சியில் இருந்து விலகி புதிய கட்சியை தொடங்குகிறார். அந்த  கட்சியில் தமிழக தலைமைப் பொறுப்புக்கு சூரி பொறுப்பேற்கிறார். மறுபுறத்தில் வேலை இல்லாமல் ஊர் சுற்றித் திரியும் நாயகன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது நண்பன் யோகி பாபு, சூரியுடன் அந்த கட்சியில் இணைகின்றனர்.

    பின்னர் போஸ்டர் அடிக்கும் பிரச்சனை ஒன்றில் சூரிக்கும், அதே ஊரிலேயே அரசியல்வாதியாக இருக்கும் மன்சூர் அலிகானுக்கும் இடையே புதிய பிரச்சினை ஒன்று கிளம்ப, சூரியை கொல்லப்போவதாக மன்சூர் அலி கான் மிரட்டுகிறார். இதனால் பயப்பிராந்திக்கு உள்ளாகும் சூரி தலைமறைவாகி, பின்னர் உதயநிதியின் அறிவுரைப்படி துபாய்க்கு செல்கிறார்.

    இந்த இடைவெளியில் உதயநிதி கட்சியை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல, இந்த தகவல் மதன்பாப்புக்கு தெரிய வருகிறது. இதையடுத்து கட்சியின் தலைவராக உதயநிதி நியமிக்கப்படுகிறார்.



    இந்நிலையில், சிறிய வயதில் ஊரை விட்டு சென்ற நாயகனின் தோழியும், தனது எதிரியுமான ரெஜினா, மீண்டும்  உதயநிதி இருக்கும் ஊருக்கு வருகிறார். இருவரும் மீண்டும் சண்டைப்பிடிக்கிறார்கள். எனினும் ரெஜினாவை பார்த்த உடனேயே உதயநிதிக்கு பிடித்து விடுகிறது. அவள் மீது காதல் கொள்கிறார். இந்நிலையில், துபாயில் இருந்து வரும் சூரி, தனது வாழ்க்கையை வீணாக்கியது இவன் தான். இவனை பழிவாங்காமல் விடமாட்டேன் என்று உதயநிதிக்கு எதிராக சூரி களமிறங்க, ரெஜினாவும் சூரியுடன் இணைந்து உதயநிதியை தொல்லை செய்கிறார்.

    இந்த கூட்டணிக்கு எதிராக உதயநிதிக்கு உதவி பண்ணும் விதமாக, உதயநிதியின் முன்னாள் தோழியான, உயிரிழந்த ஸ்ருஷ்டி டாங்கே ஆவியாக வந்து அவருக்கு உதவி செய்கிறார்.

    இறுதியில், ரெஜினா, சூரி கூட்டணி வெற்றி பெற்றதா? ஸ்ருஷ்டி உடன் இணைந்து ரெஜினாவை, உதயநிதி காதலிக்க வைத்தாரா? அவர்களின் அரசியல் பயணம் என்ன ஆனது என்பது படத்தின் மீதிக்கதை.



    முதல்முறையாக உதயநிதி ஸ்டாலின் அரசியல் சாயல் கலந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். காமெடி கலந்த அவரது நடிப்பு ரசிக்கும்படி இருக்கிறது. சண்டைக் காட்சிகளிலும், நடனம் ஆடுவதிலும் முந்தைய படத்தை விட தற்போது மெருகேறி இருக்கிறார்.

    ரெஜினா, படம் முழுக்க ஸ்லீவ்லெஸிலே வந்து ரசிக்க வைக்கிறார். உதயநிதிக்கு எதிராக சூரியுடன் சேர்ந்து ரெஜினா போடும் ஆட்டம் ரசிக்கும் படி இருக்கிறது. ஒரு பாடல் மற்றும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் ஸ்ருஷ்டி டாங்கே அவரது கதாபாத்திரத்திற்கு தேவையானதை பக்காவாக கொடுத்திருக்கிறார்.



    யோகிபாபு எப்போதும் போல தனது தனித்துவமான நகைச்சுவையால் ரசிக்க வைத்திருக்கிறார். குறிப்பாக அவரை பார்க்கும் போதே சிரிப்பு வருகிறது, அந்தளவுக்கு தனது முக பாகுபாடுகளை காட்டுகிறார். காமெடி வில்லனாக நடித்திருக்கும் சூரி இப்படத்தில், உதயநிதிக்கு எதிராக செயல்படுகிறார். மன்சூர் அலி கான் காமெடி கலந்த வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். அவர் வரும் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கின்றன.

    மற்றபடி லிவிங்ஸ்டன், ரோபோ சங்கர், சாம்ஸ், ரவி மரியா என அனைவரும், அவரவர் பங்குக்கு படத்திற்கு பக்க பலமாக இருந்துள்ளனர்.

    கே.ஜி.வெங்கடேசின் ஒளிப்பதிவு தெளிவாக இருக்கிறது. காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. டி.இமானின் பின்னணி இசை ரசிக்கும்படி இருக்கிறது. பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பாடல்களை பார்ப்பதற்கும் ரசிக்கும்படி இருக்கிறது.

    மொத்தத்தில் `சரவணன் இருக்க பயமேன்' காமெடி அரசியல் 
    தமிழ் சினிமாவில் தான் விட்ட இடத்தை கண்டிப்பாக பிடிப்பேன் என்றும், ஜெயிப்பேன் என்றும் சரவணன் இருக்க பயமேன் படத்தில் நடித்திருக்கும் ரெஜினா கூறியிருக்கிறார்.
    சமந்தாவை போலவே ரெஜினாவும் தமிழ்நாட்டில் பிறந்தவர். என்றாலும், தமிழைவிட தெலுங்கு படங்களிலேயே அதிகமான நடித்து இருக்கிறார்.

    சமீபத்தில், ரெஜினா நடித்து வெளியான ‘ மாநகரம்‘ படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத் திருக்கிறது. உதயநிதியுடன் ரெஜினா நடித்துள்ள ‘சரவணன் இருக்க பயமேன்’ படம் திரைக்கு வந்து இருக்கிறது. இது தவிர ‘நெஞ்சம் மறப்பதில்லை’, ‘சிலுக்குவார் பட்டி சிங்கம்’, ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’, ‘ராஜ தந்திரம் -2’ , ஆகிய படங் களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.



    தமிழ்பட வாய்ப்பு குறித்து ரெஜினாவிடம் கேட்ட போது...

    “ தமிழ்நாட்டில் பிறந்த எனக்கு தமிழில் அதிகம் சாதிக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் இருந்தது. இதற்காக பல முயற்சிகள் செய்தேன். சில தமிழ் படங்களில் நடித்தேன். இதில் ‘மாநகரம்’ எனது தமிழ் பட பயணத்தில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. ‘சரவணன் இருக்க பயமேன்’ படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் நடித்தது பெருமையாக இருக்கிறது. அவர் மிகவும் எளிமையான மனிதர். அதிகம் பேசமாட்டார். அவருடைய நகைச்சுவை உணர்வு தனித்தன்மை கொண்டது. அவர் எதை சொன்னாலும் பாசிட்டிவாகவே இருக்கும்.

    நான் எப்போதோ தமிழ் படங்களில் ஜெயித்திருக்க வேண்டும். அதற்கான நாள் தள்ளிக்கொண்டே போனது. இப்போது அந்த வாய்ப்பை கடவுள் தந்திருக்கிறார். தமிழில் விட்ட இடத்தை கண்டிப்பாக பிடிப்பேன், ஜெயிப்பேன்” என்றார்.

    தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாரா பிரம்மாண்ட படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்திருக்கிறார்.
    ‘பாகுபலி’ படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்த சிவகாமி வேடத்துக்கு முதலில் ஸ்ரீதேவியை தான் நடிக்க வைப்பதாக இருந்தது. நீண்ட கால்ஷீட் மற்றும் சில காரணங்களால் அவர் நடிக்கவில்லை. ரம்யா கிருஷ்ணன் நடித்ததால் அந்த வேடம் அவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத்தந்திருக்கிறது.

    இது போல், ‘பாகுபலி’ கதையை எழுதியதும் தேவசேனா பாத்திரத்துக்கு முதலில் நயன்தாராவை நடிக்க வைக்கத்தான் ராஜமவுலி விரும்பியுள்ளார். ஆனால் அந்த நேரத்தில் நயன்தாரா பல படங்களில் நடித்துக்கொண்டு இருந்ததால் ராஜமவுலி கேட்ட தேதிகளில் நயன்தாரா கால்ஷீட் கொடுக்கமுடியவில்லை. இதனால் அனுஷ்கா ஒப்பந்தம் செய்யப்பட்டார். பாகுபலி முதல் பாகத்தில் அனுஷ்காவுக்கும் தமன்னாவுக்கும் சமமான அளவு முக்கியத்துவம் கொடுத்து இருந்தார்.



    ஆனால், ‘பாகுபலி-2’ல் அனுஷ்காவுக்கு அதிக முக்கியத்துவம் கிடைத்தது. இதனால் அவர்நடித்த தேவசேனா பாத்திரம் அதிகமாக பேசப்படுகிறது. இதில் நயன்தாரா நடித்திருந்தால் அவருக்கும் உலக அளவில் தனி இடம் கிடைத்திருக்கும் என்று பேசிக்கொள்கிறார்கள்.
    சக்தி ராஜசேகரன் இயக்கத்தில் கலையரசன் - சாத்னா டைட்டஸ் இணைந்து நடித்திருக்கும் `எய்தவன்' படத்தின் விமர்சனம்.
    சென்னையில் தனது அப்பா வேல ராமமூர்த்தி, அம்மா, தங்கையுடன் வசித்து வருகிறார் நாயகன் கலையரசன். கலையரசனும் அவரது நண்பன் ராஜ்குமாரும் இணைந்து, பணம் எண்ணும் எந்திரத்தை விற்பனை செய்யும் நிறுவனத்தை சொந்தமாக நடத்தி வருகின்றனர். சிறுவயது முதலே கலையரசனின் தங்கையை மருத்துவராக்க வேண்டும் என்று அவரது குடும்பமே ஊக்குவித்து வருகிறது. மறுபக்கம் கலையரசனின் முறைப் பெண்ணான நாயகி சாத்னா டைட்டஸ், போலீஸ் அதிகாரியாக வருகிறார். கலையரசனுடன் பேசுவதற்காகவும், அவருடன் பழகுவதற்காகவும், கலை வசிக்கும் பகுதியிலேயே பணிமாற்றம் கேட்டு வருகிறார்.

    இதில் 12 வகுப்பு இறுதித்தேர்வில் உயர்ந்த மதிப்பெண் எடுத்த தனது தங்கையை, அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்க கலை முயற்சி செய்கிறார். அதற்காக மருத்துவ கவுன்சிலிங்கிற்கும் அழைத்து செல்கிறார். உயர்ந்த மதிப்பெண்கள் எடுத்தும் கலையின் தங்கைக்கு அரசு கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை.



    தனது தங்கையை எப்படியாவது மருத்துவராக்க வேண்டும் என்ற உறுதியுடன் இருக்கும் கலை, பின்னர் சில தனியார் கல்லூரிகளை தொடர்பு கொள்கிறார். பெரும்பாலான கல்லூரிகளில் சீட் வாங்குவதற்கு லஞ்சமாக ஒரு தொகை வசூலிக்கப்படுகிறது. அதன் பின்புலத்தில் இருக்கும் இடைத்தரகர்கள் மருத்துவ சீட்களை விற்று வருகின்றனர். அதில் வசூலிக்கப்படும் பணத்தை கல்லூரி நிர்வாகம் பெற்றுக் கொண்டு சீட் வழங்குகிறது.

    இவ்வாறாக தனது சொந்த நிறுவனத்தின் மூலம் சேகரித்த பணத்துடன், அவருக்கு நெருக்கமானவர்கள் என நடுத்தர வர்க்கத்தினர் பலரும் பணஉதவி செய்ய, தேவையான பணத்தை சேகரிக்கும் கலையரசன், தனது தங்கையை வில்லன் கவுதமின் தனியார் கல்லூரியில் சேர்த்துவிடுகிறார். இதில் கல்லூரியில் சேர்ந்த சில நாட்களிலேயே அந்த கல்லூரியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படுகிறது.



    இதனால் தனது தங்கையின் படிப்பும் நின்று போக, தனது பணத்தையும் இழந்த கலை, பணத்தை கொடுத்த தரகரிடம், பணத்தை திரும்பத் தர சொல்லி முறையிடுகிறார். ஆனால் அந்த தரகர், கலையை போலீஸை வைத்து மிரட்டி அனுப்பி விடுகிறார். கடைசியில் பணத்தை நல்ல முறையில் அவர்களிடம் இருந்து பெறமுடியாத வேதனையில், தனது குடும்பத்துடன் வெளியே செல்கிறார். அந்த சமயம் நேரே வந்த கார் ஒன்று கலையின் தங்கை மீது மோதியதில், அவரது தங்கை சம்பவ இடத்திலேயே பலியாகிறாள். கலையரசன் பணம் கொடுத்த புரோக்கர், அந்த காரில் இருந்து இறங்கி ஓடுகிறான்.

    இதனைப் பார்த்து, கோபத்தின் உச்சிக்கே செல்லும் கலை, அதன் பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள் என்பதை அறிந்து அவர்களை பழிவாங்க துடிக்கிறார். பின்னர் அவர்களை எப்படி தீர்த்துக் கட்டுகிறார்? தனது பணத்தை எப்படி மீட்டார்? இவ்வாறாக கல்லூரிகளில் நடக்கும் ஊழல், அங்கீகாரம் போன்ற பிரச்சனைகளை எப்படி களையெடுக்கிறார் என்பது படத்தின் மீதிக்கதை.

    கலையரசனுக்கு இப்படத்தின் மூலம் ஒரு நல்ல தீனி கிடைத்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். மற்ற படங்களில் நடித்ததைப் போல இல்லாமல், இந்த படத்தில் கலையரசன் ஒரு நல்ல அண்ணனாக, சமூக அக்கறையுள்ள இளைஞனாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். 



    பிச்சைக்காரன் படத்தின் மூலம் பிரபலமான சாத்னா டைட்டஸ், இப்படத்தின் மூலம் முதன்முறையாக போலீஸ் அதிகாரியாக அவதாரம் எடுத்திருக்கிறாரர். போலீஸ் அதிகாரி வேடம் சாத்னாவுக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறது. மேலும் அவரது நடிப்பும் ரசிக்கும்படி இருக்கிறது.

    வில்லனாக வலம் வரும் கவுதம் பணக்காரனுக்கான ஸ்டைலிலும், லுக்கிலும் மிரட்டுகிறார். தனது கல்லூரியை நல்ல நிலைக்கு கொண்டு வர எந்த முயற்சியும் செய்ய தாயராக இருக்கும் அவரது நடிப்பு ரசிக்கும்படி இருக்கிறது. இந்த படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ள கிருஷ்ணா, தனது முதல் படத்திலேயே அனைத்து தரப்பினரையும் கவர்ந்திருக்கிறார். வில்லத்தனமான கதாபாத்திரத்தில், கலையரசனுக்கு துணையாக நிற்கும் அவரது கதாபாத்திரம் படத்திற்கு கூடுதல் பலம். படம் முழுக்க எதிர்மறையான கதாபாத்திரத்தில் வந்து கிருஷ்ணா மிரட்டியிருக்கிறார்.

    ஆடுகளம் நரேன், வேல ராமமூர்த்தி அவர்களது முதிர்ந்த நடிப்பால் ரசிக்க வைத்திருக்கின்றனர். தரகர்களாக வலம் வரும் சரிதிரன், வினோத் என அனைவரும் அவர்களது பங்களிப்பை சிறப்பாக கொடுத்திருக்கின்றனர்.



    மருத்துவ படிப்பில் நடக்கும் ஊழல்கள் குறித்து பல படங்கள் வந்திருந்தாலும், அதனை பிரதிபலிக்காமல் வித்தியாசமான கதைக்களத்தை எடுத்திருக்கும் சக்தி ராஜசேகரன் புதிய முயற்சிக்கு பலன் கிடைத்திருக்கிறது. சமூகத்தில் தற்போது நிலவும் பிரச்சனையை புதிய கண்ணோட்டத்தில் காட்டியிருப்பது படத்திற்கு பலம். அதுவும் பள்ளி பருவத்தை முடித்துவிட்டு கல்லூரியில் சேரவிருக்கும் மாணிகள் சரியான முடிவை எடுக்க வேண்டும் என்பதை இப்படத்தின் மூலம் உணர்த்தியிருக்கிறார். மருத்துவ கவுன்சிலிங் தொடங்கவிருக்கும் வேளையில், இந்த படத்தை ரிலீஸ் செய்திருக்கும் அவரது மனநிலையை பாராட்டலாம். இன்றளவும் கல்லூரிகள் பல அங்கீகாரம் இல்லாமல் இயங்கி வருகிறது. அதில் அதிக கட்டணங்களை செலுத்தி மாணவர்கள் சேர்ந்து படிக்கின்றனர். இவ்வாறு சேரும் மாணவர்கள் சரியான கல்லூரியை தேர்தெடுக்க பெற்றோர் உறுதிணையாக நிற்க வேண்டும்.  இல்லையேல் அவர்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்திப்பார்கள் என்பதை எய்தவன் மூலம் சிறப்பான முறையில் மக்களுக்கு கொண்டு சேர்த்திருக்கிறார் இயக்குநர். படத்தில் வசனங்கள் படத்திற்கு கூடுதல் பலத்தை அளித்திருப்பதுடன் ரசிக்கும்படியும் இருக்கிறது.

    பிரேம் குமாரின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைக்கிறது. பார்த்தவ் பார்கோ பின்னணி இசையில் நல்ல முயற்சி மேற்கொண்டிருக்கிறார். பாடல்களும் ரசிக்கும்படி இருக்கிறது. குறிப்பாக சாண்ட்ரா எமி ஆடியிருக்கும் சிங்காரி என்ற குத்துப்பாடல் பார்ப்பதற்கும், கேட்பதற்கும் ரசிக்கும்படி உள்ளது.

    மொத்தத்தில் `எய்தவன்' மருத்துவத்தின் மறுபக்கம்.
    எஸ்எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா நடிப்பில் வெளியாகி சாதனை படைத்து வரும் `பாகுபலி-2' படத்தின் மூலம் அதிக லாபம் ஈட்டியது யார் தெரியுமா?
    எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் வெளியாகி பிரம்மாண்டான வசூலை குவித்து வரும் படம் `பாகுபலி 2'. கடந்த மாதம் 28-ஆம் தேதி வெளியான இப்படம் இதுவரை ரூ.1227 கோடி வசூலை குவித்து இந்திய சினிமாவில் வரலாற்றுச் சாதனை படைத்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து பல கோடிகளை வசூலித்து ரூ.1500 கோடியை எதிர்நோக்கி பயணித்து வருகிறது.

    பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படத்தை ஆர்கா மீடியா ஒர்க்ஸ் சார்பில் சோபு யார்லகடா, பிரசாத் தேவனேனி ரூ.230 கோடியில் தயாரித்திருந்தனர்.

    இவ்வாறு 5 வருட முயற்சிக்கு பிறகு வெளியான இப்படத்தில் பணியாற்றிய பிரபலங்கள் இப்படத்தின் மூலம் என்ன லாபத்தை பெற்றனர், அவர்களது சம்பளம் எவ்வளவு என்பதை ஊகிக்க முடியுமா? அதனை கீழே பார்ப்போம்.



    5 வருடங்களாக வேறு எந்த படத்திலும் நடிக்காமல் பாகுபலிக்காக தன்னை முழுவதுமாக அர்பணித்த அமரேந்திர பாகுபலி மற்றும் சிவுடு என்ற மகேந்திர பாகுபலியான பிரபாஸீக்கு ரூ.25 கோடி சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    பிரபாஸீக்கு அடுத்தபடியாக, ஒரு ஆக்ரோஷ வில்லனாக அனைவரையும் கவர, தனது உடற்கட்டுக்களை மெருகேற்ற தன்னைத் தானே வருத்திக் கொண்ட பல்லாலதேவனான ராணாவுக்கு ரூ.15 கோடிகள் வழங்கப்பட்டுள்ளதாம்.

    அனுஷ்கா மற்றும் தமன்னா இருவரும் தங்களுடைய கதாபாத்திரங்களுக்கு தலா ரூ.5 கோடியை பெற்றிருக்கின்றனர்.



    இவர்களுக்கு அடுத்தபடியாக ராஜமாதாவாக தன்னுடைய நடிப்பால் அனைவரையும் கவர்ந்த ரம்யா கிருஷ்ணனுக்கு ரூ.2.5 கோடியும், பாகுபலி தொடரின் இணைப்புக்கு ஆதரமாக விளங்கிய கட்டப்பா சத்யராஜுக்கு ரூ.2 கோடியும் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாம்.

    இவர்கள் அனைவரையும் தவிர்த்து, இந்த படம் உருவாக மூளையாக செயல்பட்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலிக்கு ரூ.28 கோடிகள் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், படத்தின் லாபத்தில் மூன்றில் ஒரு பங்கும் அவருக்கு வழங்கப்படுகிறது.

    பாகுபலியின் முதல்பாகம் இந்திய அளவில் பாக்ஸ் ஆபிஸில் ரூ.650 கோடி வரை வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது. பாகுபலி-2 தற்போது வரை ரூ.1227 கோடி வசூல் செய்திருக்கிறது. 
    ×