என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    மகள் நடிகை ஆனது எனக்கு பிடிக்கவில்லை என்று பாலிவுட் நடிகர்களில் ஒருவரான சயீப் அலிகான் தெரிவித்துள்ளார்.
    கரீனாகபூரை 2-வது திருமணம் செய்து இருப்பவர் இந்தி நடிகர் சயீப் அலிகான். இவரது முதல் மனைவி அம்ரிதா சிங்கின் மகள் சாரா சுஷாந்சிங். இவர் ‘ரஜ்புட்’ படம் மூலம் இந்தியில் அறிமுகம் ஆகிறார்.

    மகள் நடிகை ஆனது பிடிக்கவில்லை என்பதை சயீப் அலிகான் இப்படி கூறுகிறார்.

    “சாரா படித்த படிப்புக்கு அமெரிக்காவில் தங்கி வேலை பார்க்கலாம். அதை விட்டு விட்டு நடிக்கும் இந்த பிழைப்பு எதற்கு? அதற்காக நடிப்புத்தொழிலை நான் குறை சொல்லவில்லை.



    நடிப்பு நிலையான தொழில் அல்ல. நடிப்பவர்கள் அனைவரும் எப்போதும் பயத்துடன் வாழும் நிலை உள்ளது. நன்றாக நடித்தாலும் வெற்றி பெற முடியும் என்று கூற முடியாது. நிலையற்ற தன்மை உள்ள இந்த வாழ்க்கையை பிள்ளைகள் தேர்வு செய்ய வேண்டும் என்று எந்த பெற்றோரும் விரும்ப மாட்டார்கள்.

    ஆனால் என் மகள் சாராவுக்கு நடிகையாவது தான் பிடித்து இருக்கிறது. அவர் எது பற்றி கேட்க வேண்டுமானாலும் என்னிடம் கேட்கலாம். நாங்கள் மற்ற வி‌ஷயங்கள் பற்றி பேசுவது போல படங்களை பற்றியும் பேசுகிறோம்”.

    ‘2.ஓ’ படத்தின் போது உதவி இயக்குனரை ரஜினி திகைக்க வைத்த சம்பவம் ஒன்று நடந்தேறியுள்ளது.
    ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘2.ஓ’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் எமி ஜாக்சன், அக்ஷய்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீடு வருகிற தீபாவளி அன்று பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கிறது.

    இந்நிலையில், ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய முரளி மனோகர் என்பவர், ‘2.ஓ’ படத்தின் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ரஜினிக்கும் தனக்கும் நடந்த உரையாடலை தன்னுடைய பேஸ்புக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறும்போது,

    ”முரளி எப்போ டைரக்ட் பண்ணப் போறீங்க..?”- என்ற அவரின் கேள்வியைச் சற்றும் எதிர்பார்க்கவில்லைதான்.

    ”சீக்கிரம் சார்” திக்குமுக்க்காடி, சமாளிப்பாகச் சொன்னேன்.

    “ஸ்க்ரிப்ட் பண்ணிக்கிட்டிருக்கீங்களா..?”- என விடாப்பிடியாகத் தொடர்ந்து கேட்டால் என்னதான் செய்ய முடியும்?!

    “ஆமா சார்...” - என என்னையுமறியாமல் சொல்லி வைத்தேன்!

    “நல்லாப் பண்ணுங்க... (சில நொடிகள் தன் தாடியைத் தடவி யோசித்துவிட்டு) அவசரப் படாதீங்க... உங்க படம் (கர்ண மோட்சம்) நீங்க யாருன்னு சொல்லிருச்சு... ப்பா... இன்னும் அதோட தாக்கம் என்னை விட்டுப் போகலிங்க... சீக்கிரம் பண்ணுங்க” - அச்சு பிசகாத, மிகைப்படுத்தப்படாத அந்த வார்த்தைகள்!



    “சரிங்க சார்” - என மீண்டும் எனக்குள்ளிருந்து தன்னியல்பாக வெளிப்பட்ட குரல்.

    எனக்குள்ள அந்த நொடி என்னன்னா, எளிமையாச் சொல்லணும்னா, சீக்கிரம் பண்றதா, அவசரப்படாதீங்கன்னு சொன்னதைக் கேட்கிறதான்னு தெரியாம புரியாம திகைச்சு நின்ன தருணம்.

    உண்மையா அவர் பேச்சில இருந்த ஒரு அக்கறையை மட்டும் உணர்ந்தேன்! சிலிர்த்தேன்!!

    நன்றிகள் #ரஜினி சார்!

    ஆயிரமாயிரம் நன்றிகள்; என் குருநாதரும், வழிகாட்டியும், படைப்பாற்றலும், எல்லாத்துக்கும் மேல என் நல விரும்பியுமான, #ஷங்கர் சாருக்கு!!!

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
    பிரகாஷ்ராஜ் பற்றி என்னால் குறை கூற முடியவில்லை என்று அவரது இயக்கத்தில் `தட்கா' படத்தில் நடித்து வரும் ஸ்ரேயா கூறியிருக்கிறார்.
    பிரகாஷ்ராஜ் தயாரித்து இயக்கி நடித்த படம் ‘உன் சமையல் அறையில்’. இந்த படத்தை பிரகாஷ்ராஜ் இந்தியிலும் தயாரித்து இயக்குகிறார். ஆனால் நடிக்கவில்லை.

    தமிழில் இவர் நடித்த வேடத்தில் நானா படேகர் நடிக்கிறார். சினேகா நடித்த பாத்திரத்தில் ஸ்ரேயா நடிக்கிறார். ‘தட்கா’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த இந்தி படத்தில் அலிபாசல், டாப்ஸி உள்பட பலர் நடிக்கிறார்கள்.



    ‘உன் சமையல் அறையில்’ படத்துக்கு இசை அமைத்த இளையராஜாதான் ‘தட்கா’ இந்தி படத்துக்கும் இசை அமைக்கிறார். பிரகாஷ்ராஜ் இயக்கத்தில் இந்த படத்தில் நடிப்பது குறித்து கூறிய ஸ்ரேயா, “நானும் பிரகாஷ்ராஜும் சேர்ந்து படங்களில் நடித்த போது, அந்த படங்களின் டைரக்டரை எங்களுக்குள் குறை சொல்லி பேசிக் கொள்வோம். இப்போது நான் நடிக்கும் படத்தில் பிரகாஷ்ராஜ் இயக்குனராக இருப்பதால் என்னால் அவரை குறை கூறவோ, அவர் பற்றி புகார் செய்யவோ முடியவில்லை. இந்த படத்தில் பணிபுரியும் துணை இயக்குனர்கள் அனைவரையும் எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது” என்றார்.
    `பாகுபலி-2' படத்தை தொடர்ந்து நடிகர் ராணா தெலுங்கு பட உலகின் முன்னணி இயக்குநர்களுள் ஒருவரான சுதாகர் இயக்கத்தில் மீண்டும் சரித்திரப் படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
    எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வசூலை குவித்து வரும் படம் `பாகுபலி-2'. `பாகுபலி' படத்தின் தொடர்ச்சியாக வெளியான `பாகுபலி-2' ரசிகர்களிடையே ஏகோபத்திய வரவேற்பை பெற்றதை அடுத்து, உலக சினிமாவில் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. சரித்திரப் பின்னணியில் உருவாகிய `பாகுபலி' படம் தற்போது வரை ரூ.1708 கோடியை வசூலித்துள்ளது.

    `பாகுபலி' படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.



    இதில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்திருந்த ராணா, அடுத்ததாக `நேனு ராஜா நேனு மந்திரி' படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், அடுத்ததாக ராணா தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குநரான குணசேகர் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்து புராணத்தில் இடம்பெறும் பக்தப் பிரகலாதனின் கதையை படமாக இயக்க இருக்கிறாராம். இதில் பிரகலாதனின் தந்தையான இரணியகசிபு கதாபாத்திரத்தில் நடிக்க ராணாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

    எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக குணசேகர் இயக்கத்தில் உருவான சரித்திர படைப்பான `ருத்ரமாதேவி' படத்தில் ராணா நடித்திருந்தார். அந்த படத்தில் அனுஷ்கா, அல்லு அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
    ரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘2.ஓ’ படத்தின் ஆடியோ ரீலீஸ் தேதி மற்றும் இடம் பற்றிய அறிவிப்பு வெளிவந்துள்ளது.
    ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் புதிய படம் ‘2.ஓ’. எந்திரன் இரண்டாம் பாகமாக உருவாகிவரும் இப்படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ளார். லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் டப்பிங் பணிகள் எல்லாம் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், இப்படத்தின் ஆடியோ வெளியீட்டை மிகவும் பிரம்மாண்டமாக நடத்த படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அதன்படி, வருகிற அக்டோபர் மாதம் தீபாவளியையொட்டி இப்படத்தின் ஆடியோவை வெளியிட முடிவு செய்துள்ளனர். இந்த ஆடியோ வெளியீட்டு விழாவை துபாயில் நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.



    ஏற்கெனவே, ரஜினி-ஷங்கர் கூட்டணியில் வெளிவந்த ‘எந்திரன்’ படத்தின் ஆடியோ வெளியீடு மலேசியாவில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. ‘2.ஓ’ படத்தின் கதாநாயகியாக எமி ஜாக்சன் நடித்துள்ளார். பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் வில்லனாக நடித்துள்ளார். இப்படம் குடியரசு தினத்தையொட்டி அடுத்த வருடம் ஜனவரி 25-ஆம் தேதி வெளிவரவிருக்கிறது. 
    அபிஷேக், அர்ச்சனா சிங் ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் ‘வெருளி’ படத்தின் விமர்சனம்.
    படத்தின் ஆரம்பத்திலேயே மினி பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகிறது. இந்த விபத்தில் சில பேர் உயிரிழக்கிறார்கள். சில பேர் காயத்துடன் உயிர் தப்பிக்கிறார்கள். போலீஸ் அதிகாரியான நாயகன் அபிஷேக் சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருப்பவர்களை எல்லாம் அப்புறப்படுத்தி, அந்த இடத்தில் சிதறிக் கிடக்கும் பொருட்களையெல்லாம் சேகரிக்கும்போது ஒரு எந்திர தகடும் கிடைக்கிறது. அதையெல்லாம் எடுத்து காவல் நிலையத்தில் அபிஷேக் வைக்கச் சொல்கிறார்.

    இந்நிலையில், இரவு ரோந்து பணியின்போது ஒரு தம்பதியிடம் மர்ம நபர் ஒருவர் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட முயற்சிக்கிறார். அப்போது, அவர்களை அபிஷேக், தம்பதியரை அந்த மர்ம நபரிடமிருந்து காப்பாற்றுகிறார். அந்த இடத்திலும் அபிஷேக்குக்கு ஒரு எந்திர தகடு கிடைக்கிறது. மினி பஸ் விபத்து நடந்த இடத்திலிருந்து கிடைத்த எந்திர தகடும், வழிப்பறி கொள்ளை நடந்த இடத்தில் கிடைத்த எந்திர தகடும் ஒன்றையொன்று ஒத்துப்போகிறது.



    நடந்த சம்பவங்களுக்கும் அந்த தகட்டுக்கும் ஏதாவதும் சம்பந்தம் இருக்குமா? என்று விசாரித்துக் கொண்டிருக்கையில், டிவி ரிப்போர்ட்டரான நாயகி அர்ச்சனா சிங் இந்த தகவலை அறிந்துகொண்டு அவளும் இதுகுறித்த விசாரணையில் களமிறங்குகிறாள். இதன்பின்னர், ஒரு விபத்தில் குழந்தை இறக்க, அந்த இடத்திலும் ஒரு எந்திர தகடு கிடைக்கிறது.

    அந்த தகடுக்கும் இந்த சம்பவத்துக்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது என்பதை அப்போதுதான் அபிஷேக் உறுதிபடுத்துகிறார். உண்மையில் அந்த தகடுக்கும் நடந்த சம்பவங்களுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? இதெல்லாம் எதற்காக நடக்கிறது? யாரெல்லாம் இதன் பின்னணியில் இருந்து செயல்படுகிறார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.



    நாயகன் அபிஷேக் போலீஸ் அதிகாரிக்குண்டான மிடுக்குடன் படம் முழுக்க வலம் வந்திருக்கிறார். விசாரணை செய்யும் விதம், மற்றவர்களிடம் பேசும் விதம் எல்லாமே அருமையாக இருக்கிறது. ரிப்போர்ட்டராக வரும் நாயகி அர்ச்சனா சிங், தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்.

    பிற்பாதியில் வரும் பாக்யராஜ் தனது அனுபவ நடிப்பை கொடுத்து படததிற்கு பலம் சேர்த்திருக்கிறார். பாசம், செண்டிமெண்ட் காட்சிகளில் அனைவரையும் உறைய வைத்திருக்கிறார். அவருடைய மகனாக நடித்திருக்கும் அசோக் பாண்டியனும் தனது பங்குக்கு ஏற்ற நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ராணுவ அதிகாரியாக வரும் ரவி பிரகாஷ், அபிஷேக்குக்கு உதவி செய்யும் காட்சிகளில் எல்லாம் சிறப்பாக நடித்திருக்கிறார்.



    இயக்குனர் அமுதவாணன், திரில்லர் கதையில் சமூக அக்கறையுடன் ஒரு கருத்தையும் படத்தில் சொல்ல வந்திருக்கிறார். படம் ஆரம்பத்தில் மெதுவாக நகர்ந்தாலும், நகரத்தில் நடக்கும் ஒவ்வொரு சம்பவங்களுக்கும் காரணம் என்னவென்று விசாரணை செய்ய ஆரம்பிக்கும் நிலையிலிருந்து படம் வேகமெடுக்கிறது. படத்திற்கு விளம்பரம் இல்லாததுதான் இப்படத்தை பற்றிய பேச்சு பெரிய அளவில் இல்லாமல் போயிற்று. படத்திற்கு நன்றாக விளம்பரப்படுத்தியிருந்தால் கண்டிப்பாக அனைவரிடத்திலும் இப்படம் நல்ல மதிப்பை பெற்றிருக்கும்.

    ராஜ் பிரதாப், தினேஷ் ராஜா ஆகியோரின் இசையில் பாடல்கள் பெரிதாக ஈர்க்காவிட்டாலும், பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார்கள். சிவா பிரபுவின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘வெருளி’ வெறுக்கவில்லை.
    `துருவங்கள் பதினாறு' இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த்சாமி நடித்து வரும் `நரகாசூரன்' படத்தில் தென்னிந்திய சினிமாவின் முக்கிய பிரபலங்கள் இணைந்திருக்கின்றனர்.
    `போகன்' படத்தை தொடர்ந்து அரவிந்த் சாமி தற்போது `சதுரங்க வேட்டை 2', `வணங்காமுடி', `பாஸ்கர் ஒரு ரஸ்கல்', `நரகாசூரன்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் அரவிந்த்சாமியின் பிறந்தநாளான நேற்று, அவரது ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக அவர் நடித்து வரும் `வணங்காமுடி' மற்றும் `நரகாசூரன்' படங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டது.

    `துருவங்கள் பதினாறு' வெற்றியை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த்சாமி நடித்துவரும் `நரகாசூரன்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. அதில் `நரகாசூரன்' படத்தில் நடிக்கும் முக்கிய கதாபாத்திரங்கள் யார் யார் என்பது குறித்த அறிவிப்பும் வெளியானது. இதில் தெலுங்கு சிசிமாவின் பிரபலம் சந்தீப் கிஷான், மலையாள பிரபலம் இந்திரஜித், ஸ்ரேயா சரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.



    கவுதம் மேனனின் ஒன்ராகா என்டர்டெயின்மெண்ட் தயாரித்து வரும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது. `துருவங்கள் பதினாறு' படத்தில் பணியாற்றிய பலரும் இப்படத்திலும் பணியாற்றுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    அதேபோல் `வணங்காமுடி' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிம்பு நேற்று வெளியிட்டார். இயக்குநர் செல்வா இயக்கும் இப்படத்தில் அரவிந்த் சாமி - ரித்திகா சிங், நந்திதா ஸ்வேதா, சாந்தினி தமிழரசன், சிம்ரன், கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். கோகுல் ஒளிப்பதிவு செய்ய டி. இமான் இசையமைக்கிறார்.
    `டைட்டானிக்' படத்தில் ஜாக்காக நடித்த ஹாலிவுட் பிரபலம் லியோனார்டோ டிகாப்ரியோ, அவருக்கு பரிசாக அளிக்கப்பட்ட ஆஸ்கார் விருதை திரும்ப கொடுத்துவிட்டார்.
    `டைட்டானிக்' பட நடிகரான பிரபல ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ (42), அவருக்கு பரிசாக வழங்கப்பட்ட ஆஸ்கார் விருதினை அமெரிக்க அரசிடம் திரும்பக் கொடுத்துவிட்டார்.

    டிகாப்ரியோ, கடந்த ஆண்டு வெளியான `தி ரெவணன்ட்' படத்திற்காக ஆஸ்கார் விருதினை வென்றார். அதற்கு முன்னதாகவே `த வோல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட்' படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தின் வெற்றியை அடுத்து அந்த படத்தை தயாரித்த நிறுவனமான, `ஆன் த வாட்டர்பிரண்ட்' படத்திற்கான பிரபல ஹாலிவுட் நடிகர் மார்லன் பிராண்டோ பெற்ற ஆஸ்கார் விருதை டிகாப்ரியோவின் 38-வது பிறந்தநாள் பரிசாக கடந்த 2012-ஆம் ஆண்டு வழங்கியிருந்தது.



    இந்நிலையில், அந்த நிறுவனத்தின் மீது நிதி மோசடி புகார் வந்துள்ளதை அடுத்து, அந்த நிறுவனம் கொடுத்த ஆஸ்கார் விருதை டிகாப்ரியோ அமெரிக்க அரசிடம் ஒப்படைத்துள்ளார்.

    அது மட்டுமல்லாமல் அந்த நிறுவனம் பரிசாக அளித்த உலக புகழ் பெற்ற பிகாசோ ஓவியம் உள்ளிட்ட மேலும் சில விலையுயர்ந்த பரிசுகளையும் அவர் திருப்பி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    சினிமாவில் கருத்து சொல்ல தேவை இல்லை. ரசிகர்களை சந்தோஷப்படுத்தினால் போதும்” என்று நடிகை அனுஷ்கா கூறியுள்ளார்.
    நடிகை அனுஷ்கா அளித்த பேட்டி வருமாறு:-

    “சினிமா அதிசயமான ஒரு பொழுதுபோக்கு சாதனம். இந்த சாதனத்தை வைத்து சமூகத்துக்கு ஏதேனும் ஒரு செய்தியை சொல்ல வேண்டும் என்பது சில இயக்குனர்களின் சித்தாந்தமாக இருக்கிறது. இன்னும் சில இயக்குனர்கள் கருத்து சொல்லாமல் வேறு கோணங்களில் படங்களை உருவாக்குகிறார்கள்.

    எனது பார்வையில் சினிமா என்பது அழகான பொய். வேறு ஒரு உலகத்தை கண்முன் நிறுத்தும் அழகிய சாதனம். சினிமா மூலம் கருத்து சொல்வது ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் இப்போது அப்படிப்பட்ட நிலைமைகள் இல்லை. எல்லோருக்கும் அவரவர் வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்று நன்றாக தெரிந்து இருக்கிறது.



    ஒருவர் சொல்வதை இன்னொருவர் கேட்கும் நிலைமை சுத்தமாக இல்லை. சினிமா மூலம் சமூகத்துக்கு கருத்துக்கள் சொல்ல வேண்டும் என்று நினைப்பதில் தவறு இல்லை. ஆனால் சினிமாவில் நல்ல கருத்துக்கள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்காமல் இருப்பது நல்லது. வெள்ளித்திரையில் நடக்கும் அனைத்து விஷயங்களும் ரசிகர்களுக்கு தெரிந்து இருக்கிறது. டெக்னீசியன்கள் பற்றியும் தெரிந்து வைத்து இருக்கிறார்கள்.

    குறிப்பிட்ட காட்சிகளை பார்க்கும்போது அதன் பின்னணியில் பணியாற்றி இருக்கும் தொழில்நுட்ப கலைஞர்களையும் கண்டுபிடித்து விடுகின்றனர். ஒவ்வொரு காட்சியிலும் ‘கிராபிக்ஸ்’களை எந்த அளவு பயன்படுத்தி உள்ளனர் என்பதையும் புரிந்து வைத்து உள்ளனர். அதில் இருக்கும் தவறுகள் கூட அவர்களுக்கு ஆழமாக புரிகிறது. அதை கண்டுபிடித்து வெளியே சொல்லி விடுகின்றனர்.

    அந்த அளவுக்கு ரசிகர்கள் அனைவரும் புத்திசாலிகளாக வளர்ந்து விட்டனர். சினிமாவை அவர்கள் பொழுதுபோக்குக்காக பார்க்கின்றனர். தங்களை சந்தோஷப்படுத்தினால் போதும் என்று நினைக்கிறார்கள். கருத்துக்களை எதிர்பார்ப்பது இல்லை.”

    இவ்வாறு அனுஷ்கா கூறினார்.
    நடிகை அஞ்சலி - ஜெய் திருமணம் திருப்பதியில் டிசம்பர் மாதம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    நடிகை அஞ்சலி, 2007-ம் ஆண்டு ‘கற்றது தமிழ்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தொடர்ந்து நடித்து வருகிறார். ‘அங்காடி தெரு’ படம் அவரை பிரபலபடுத்தியது. கலகலப்பு, எங்கேயும் எப்போதும், சேட்டை, சகலகலா வல்லவன் மாப்ள சிங்கம், இறைவி ஆகியவையும் முக்கிய படங்களாக அமைந்தன.

    தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். குடும்ப பிரச்சினையால் சினிமாவை விட்டு தற்காலிகமாக சில மாதங்கள் ஒதுங்கி இருந்து விட்டு மீண்டும் நடிக்க வந்தாலும் அவரது மார்க்கெட் சரியவில்லை. கைவசம் நிறைய படங்கள் வைத்து நடித்து வருகிறார். அஞ்சலிக்கு 31 வயது ஆகிறது. அவருக்கு திருமணத்தை முடிக்க குடும்பத்தினர் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

    இந்த நிலையில் அஞ்சலிக்கும் நடிகர் ஜெய்க்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இருவரும் காதலிப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. ‘எங்கேயும் எப்போதும்’ படத்தில் ஜோடியாக நடித்தபோது காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. ஜோதிகாவின் மகளிர் மட்டும் படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் அஞ்சலிக்கு ஜெய் தனது வீட்டில் தோசை சுட்டு கொடுத்தும் நெருக்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.



    கடந்த வெள்ளிக்கிழமையன்று பிறந்தநாள் கொண்டாடிய அஞ்சலிக்கு ஜெய் டுவிட்டரில் தெரிவித்து இருந்த வாழ்த்து செய்தியில், “நீ எனக்கு முக்கியம். நீ நீயாக இருந்து எனது ஒவ்வொரு நாளையும் முக்கியமானதாய் ஆக்குகிறாய். நானும் கடவுளும் என்றும் உன்னுடன் இருப்போம்” என்று குறிப்பிட்டு இருந்தார். இதற்கு அஞ்சலி நன்றி தெரிவித்தார்.

    அஞ்சலி ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரியை சேர்ந்த தெலுங்கு பெண் ஆவார். “அஞ்சலிக்கும், ஜெய்க்கும் வருகிற டிசம்பர் மாதம் திருப்பதி கோவிலில் திருமணத்தை நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்” என்று அஞ்சலியின் உறவினர்கள் தெரிவித்ததாக தெலுங்கு பட உலகில் தகவல் வெளியாகி உள்ளது.
    நட்புக்கு முக்கியத்துவம் அளித்து வரும் நடிகர் சிம்பு, தனது நண்பரும், நடிகருமான ஜெய்க்காக இன்று `பலூன்' விட இருக்கிறார்.
    சினிஷ் இயக்கத்தில் ஜெய் - அஞ்சலி - ஜனனி ஐயர் இணைந்து நடித்திருக்கும் படம் `பலூன்'. காதல் கலந்த திகில் படமாக உருவாகி உள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். காமெடி நடிகர் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

    கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ‘எங்கேயும் எப்போதும்’ படத்திற்கு பின்னர் ஜெய் - அஞ்சலி மீண்டும் இணைந்து நடித்திருப்பதால் பலூன் படத்தின் மீதான எதிர்பாரப்பு கூடியிருக்கிறது. இந்த படத்தில் ஜெய் 3 வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.



    '70 எம் எம்' நிறுவனத்தின் சார்பில் டி.என்.அருண் பாலாஜி - கந்தசுவாமி நந்தகுமார் மற்றும் 'பார்மர்ஸ் மாஸ்டர் பிளான்' தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் திலீப் சுப்பராயன் ஆகியோர் இணைந்து தயாரித்து இருக்கும் இந்த 'பலூன்' படத்தின் டீசரை இன்று இரவு 8 மணிக்கு நடிகர் சிம்பு வெளியிடுகிறார்.
    செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா மற்றும் நந்திதா நடிப்பில் உருவாகியுள்ள `நெஞ்சம் மறப்பதில்லை' படத்தின் ரிலீசுக்கு முன்பாகவே ஒரு சிறிய சிறப்பு விருந்து அளிக்க இருக்கிறார்.
    தனது தனித்துவமான இயக்கத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்திருப்பவர் இயக்குநர் செல்வராகவன். அவரது இயக்கத்தில் கடைசியாக, ‘இரண்டாம் உலகம்’ கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியானது. அதன்பின்னர் படங்களை இயக்குவதற்கு சிறிய இடைவேளை எடுத்திருந்த செல்வராகவன் தற்போது ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தை இயக்கி இருக்கிறார்.

    3 வருட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் என்பதால், ரசிகர்களிடையே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாகவும், ரெஜினா மற்றும் நந்திதா கதாநாயகிகளாகவும் நடித்துள்ளனர். திகில் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் ரெஜினா பேயாக நடித்திருக்கிறார்.



    நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குனர் செல்வராகவன், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவாளர் அரவிந்த கிருஷ்ணா இப்படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர். இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தின் ரிலீசுக்கு முன்பாக தனது ரசிகர்களுக்கு ஒரு சிறப்பு விருந்து அளிக்க செல்வராகவன் முடிவு செய்திருக்கிறார்.

    அதாவது, இன்று மாலை 7 மணிக்கு `நெஞ்சம் மறப்பதில்லை' படத்தின் புதிய டிரெய்லர் வெளியிடப்படும் என்று அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதனைதொடர்ந்து படம் வருகிற ஜுன் 30-ம் தேதி வெளியாகும் என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.



    கவுதம் மேனனின் ஒன்ராகா என்டர்டெயின்ட்மண்ட் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் சார்பில் மதன் தயாரித்துள்ள இப்படம் தணிக்கைகுழுவில் யு/ஏ சான்றிதழை பெற்றுள்ளது.

    செல்வராகவன் தற்போது சந்தானத்தை வைத்து ‘மன்னவன் வந்தானடி’ படத்தை இயக்கி வருகிறார்.
    ×