என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    நடிகர் சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, ஆர்யா உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்கள் `கூட்டத்தில் ஒருத்தன்' படத்தில் “மாற்றம் ஒன்றே மாறாதது“ என்ற பாடலில் இணைந்திருக்கின்றனர்.
    அசோக் செல்வன் - ப்ரியா ஆனந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் கூட்டத்தில் ஒருத்தன். தா.செ. ஞானவேல் இயக்கியுள்ள இப்படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ், ரமானியம் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.
    தமிழ் சினிமாவில் முதல் பெஞ்ச் மாணவர்கள், கடைசி பெஞ்ச் மாணவர்கள் பற்றி நிறைய படங்கள் வந்துள்ளது.

    இப்படம் கொஞ்சம் வித்யாசமாக மிடில் பெஞ்ச் மாணவர்களைப் பற்றி பேசும் படமாக இருக்கும். இந்த உலகத்தில் பெரும்பான்மையானவர்கள் மிடில் பெஞ்சர்ஸ் தான். அவர்களை கொண்டாடும் படமாக கூட்டத்தில் ஒருத்தன் இருக்கும்.



    நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ள இப்படத்தில் “மாற்றம் ஒன்றே மாறாதது" என்ற பரிசு பாடல் ஒன்று தயாராகிறது. படத்தில் இடம்பெறாத இந்த பாடல், ஒரு ப்ரோமோ பாடலாக வெளியாகிறது.

    இப்பாடலை உருவாக்கிய நேரத்தில் தான் தமிழகத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்தது. மாற்றங்கள் ஒன்றே மாறாதது என்ற இந்த விஷயத்தை எடுத்துக்கொண்டு தமிழ் சினிமா நட்சத்திரங்கள் முதல் சாதாரண மனிதர்கள் வரை அனைவரையும் சந்தித்து அவர்களுக்கு மாற்றத்தை பற்றி சொல்லகூடிய அழகான கிப்ட் ஒன்றை வழங்கினோம். அந்த பாடல் இன்று விஷுவலாக வெளியாக இருக்கிறது.



    இப்பாடலில் நடிகர் சூர்யா, ஆர்யா, சிவகார்த்திகேயன், நாசர், பிரகாஷ் ராஜ், சிவகுமார், விஷ்ணு விஷால், சமுத்திரகனி, ஆர்.ஜே.பாலாஜி, அசோக் செல்வன், ப்ரியா ஆனந்த், நிவாஸ் கே பிரசன்னா, செப் தாமு, ரம்யா நம்பீசன், விஐடி கல்லூரி மாணவர்கள் போன்ற பலர் இப்பாடலில் இடம்பெற்றுள்ளனர். இப்பாடல் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும் என இயக்குநர் த.செ. ஞானவேல் தெரிவித்தார்.
    அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘விவேகம்’ படத்தை ‘புலிமுருகன்’ படத்தின் தயாரிப்பாளர் வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது
    அஜித்-சிவா கூட்டணியில் மூன்றாவதாக உருவாகிவரும் புதிய படம் ‘விவேகம்’. இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வருகிற ஆகஸ்ட் மாதம் இப்படத்தை வெளியிட ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது இப்படத்தின் வியாபாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

    சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி.ஜி.தியாகராஜன் தயாரித்துள்ள இப்படத்தின் கேரளா விநியோக உரிமையை ‘முலகுபாடம் பிலிம்ஸ்’ என்ற நிறுவனம் வாங்கியுள்ளது. இந்த நிறுவனம்தான் மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் வெளிவந்த ‘புலிமுருகன்’ படத்தை தயாரித்தது. தற்போது தமிழிலும் ‘புலிமுருகன்’ படத்தை இந்நிறுவனமே வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.



    ‘விவேகம்’ படத்தில் காஜல் அகர்வால், அக்ஷராஹாசன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் வில்லனாக நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். இவருடைய இசையில் நேற்று வெளிவந்த ‘Surviva’ என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. கூடிய விரைவில் அனைத்து பாடல்களையும் வெளியிடவுள்ளனர்.
    ரஜினி அரசியல் கட்சி தொடங்க வேண்டாம் என்றும் ஏழை மக்களுக்கு நல்லது செய்தாலே போதும் என்று நடிகரும், திமுக-வில் உறுப்பினருமான ராதாரவி கூறினார்.
    பல்லடம் ஒன்றிய தி.மு.க சார்பில் தி.மு.க தலைவர் மு.கருணாநிதியின் 94-வது பிறந்த நாள் விழா மற்றும் சட்டமன்ற வைர விழா பொதுக்கூட்டம் பல்லடம் கரடிவாவியில் நடைபெற்றது.

    கூட்டத்தில் நடிகர் ராதாரவி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    மொழியின் வரலாறு தெரிந்தால் தான் கலாச்சார பண்பாட்டை காப்பாற்ற முடியும். தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை பெற்று தந்தது தி.மு.க. தலைவர் கருணாநிதியை தான் சேரும்.

    தமிழகத்தில் தற்போதே நிறைய அரசியல் கட்சிகள் உள்ளன. இந்த நிலையில் புதிய கட்சி ஆரம்பிப்பவர்களின் கட்சி கொடிக்கு கலர் கிடைக்காத நிலை உள்ளது.



    இப்படி இருக்கும் நிலையில் மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டுமானால் ரஜினி தன்னிடம் இருக்கும் செல்வத்தை கொண்டு ஏழை மக்களுக்கு நல்லது செய்தால் போதும்.

    அவர் புதியதாக அரசியல் கட்சி தொடங்கக் கூடாது என்பது தான் என்னுடைய வேண்டுகோள் ஆகும்.

    ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுக பல்வேறு அணிகளாக சிதறிப் போய்விட்டது. அதனால் அவர்களை பற்றி இனி கவலை இல்லை. உள்ளாட்சி, சட்டமன்றம், பாராளுமன்றத்திற்கு எப்போது தேர்தல் வைத்தாலும் திமுக தான் மகத்தான வெற்றியை பெறும். அப்போது தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்பார்.

    இவ்வாறு நடிகர் ராதாரவி பேசினார்.
    விஜய் நடிப்பில் அட்லி இயக்கி வரும் பெயரிடப்படாத படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதியில் சில மாற்றங்கள் நடைபெற்றுள்ளது.
    அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன் என மூன்று கதாநாயகிகள் நடிக்கின்றனர். சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யன் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

    இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்தநாளான ஜுன் 22-ந் தேதி வெளிவரும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். இந்நிலையில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் தேதியில் படக்குழுவினர் சில மாற்றங்களை செய்துள்ளனர். அதாவது விஜய் பிறந்தநாளுக்கு ஒருநாள் முன்னதாகவே படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் தலைப்பையும் வெளியிடவுள்ளனர்.



    அதன்படி, நாளை (ஜுன் 21) மாலை 6 மணிக்கு பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பு வெளியாகவுள்ளது. இது விஜய் ரசிகர்களுக்கு கண்டிப்பாக தித்திப்பான செய்தியாகும். இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தன்னுடைய 100-வது படமாக தயாரித்து வருகிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே சமயத்தில் உருவாகி வருகிறது. 
    மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடித்துள்ள `வேலைக்காரன்' படத்தின் தொலைக்காட்சி உரிமையை பிரபல தனியார் தொலைக்காட்சி வாங்கியுள்ளது.
    `தனி ஒருவன்' பட வெற்றியை தொடர்ந்து மோகன் ராஜா இயக்கியிருக்கும் படம் `வேலைக்காரன்'. சமூக பிரச்சனையை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் - நயன்தாரா முதல்முறையாக இணைந்திருக்கின்றனர்.

    இவர்களுடன் பிரகாஷ் ராஜ், சினேகா, ரோகினி, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சதீஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வில்லனாக மலையான நடிகர் பகத் பாஸில் தமிழில் அறிமுகமாகிறார்.



    சமீபத்தில் வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்றது. சென்னை மற்றும் மலேசியாவில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு, தற்போது இறுதிக்கட்ட பணியில் இருக்கும் `வேலைக்காரன்' படத்தை 24 ஏ.எம். நிறுவனம் சார்பில் ராஜா தயாரித்திருக்கிறார்.

    சரஸ்வதி பூஜை விடுமுறை நாளில் வருகிற செப்டம்பர் 29-ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவி வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே  சிவகார்த்திகேயன் நடித்த `மெரினா', `எதிர்நீச்சல்', `மான் கராத்தே' உள்ளிட்ட படங்களின் தொலைக்காட்சி உரிமையை வாங்கியிருந்த விஜய் டி.வி.யே `வேலைக்காரன்' படத்தின் உரிமையையும் வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    2000-ஆம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும், ரசிகர்களின் கனவுக் கன்னியாகவும் வலம் வந்த நடிகை சிம்ரன் தற்போது ரம்யா கிருஷ்ணன் பாணியில் சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்க இருக்கிறாராம்.
    ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினிமுருகன்’ ஆகிய வெற்றிப்படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் - பொன்ராம் - சூரி - டி.இமான் வெற்றிக் கூட்டணி மூன்றாவது முறையாக மீண்டும் இணைந்திருக்கிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக முதல்முறையாக சமந்தா நடிக்கிறார்.

    இவர்களுடன் சிம்ரன், நெப்போலியன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் பூஜை கடந்த வாரம் அம்பாசமுத்திரத்தில் நடைபெற்றது. ‘ரெமோ’, ‘வேலைக்காரன்’ படத்தை தயாரித்த 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தையும் தயாரிக்க இருக்கிறது.



    இப்படத்தில் சிம்ரன், நெப்போலியனின் கதாபாத்திரங்கள் என்னவென்பது குறித்த செய்திகள் வெளியாகி உள்ளது. சிவகார்த்திகேயனின் தந்தையாக நெப்போலியன் நடிப்பதாகவும், சிம்ரன் இப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

    இதற்கு முன்னதாக `படையப்பா' படத்தில் ரம்யா கிருஷ்ணன், `சந்திரமுகி' படத்தில் ஜோதிகா, `சிநேகிதியே' படத்தில் தபு, `திமிரு' படத்தில் ஷ்ரியா ரெட்டி, `கொடி' படத்தில் த்ரிஷா, `அதே கண்கள்' படத்தில் ஷிவாடா நாயர் வில்லியாக நடித்திருந்தனர். இந்நிலையில், சிவகார்த்திகேயன் படத்தில் சிம்ரன் வில்லியாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    விஜய் பிறந்தநாளில் அவரது ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக பிரபல திரையரங்கில் 4 மெகாஹிட் படங்கள் திரையிடப்பட உள்ளதாக திரையரங்கு நிர்வாகம் அறிவித்துள்ளது.
    தமிழ் சினிமாவில் வரலாறுகளை மாற்றி எழுதி வரும் நடிகர்களுள் ஒருவர் விஜய். அவரது 43-வது பிறந்தநாள் வருகிற ஜுன் 22-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. விஜய் பிறந்தநாளுக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே அவரது ரசிகர்கள் பிறந்தநாள் கொண்டாட்டத்தை தொடங்கி விட்டனர். அதன் ஒருபகுதியாக விஜய் ரசிகர்களில் 43 பேர் உடலுறுப்பு தானம் செய்திருந்தார்கள்.

    இன்னமும் பல்வேறு விதங்களில் விஜய்யின் பிறந்தநாளை கொண்டாட அவரது ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், விஜய் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக சென்னையில் உள்ள ஏ.ஜி.எஸ். திரையரங்கில் விஜய்யின் 4 மெகாஹிட் படங்கள் திரையிடப்படுகிறது.



    மேலும் ஜோடிகளான விஜய் ரசிகர்களுக்கு இலவச டிக்கெட் வழங்கப்படுகிறது. அதற்காக விஜய் ரசிகர்கள், விஜய்யின் பிரபலமான வசனங்களை டப்மாஷ் மூலம் அனுப்ப வேண்டும். இதில் தேர்ந்தெடுக்கப்படும் விஜய் ரசிகர்களுக்கு இலவச டிக்கெட் வழங்கப்படும் என்று திரையரங்க சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    விஜய்யின் `போக்கிரி', `நண்பன்', `துப்பாக்கி', `தெறி' உள்ளிட்ட 4 படங்களும் திரையிடப்படுகின்றன.
    திருநெல்வேலியைச் சேர்ந்த கபடி வீரர் ராஜா நடிக்கும் கரடு முரடான காதல் கதையான ‘அருவா  சண்ட’ படத்தின் முன்னோட்டம்.
    ஒயிட் ஸ்கிரீன் புரொடக்‌ஷன் நிறுவனத்தின் சார்பில் வி.ராஜா தயாரிக்கும் படம் ‘அருவா சண்ட’.

    இந்த படத்தின் கதை நாயகனாக ராஜா நடிக்கிறார். இவர் திருநெல்வேலியைச் சேர்ந்த கபடி வீரர். கதாநாயகி தேர்வு நடைபெறுகிறது. புதுமையான அம்மாவாக சரண்யா பொன்வண்ணன், வில்லனாக ஆடுகளம் நரேன் நடிக்கிறார்கள். இவர்களுடன் கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி, சிங்க முத்து, நெல்லை சிவா, பிளாக்பாண்டி, சின்ராசு, ரஞ்சன், சின்னத்திரை புகழ் சரத், அழகப்பன் ஆகியோர் கூட்டணி அமைத்து காமெடியில் கலக்க இருக்கிறார்கள்.

    இது தரண் இசையமைக்கும் 25-வது படம். பாடல்கள் - வைரமுத்து, ஒளிப்பதிவு - சந்தோஷ்பாண்டி, படத்தொகுப்பு - வி.ஜே.சாபு ஜோசப், கலை - ஏ.டி.ஜெ, ஸ்டண்ட் - மிரட்டல் செல்வம், நடனம் - சிவசங்கர், தீனா, தயாரிப்பு - வி.ராஜா.

    தமிழ் திரையுலகின் முதல் டிஜிட்டல் படமான ‘சிலந்தி’ படத்தை எழுதி இயக்கிய வரும் ‘ரணதந்த்ரா’, ‘சிலந்தி 2’ படங்களின் இயக்குனருமான ஆதிராஜன் கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார். படம் பற்றி கூறிய அவர்...

    “இது தென் மாவட்டங்களில் நடந்து வரும் ஆணவக்கொலைகளின் பின்னணியில், ஒரு கபடி வீரனின் கரடு முரடான காதல் கதையாக உருவாகிறது. தமிழர்களின் தேசிய அடையாளமான கபடியின் பெருமைகளை உலகறிய உரக்கச் சொல்ல வருகிறது” என்றார்.

    ‘அருவா சண்ட’ படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் தொடங்குகிறது.
    "இசைக் கருவிகளை சரியாக வாசிக்காவிட்டால், அண்ணன் என்றாலும் கோபப்படுவேன்'' என்று இளையராஜா கூறினார்.
    "இசைக் கருவிகளை சரியாக வாசிக்காவிட்டால், அண்ணன் என்றாலும் கோபப்படுவேன்'' என்று இளையராஜா கூறினார்.

    தனது இசைப்பயணம் குறித்து இளையராஜா கூறியதாவது:-

    "தண்ணி கறுத்திருச்சு'' பாடலுக்கு டைரக்டர் ஸ்ரீதர் வேறு டிïன் போட்டுக்கொள்ளலாம் என்று சொன்னாலும், எனக்கு மனசு கேட்கவில்லை. நான் அவரிடம் "சார்! இது ஹிட் ஆகும் நல்ல டிïன்தான். நிறுத்தி நிறுத்திப்பாடி முழுப்பாடலையும் கேட்க முடியாததால் உங்களுக்கு அப்படித் தோன்றுகிறது'' என்றேன்.

    அதோடு, "இந்தப்பாடலை வேறு ஒருவரைக்கொண்டு பாடச் சொல்லலாம்'' என்றும் சொன்னேன்.

    "வேறு யாரை பாட வைக்க நினைக்கிறீர்கள்?'' கேட்டார் ஸ்ரீதர்.

    "மலேசியா வாசுதேவனை பாட வைக்கிறேன்'' என்றேன்.

    "உங்கள் விருப்பம்'' என்றார், ஸ்ரீதர்.

    சொன்னபடி மலேசியாவை பாட அழைத்தேன். ஜி.கே.வி.யும் கூட இருந்தார். மலேசியா வாசுதேவன் பாடி முடித்த நேரத்தில் ஜி.கே.வி. என்னிடம், "இவ்வளவு வித்தியாசமான பாடல் என்று எனக்கு ஏன் அன்றைக்கு தெரியாமல் போயிற்று?'' என்று கேட்டார்.

    இந்தப் பாடல் உள்பட இளமை ஊஞ்சலாடுகிறது படத்தின் எல்லாப் பாடல்களுமே `ஹிட்' ஆனது.

    "என்னடி மீனாட்சி'' என்பது இந்தப் படத்தில் இடம் பெற்ற இன்னொரு பாடல்.

    இந்தப்பாடல் பதிவின்போது ஒரு வேடிக்கை நடந்தது.

    வெளிïரில் இருந்து நிறைய கல்லூரி மாணவ-மாணவிகள் ஸ்டூடியோவுக்கு ஷூட்டிங் பார்க்க வந்திருந்தார்கள். அப்படியே என்னுடைய ரெக்கார்டிங் நடக்கிறது என்று கேள்விப்பட்டு அனுமதியுடன் ரெக்கார்டிங் தியேட்டருக்கு வந்தார்கள்.

    நான் கண்டக்ட் செய்து கொண்டிருந்தேன். அனைவரும் அமைதியாக நின்று வேடிக்கை பார்த்தார்கள்.

    திடீரென்று கமலஹாசன் வந்துவிட்டார். ரிகர்சல் முடிந்ததும் எல்லாரும் அமைதியாய் நிற்க, நான் ஒரு சிறு தமாஷ் செய்ய விரும்பினேன்.

    மிïசிக் எழுதிய பேப்பரை கையில் எடுத்துக்கொண்டு கமலை நோக்கிப் போனேன். அவருடைய கையில் மிïசிக் பேப்பரை கொடுத்து, கொஞ்சம் சத்தமாக "கமல் சார்! எல்லாம் நீங்க சொன்னது போல் எழுதி ரிகர்சல் செய்துவிட்டேன். சரியா இருக்கா? இல்லே ஏதாவது மாற்றணுமா? பார்த்திட்டு சொல்லுங்க'' என்றேன்.

    உடனே அவரும் சிரிக்காமல் சீரியசாக "எல்லாம் சரியாத்தான் இருக்கு. ஆனால்...'' என்று இழுத்து, அதில் ஒரு இடத்தைக்காட்டி "இந்த இடத்தில்தான் நான் எழுதியது போல் வரவில்லை. அதை மட்டும் சரி செய்து விட்டால் நூறு சதவீதம் `பெர்பெக்ட்' ஆகிவிடும்''

    என்றார்.ஆர்க்கெஸ்ட்ரா குழுவினருக்கு எங்கள் நாடகம் புரிந்தது. தங்களுக்குள்ளாக சிரித்துக்கொண்டார்கள்.

    மாணவ-மாணவிகள் தான் எங்கள் நாடகம் புரியாமல் அப்படியே அதை உண்மை என்று நம்பிவிட்டார்கள்.

    "அய்யே! இவ்வளவுதானா? கமலஹாசன் சொல்வதைத்தான் இந்த இளையராஜா செய்கிறாராக்கும்!'' என்று அவர்களுக்குள் மெல்லிய குரலில் பேசிக்கொண்டே கலைந்து போனார்கள்.

    அவர்கள் வெளியே போகும்வரை அமைதியாக இருந்துவிட்டு, அதற்கப்புறம் நானும் கமலும் சிரித்தோம். பாருங்கள்.... அப்படியொரு சிரிப்பு. எங்களுடன் இசைக் குழுவினரும் சேர்ந்து சிரித்தார்கள்.

    இசை விஷயத்தில் நான் ரொம்பவே கண்டிப்பானவன். இசையில் மட்டும் ஏதாவது தவறு வந்தால் கோபம் பொத்துக்கொண்டு வந்துவிடும். பெரியவர், சிறியவர் என்ற தராதரம் இல்லாது கோபப்பட்டு விடுவேன்.

    அண்ணன் பாஸ்கர் மீது கூட இப்படி என் கோபம் பாய்ந்திருக்கிறது. ரெக்கார்டிங்கின்போது பாஸ்கர் "காங்கோ'' போன்ற கருவிகளை வாசிப்பார். சில சமயம் இஷ்டப்படி வாசிப்பார். அதை வேண்டாமென்று சொல்வேன். உடனே என்னை வெறுப்பேற்றவோ, அல்லது தம்பிதானே என்ற எண்ணத்திலோ மீண்டும் தவறாக வாசிப்பார்.

    எனக்கு தலைக்கேறிவிடும். சத்தம் போட்டு வெளியே அனுப்பி விடுவேன்.

    இசைக்குழுவினர் பார்க்க இது நடக்கும். என் இசையில் `காம்ப்ரமைஸ்' என்ற பேச்சுக்கே இடம் இருக்காது. கூடப் பிறந்த அண்ணனே ஆனாலும் தவறாக வாசித்தால் வெளியே போய்விட வேண்டியதுதான் என்பதை அவர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள். இதனால் சரியாக வாசிக்க வேண்டும் என்ற எண்ணத்தை அவர்களுக்குள் ஏற்படுத்தி ஒரு `டிசிப்ளினை' கொண்டு வந்திருந்தது.

    `ஓபோ' என்ற இசைக் கருவியை வாசிக்கும் இசைக் கலைஞர் ஒருவர் விஷயத்திலும் இப்படியொரு சம்பவம் நடந்து விட்டது. அவர் பெயர் கணேசன். இசைக் குழுவினர் அவரை `கணேசண்ணா' என்றுதான் அன்புடன் அழைப்பார்கள். அன்றைய தினம் ஒரு பாடலுக்கு இவர் வாசித்துக் கொண்டிருந்தார்.

    அந்த `பிட் மிïசிக்' நான் எதிர்பார்த்தபடி அவருக்கு வாசிக்க அமையவில்லை.

    இத்தனைக்கும் நான் இசையமைப்பாளர் என்ற நிலைக்கு முன்னாக கிடார் வாசித்த காலத்தில், அவரோடு எத்தனையோ ரெக்கார்டிங்குகளில் வாசித்திருக்கிறேன். ஒரே டாக்சியில் போய் வந்திருக்கிறோம்.

    இருந்தாலும் இந்த இடத்தில் பிடிவாதமாக நான் எதிர்பார்த்தபடி வரவேண்டும் என்று பல முறை கேட்டும், ரிகர்சல் கொடுத்தும்

    வரவில்லை.கோவர்த்தன் மாஸ்டரும் சில ரிகர்சல் கொடுத்து, "இது எப்படியிருக்கு என்று கேளு'' என்றார்.

    ஊஹும். எனக்கு நூற்றில் இருபத்தைந்து சதவீதம் கூட சரிப்படவில்லை.

    கடைசியில், "அவர் வாசிக்கவேண்டாம். போகட்டும்'' என்று சொல்லிவிட்டேன்.

    எத்தனையோ கால அனுபவம் உள்ளவர். எவ்வளவோ இசையமைப்பாளர்களை பார்த்தவர். இதெல்லாம் எனக்கு பெரிதாகப்படவில்லை.

    இதில் நான் நினைத்தபடி அந்த வாத்தியம் வரவில்லையென்றால் எதற்கு அந்த வாத்தியம்? வேண்டாம். இதுதான் என்பக்க நியாயம்.

    அவர் கொஞ்ச நேரம் அமைதியாக வாடிய முகத்துடன் இருந்துவிட்டு, டாக்சி வந்தவுடன் வாத்தியத்தை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டார்.

    அப்போது வருத்தப்படாத என் மனம், பல நாட்களுக்குப் பிறகு நினைத்து நினைத்து வருந்தியது. என் உள்ளேயே குமைந்து குறுகும் உணர்வை இன்றும் எனக்கு தந்து கொண்டிருக்கிறது.

    பாரதிராஜா "கிழக்கே போகும் ரெயில்'' என்று ஒரு கதையை தயார் செய்து, பூஜை பாடல், ரெக்கார்டிங் வைத்தார். அன்றைக்கென்று பார்த்து மூன்று பூஜைகள். அந்த பரபரப்பிலும் ஒரே நாளில் மூன்று பாடல்களை கிழக்கே போகும் ரெயில் படத்திற்காக பதிவு செய்தோம். இரண்டாவது பாடல் முடிய மதியம் 3 மணி ஆகிவிட்டது. மூன்றாவது பாடலை 4 மணிக்கு தொடங்கினோம். "கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ'' என்ற அந்த பாடல் முடிய இரவு 10ஷி மணி ஆகிவிட்டது.

    அப்போதெல்லாம் `சினி மிïசிசியன்ஸ் ïனியன்' இருந்தது. இரவு 9 மணிக்குள் ரெக்கார்டிங் முடிக்கப்பட வேண்டும் என்பது அவர்களின் விதிமுறையில் இருந்தது. இருந்தாலும் அவ்வப்போது இது மாதிரியான சந்தர்ப்பங்களில் அட்ஜஸ்ட் செய்து கொள்வது வழக்கமாக இருந்தது.

    "மாஞ்சோலைக் கிளிதானோ'' பாடலை கவிஞர் முத்துலிங்கமும், "பூவரசம்பூ பூத்தாச்சு'' பாடலை அமரும் எழுதியிருந்தார்கள்.

    கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் எழுதிய ஒரே திரைப்படப்பாடல் என்ற பெருமையை பெற்றது எனது இசையமைப்பில் இந்தப் படத்துக்காக உருவான "மலர்களே நாதஸ்வரங்கள்'' என்ற பாடல். ஆனால் பாரதிராஜா ஏனோ படத்தில் அந்தப் பாடலை வைக்கவில்லை.

    "கிழக்கே போகும் ரெயில்'' ரிலீஸ் ஆன அன்றே படக்கம்பெனி பணியாளர்கள் தியேட்டர்களில் ரசிகர்களிடம் கருத்து கேட்கப் போயிருக்கிறார்கள். அவர்களிடம் சில ரசிகர்கள் "ராஜ்கண்ணு (படத்தின் தயாரிப்பாளர்) ரெயில் ஏறிட வேண்டியதுதான்'' என்று கிண்டல் அடித்திருக்கிறார்கள்.

    ஒரு வாரத்திற்கு அப்புறம் படம் நன்றாக இருப்பதாக ரசிகர்களிடையே பேச்சு பரவி, படம் சூப்பர் ஹிட் ஆயிற்று. "16 வயதினிலே'' படத்தில் கிடைத்த புகழை பாரதிராஜா தக்க வைத்துக்கொண்டார்.
    நட்சத்திர ஜோடி ஒன்று வரும் டிசம்பரில் திருப்பதியில் திருமணம் செய்யப் போகிறார்களாம்.
    வெற்றிக்கு மறுபெயர் கொண்ட அந்த இரண்டெழுத்து நடிகரும், சித்தி பிரச்சினையில் சிக்கி மீண்டு வந்துள்ள அந்த நான்கெழுத்து நடிகையும் காதலித்து வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் நீண்ட நாளாகவே ஒரு பேச்சு போய்க் கொண்டிருக்கிறது. இதை இரண்டு பேரும் உறுதிப்படுத்தும் வகையில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

    இவர்கள் திருமணம் செய்துகொள்வார்களா? என்று எதிர்பார்ப்பு நிலவி வரும்நிலையில், இருவருக்கும் வரும் டிசம்பர் மாதம் திருமணம் நடைபெறவுள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது. திருப்பதியில் வைத்து இவர்களது திருமணத்தை நடத்த உறவினர்கள் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.



    இருவரும சேர்ந்த தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார்கள். அந்த படத்தை இருவருமே ரொம்பவும் எதிர்பார்த்து வருகிறார்கள். எனவே, அந்த படம் வெளிவந்த பிறகு, இருவரும் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்று கோலிவுட் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. 
    ஜெயம் ரவி அடுத்து விஜய்யிடம் சம்பளம் வாங்காமல் ஒரு படத்தில் நடித்துக் கொடுப்பதாக கூறியுள்ளார்.
    இயக்குனர் விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் ‘வனமகன்’. இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக சாயிஷா நடித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். திங் பிக் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ஏ.எல்.அழகப்பன் இப்படத்தை தயாரித்துள்ளார்.

    வருகிற ஜுன் 23-ந் தேதி இப்படம் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், நடிகர் ஜெயம் ரவி இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து படம் குறித்த அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். அப்போது அவர் கூறும்போது, இந்த படத்தில் பணியாற்றியபோது ஒரு குழந்தைபோல் பார்த்துக்கொண்டனர். என்னுடைய அப்பாவுக்கு பிறகு அதிக பொருட்செலவு செய்து இந்த படத்தை எடுத்திருக்கிறார்.



    இந்த படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். அப்படி ஒருவேளை இந்த படம் பெரிய அளவில் போகவிட்டால் விஜய்க்கு அடுத்த படத்தை நான் சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுப்பேன் என்று தெரிவித்தார். பின்னர், சம்பளம் வாங்காமல் நடிப்பது சாத்தியமில்லை என்றாலும், இரண்டு பேரும் சேர்ந்தாவது அடுத்த படத்தை தயாரிப்போம் என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.
    மராத்தியில் வெளிவந்து வெற்றிநடைபோட்ட ‘சாய்ரட்’ படம் தமிழிலும் ரீமேக் செய்யப்போவதாக கூறப்படுகிறது.
    ரிங்கு ராஜ்குரு மற்றும் ஆகாஷ் உள்ளிட்டோர் நடிப்பில் மராத்தியில் வெளிவந்த படம் ‘சாய்ரட்’. இப்படத்தை நாகராஜ் மஞ்சுளே என்பவர் இயக்கியிருந்தார். ரூ.5 கோடியில் உருவான இப்படம் வசூலில் ரூ.150 கோடி தாண்டி வசூலித்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது.

    இந்நிலையில், இப்படத்தை தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்வதற்கான உரிமையை ராக்லைன் வெங்கடேஷ் வாங்கியிருந்தார். இப்படத்தின் கன்னடத்தில் உருவாக்கி வெளியிட்டு பெரிய வரவேற்பை பெற்றனர். தற்போது, இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரீமேக் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.



    இதில், முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படத்தை எடுக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அனைவருக்கும் தெரிந்த நடிகர்கள் நடித்தால் இப்படத்தின் கதைக்கு சரியாக இருக்காது என்பதாலேயே இந்த முடிவை படக்குழு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இரண்டு மொழிகளிலும் ரீமேக் செய்வதற்கு மராத்தியில் இயக்கிய நாகராஜ் மஞ்சுளேவிடமே பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் கூறப்படுகிறது. இதற்கான நடிகர், நடிகைகள் தேர்வு விரைவில் தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
    ×