என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    நடிகர் கமல்ஹாசனை மூன்றாம் தர நடிகர் என விமர்சிப்பதா? என்று அமைச்சருக்கு பின்னணி பாடகி சின்மயி கண்டனம் தெரிவித்துள்ளார்.
    சினிமா பின்னணி பாடகி சின்மயி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    “நடிகர் கமல்ஹாசனை அமைச்சர் சி.வி.சண்முகம் விமர்சித்து கருத்து கூறி இருக்கிறார். கமல்ஹாசன் ஒரு மூன்றாம் தர நடிகர் என்றும், பணத்துக்காக அவர் எதையும் செய்வார் என்றும், கையில் படங்கள் இல்லாமல் இருக்கிறார் என்றும் குறை கூறியுள்ளார். கமல்ஹாசன் நடத்தி வரும் டெலிவிஷன் நிகழ்ச்சி பெரிய வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த நிகழ்ச்சி பார்வையாளர்கள் விஷயத்தில் வரலாறு படைத்து இருக்கிறது.

    அது ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி. அதுவா கலாசார சீரழிவு? 40 வருடங்களுக்கு முன்பு கிராம பகுதிகளில் கோவில் விழாக்களில் கிராமிய கலைநிகழ்ச்சிகளும், தெருக்கூத்துகளும் மட்டுமே நடந்தன. ஆனால் இப்போது கோவில் விழாக்களுக்கு சென்று பாருங்கள். அங்கு ரிக்கார்டு டான்சுகளும், வீடியோ படங்களையும் தான் பார்க்க முடியும். அது ரொம்ப கலாசார முன்னேற்றமா? அதுவும் கோவில்களில்..

    கலாசார பாதுகாப்பு என்று பேசுவதாக இருந்தால் கடற்கரையை சுத்தப்படுத்துங்கள். அங்கு சாமானியர்கள் குடும்பத்துடனும், குழந்தைகளுடனும் சென்று நேரத்தை செலவிட முடியாத அளவுக்கு கண்கூசும் காட்சிகளை பார்க்க வேண்டி இருக்கிறது.

    கமல்ஹாசன் மிக சிறந்த நடிகர். உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்று இருக்கிறார். அவரை நீங்கள் மூன்றாம் தர நடிகர் என்று ஒருமையில் கூறுகிறீர்கள். உங்கள் அமைச்சர் பதவியின் கண்ணியம் ஒப்பிட முடியாதது. பிரபலமாக இருப்பவரை பற்றி இப்படி பேசி இருப்பது அறுவெறுக்கத்தக்கது. சந்தர்ப்பவசமானது.

    ரஜினிகாந்தும் அமைப்புகள் ஊழல்மயமாகிவிட்டது என்று கூறி இருக்கிறார். அவருக்கு ரசிகர் பலம் உள்ளது. மத்திய அரசும் அவர் மீது நம்பிக்கை வைத்து இருக்கிறது. அதனால் அவரை பற்றி பேசவில்லை. கலைஞர்களும் இந்த நாட்டின் பிரஜைகள்தான். கருத்து கூறும் உரிமை அவர்களுக்கு இருக்கிறது. கடந்த சில மாதங்களாக மக்கள் தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். ஒரு அமைச்சராக அதற்கு என்ன நடவடிக்கை எடுத்தீர்கள். முதல்-அமைச்சரிடமாவது விவாதித்தது உண்டா?

    சட்டவிரோதமாக மணல் எடுப்பவர்கள் பற்றி கேள்வி கேட்டது உண்டா? சாதியை சொல்லியும் கமல்ஹாசனை அவமதித்து இருக்கிறீர்கள். அது அவருக்கு பொருந்தாது. கமல்ஹாசன் பெரியார் கொள்கைகளை பின்பற்றி வாழ்கிறார். ஒரு ஆளும் கட்சியில் அமைச்சராக இருந்து கொண்டு இதுபோன்று பேசுவது ஜனநாயகத்துக்கு விரோதமானது”.

    இவ்வாறு சின்மயி கூறியுள்ளார்.
    நல்ல கதைகள் அமைந்தால் சினிமாவில் நடிப்பேன் என்று ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
    ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி உள்ளேன். இதில் தனுஷ், அமலாபால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதை பிரதிபலிக்கும் வலுவான கதாபாத்திரத்தில் கஜோல் வருகிறார். அவர் பெரிய நடிகையாக இருந்தாலும் படப்பிடிப்பில் இனிமையாகவே பழகினார்.

    அதிரடி கலந்த குடும்ப பாங்கான படமாக தயாராகி உள்ளது. இசைக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் இந்த படம் உருவாகி உள்ளது. எனது இயக்கத்தில் இது முக்கிய படமாக இருக்கும். ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் மூன்றாம் பாகமும் உருவாக வாய்ப்பு உள்ளது.

    அஜித்குமார் நடிக்கும் படத்தை இயக்க ஆர்வமாக உள்ளது. தெலுங்கில் சிரஞ்சீவி படத்தை இயக்க விரும்புகிறேன். புதிதாக சினிமாவுக்கு வரும் பெண் இயக்குனர்கள் திறமைசாலிகளாக இருக்கிறார்கள். இசை, ஒளிப்பதிவு துறைகளிலும் பெண்கள் அதிகம் வரவேண்டும்.

    கமல்ஹாசன் மகள்கள் இருவரும் சினிமாவில் நடிக்கிறார்கள். எனக்கும் நடிக்க வாய்ப்புகள் வந்தன. கதைகள் பிடிக்காததால் நடிக்கவில்லை. நல்ல கதையும் கதாபாத்திரமும் அமைந்தால் சினிமாவில் நிச்சயம் நடிப்பேன்.

    கமல்ஹாசன் சமீபத்தில் பேசிய கருத்துகள் சர்ச்சையாகி உள்ளது. கமல்ஹாசன் உறுதியானவர். எந்த விஷயமாக இருந்தாலும் அதை நன்றாக உணர்ந்தே அவர் பேசுவார்.

    எனது தந்தையும் அவரும் நீண்டகால நண்பர்களாக இருக்கிறார்கள். என் தந்தை ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்பது குறித்து கருத்துச்சொல்ல விரும்பவில்லை.

    இவ்வாறு சவுந்தர்யா கூறினார்.
    கன்னட நடிகை சஞ்சனா நிர்வாணமாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கர்நாடக மாநிலம் தண்டுபாளையா பகுதியை சேர்ந்தவர்கள், பெண்களை கற்பழித்து கொலை செய்வது, நகைகளை கொள்ளையடிப்பது போன்ற கொடூரமான சம்பவங்களில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக தண்டுபாளையா என்ற பெயரில் கன்னடத்தில் சினிமா படம் எடுக்கப்பட்டது. அந்த படத்தில் பிரபல கன்னட நடிகை பூஜாகாந்தி நடித்திருந்தார். இந்த படத்தில் அவர் ஒரு காட்சியில் அரை நிர்வாணமாக நடித்திருந்தார். இது கர்நாடகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனாலும் தண்டுபாளையா படம் கர்நாடகத்தில் வெற்றிகரமாக ஓடியது.

    இதனால் தண்டுபாளையா படத்தின் அடுத்த பாகமாக தண்டுபாளையா-2 என்ற படம் தயாரிக்கப்பட்டு தற்போது கர்நாடகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் கன்னட நடிகை சஞ்சனா நடித்துள்ளார். இந்த நிலையில், நடிகை சஞ்சனாவை சிறையில் இருப்பது போன்றும், அவரை போலீஸ் அதிகாரி துன்புறுத்துவது போலவும், அவரது கைகள் கட்டப்பட்டு நிர்வாணமாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் நேற்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தண்டுபாளையா-2 படத்திற்காக அந்த காட்சிகள் எடுக்கப்பட்டதாகவும், அதில், நடிகை சஞ்சனா நடித்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் தண்டுபாளையா-2 படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பிய போது, நடிகை சஞ்சனா நிர்வாணமாக நடித்திருப்பது போன்ற சில காட்சிகள் துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது அந்த காட்சிகள் தான் சமூக வலைதளங்களில் வெளியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து நடிகை சஞ்சனா கூறியதாவது:-

    நான் நிர்வாணமாக இருப்பது போன்ற சில வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. இதனை நான் எதிர்பார்க்கவில்லை. அது எப்படி? வெளியானது என்று தெரியவில்லை. இதுதொடர்பாக படத்தின் தயாரிப்பாளர், இயக்குனரிடம் கேட்டுள்ளேன். அவர்கள் ஆந்திராவில் இருப்பதால், இந்த விவகாரம் பற்றி இன்னும் 2 நாட்களில் முழு விபரங்களை தெரிவிப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பி.வி.பிரசாத் இயக்கத்தில் அவரே தயாரித்து, நடித்திருக்கும் படமான ‘சகுந்தலாவின் காதலன்’ படத்தின் முன்னோட்டம்.
    பிரசாத் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் பி.வி.பிரசாத் தயாரித்து, இயக்கி, நாயகனாக நடிக்கும் படம் ‘சகுந்தலாவின் காதலன்’.

    இதில் நாயகியாக பானு நடிக்கிறார். இவர்களுடன் கருணாஸ், சுமன், பசுபதி, நான் கடவுள் ராஜேந்திரன், ஜெகன், ராஜ்கபூர், மனோபாலா, மனோ சித்ரா, ஜார்ஜ், நிப்பு, ஆகியோர் நடிக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு - ராசாமதி, வசனம் - ஆ.வெண்ணிலா, கலை - சகு, நடனம் - பாபி ஆண்டனி , ஸ்டண்ட் - சுப்ரீம் சுந்தர், ஆக்‌ஷன் பிரகாஷ், எடிட்டிங் - வி.டி.விஜயன், என்.கணேஷ் குமார்.

    கதை, திரைக்கதை, பாடல்கள், இசை, தயாரிப்பு, இயக்கம் - பி.வி.பிரசாத். இவர் காதலில் விழுந்தேன் படத்தை இயக்கியவர்.

    படம் பற்றி கூறிய அவர்... ‘“காதலில் விழுந்தேன்’ போல சகுந்தலாவின் காதலன் படம் வெற்றி பெறும். இந்தபடத்தில் இசையமைப்பாளர் என்கிற கூடுதல் பொறுப்பையும் நான் ஏற்றிருக்கிறேன். காதலில் விழுந்தேன் படத்தில் நகுல் கதாபாத்திரம் எப்படி பேசப்பட்டதோ அதைப் போல இதில் ஹரி கிருஷ்ணன் என்கிற என் கதாபாத்திரம் வித்தியாசமாக உணரப்படும்.

    ஒரே வீட்டில் காந்தியும் ஹிட்லரும் இருந்தால் எப்படி இருக்கும் என்கிற கற்பனை திரை வடிவமே இந்தபடம்.

    காந்தி தனது பக்கம் ஹிட்லரை இழுக்க முயற்சிப்பதும் ஹிட்லர் தனது பக்கம் காந்தியை இழுக்க முயற்சிப்பதும் தான் கதை. இந்த கதையை ஐந்து கோணங்களில் ஐந்து சம்பவங்களில் உள்ளடக்கி சொல்லி உள்ளோம். சென்னை, ஹைதராபாத், ராஜமுந்திரி, செங்கல்பட்டு, பாண்டிச்சேரி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது” என்றார்.
    மிஷ்கின் - விஷால் ரசிகர்களுக்கு இன்று மாலை சிறப்பு விருந்து ஒன்று காத்திருக்கிறது.
    மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா இணைந்து நடித்துவரும் படம் ‘துப்பறிவாளன்’. விஷாலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி தயாரித்து வரும் இப்படத்தில், அனு இம்மானுவேல், வினைய், கே.பாக்யராஜ், ஆண்ட்ரியா, ஷாஜி, தீரஜ், அபிஷேக், ஜெயப்ரகாஷ், தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

    ஆங்கிலத்தில் வெளிவந்த பிரபல துப்பறியும் நாவலான ‘ஷெர்லாக் ஹோம்ஸ்’, தமிழில் வெளிவந்த பிரபல துப்பறியும் நாவலான ‘துப்பறியும் சாம்பு’ போன்ற ஒரு கதை `துப்பறிவாளன்'.

    படம் குறித்து இயக்குநர் மிஷ்கின் கூறியிருப்பதாவது,

    விஷாலுக்கு மிகவும் பலமான கதாபாத்திரம். படத்தில் விஷாலுடன் பயணிக்கும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பிரசன்னா நடித்துள்ளார். ரசிகர்களை மகிழ்விக்கும் அறிவுபூர்வமான துப்பறியும் காட்சிகள், மெய்சிலிர்க்க வைக்கும் சண்டை காட்சிகள், இதோடு இணைந்து ஒரு மெல்லிய காதல் இருக்கும் என்று கூறியிருக்கிறார்.

    ஆகஸ்டு மாதம் வெளியாகவிருக்கும் இப்படத்தின் டீசர் இன்று மாலை 4 மணியளவில் வெளியிடப்படுகிறது. இப்படத்திற்கு அருள் கொரோல்லி இசையமைத்திருக்கிறார்.
    டுவிட்டரில் இருந்து விலகியது ஏன்? என்பது பற்றி நடிகை குஷ்பு விளக்கம் அளித்துள்ளார்.
    நடிகை குஷ்பு டுவிட்டர் பக்கத்தில் இணைந்து தனது கருத்துகளை வெளியிட்டு வந்தார். அரசியல், சினிமா சம்பந்தப்பட்ட தனது கருத்துகளை அவ்வப்போது டுவிட்டரில் பதிவு செய்து வந்தார். 9 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் டுவிட்டரில் அவரை பின் தொடர்ந்தனர்.

    இந்தநிலையில் அவர் டுவிட்டரில் இருந்து திடீரென்று விலகிக் கொண்டார்.

    இதுபற்றி நிருபரிடம் அவர் கூறியதாவது:-

    நான் டுவிட்டருக்கு அடிமையானது போல் சமீபகாலமாக ஒரு உணர்வு எனக்குள் ஏற்பட்டது. காலையில் எழுந்ததுமே கை செல்போனை தான் தேடுகிறது. இன்று நாட்டில் என்ன பிரச்சினை? அதற்கு நாம் என்ன கருத்து சொல்லலாம்? என்ற சிந்தனை தான் ஓடிக்கொண்டு இருக்கிறது. போதைக்கு அடிமையானது போல ஒரு உணர்வு.

    காலையில் பத்திரிகைகளை கூட படிக்க முடியவில்லை. டுவிட்டரிலேயே வாழ்க்கை ஓடிக்கொண்டு இருப்பது போல், உணர்வு ஏற்பட்டு வந்தது. டுவிட்டர் இல்லை என்றால் வாழ முடியாதா? என யோசிக்க ஆரம்பித்தேன்.

    அதன் விளைவாக டுவிட்டரில் இருந்து நான் விலகிக் கொண்டேன்.

    இவ்வாறு நடிகை குஷ்பு கூறினார்.
    `மிக மிக அவசரம்' படத்தை பெண் காவலர்களுக்கு சமர்ப்பணம் செய்வதாக படத்தின் இயக்குநர் சுரேஷ் காமாட்சி தெரிவித்திருக்கிறார்.
    மெரீனாவாகட்டும், நெடுவாசலாகட்டும் தன் உரிமைக்காகவும், மண்ணைக் காக்கவும், வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கவும் போராடும் பெண்களையும், குழந்தைகளையும் ஆண் காவலர்களும் / பெண் காவலர்களும் தங்கள் கடமையின் காரணமாக துரத்தித் துரத்தி தடியால் அடிக்கிறார்கள்.

    அவ்வாறு அடிக்கக் கிளம்பிய காவலர்களில் பலர் கிராமம் அல்லது விவசாயக் குடும்ப பின்னணியிலிருந்து வந்தவர்களாக இருக்கக்கூடும்!

    மதுக்கடை வேண்டாம் என்று மாரிலடித்து போராட்டம் நடத்தும் தாய்மாரின் கன்னத்தில் 'பளார்... பளார்' என பொதுமக்கள் கண்ணெதிரே அறைகிறார் போலீஸ் உயரதிகாரி ஒருவர்.

    அவரின் சேவையைப் பாராட்டி பதவி உயர்வும் கிடைக்கிறது.

    அதே இடத்தில் தாய்மார்கள் பலரையும் ஆண் / பெண் போலீஸ் அடித்து விரட்டியது.

    அடிவாங்கிய தாய்மார்களில் அடித்தவர்களின் சொந்தக்காரர்களும் இருந்திருக்கக் கூடும்.

    இதில் மறுக்க முடியாத, வீதிக்கு வராத உண்மைகள் நிறைய உண்டு. பார்க்கும் வேலையைத் தக்கவைக்க துரத்தி அடித்துவிட்டு, என் உறவை அடிக்கவா காக்கிச் சட்டை போட்டேன்?? என்று அன்றைய இரவு உறக்கம் தொலைத்த காவலர்களும் உண்டு.

    காக்கிச் சட்டையைக் கழட்டும் போது மனசையும் சேர்த்து கழட்டிப் போடுபவர்களின் எண்ணிக்கை கொஞ்சம்தான்.

    அவர்களை அடையாளம் காண காக்கிச் சட்டை போட்டிருக்க வேண்டிய அவசியமில்லை! உறவுகளை நேசிக்கத் தெரிந்த மனிதனாக இருந்தால் மட்டும் போதும்.

    தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, காவலர்களின் வலியை அறிந்து 'மிக மிக அவசரம்' படத்தின் கதையை செதுக்கியுள்ளார். காவலர்களுக்கும் மனிதாபிமானம், மண்மீதான பற்று, மக்கள் போராட்டம் இவைகளில் அக்கறை உண்டு என்பதை படத்தில் வரும் காட்சிகளும் வசனங்களும் அழகாக பேசியிருக்கிறது. அதிலும் பெண் காவலர்கள் இந்தப் படத்தைப் பார்த்தால் ஒருசொட்டு கண்ணீருடன் இந்த படம் உண்மையை பேசியிருக்கிறது என அங்கீகரிப்பார்கள்.

    காவல் துறையில் பணியாற்றும் சகோதரிகளுக்கும் இந்தப் படத்தை சமர்ப்பணம் செய்ய உள்ளார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

    இப்படத்தில் ஸ்ரீப்ரியங்கா நாயகியாக நடித்துள்ளார். அரீஷ் குமார் கதாநாயகனாகவும், இயக்குநர் சீமான் காவல் துறை உயரதிகாரியாகவும், 'வழக்கு எண்' முத்துராமன், இயக்குநர் இ.ராமதாஸ், 'ஆண்டவன் கட்டளை' அரவிந்த், 'சேதுபதி' லிங்கா, 'பரஞ்சோதி' படத்தின் நாயகன் சாரதி, இயக்குநர் சரவண சக்தி, வெற்றிக்குமரன், வி.கே.சுந்தர், குணசீலன், காவேரி மாணிக்கம், மாஸ்டர் சாமுண்டி ஆகியோர் நடித்துள்ளனர்.

    கதை, வசனத்தை இயக்குநர் கே.பி.ஜெகன் எழுத முதல் முறையாக இயக்கியுள்ளார் சுரேஷ் காமாட்சி. பாலபரணி ஒளிப்பதிவில், பாலமுருகன் ஆர்ட் டைரக்ஷன் பணிகளை மேற்கொண்டிருக்கிறார். `மிக மிக அவசரம்' படத்தை வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. 
    பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் நடிகர் கமல்ஹாசனை அமைச்சர்கள் மிரட்டுவது சரியல்ல என்று நடிகர் ராதாரவி கூறியுள்ளார்.
    தர்மபுரி பகுதியில் நடைபெறும் ‘பொறுக்கீஸ்’ என்ற புதிய சினிமா படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக வந்த நடிகர் ராதாரவி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக அரசின் செயல்பாட்டை பற்றி நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ள கருத்தில் எந்த தவறும் இல்லை. அரசை பற்றி விமர்சிக்க ஒவ்வொரு வாக்காளருக்கும் உரிமை உள்ளது. மக்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் நடிகர் கமல்ஹாசனை தனிப்பட்ட முறையில் தமிழக அமைச்சர்கள் விமர்சிப்பதும், வழக்கு போடுவோம் என்று மிரட்டுவதும் சரியல்ல.

    கமல்ஹாசனுக்கு எப்போதும் நான் துணையாக நிற்பேன். தி.மு.க. வலுவிழந்து உள்ளதால் அந்த கட்சியின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கமல்ஹாசனை பிடித்து கொண்டுள்ளார் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார். தி.மு.க. என்றும் வலுவாக உள்ளது. அமைச்சர் ஜெயக்குமார் தான் தற்போது வலுவில்லாமல் உள்ளார்.

    ஜனாதிபதி தேர்தலில் தமிழகத்தின் உரிமைகளை பாதுகாப்பதற்கான எந்தவித கோரிக்கையையும் வலியுறுத்தாமல் அ.தி.மு.க. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், பா.ஜ.க. வேட்பாளருக்கு வாக்களித்து உள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், ஹைட்ரோ கார்பன் திட்டம், ஜி.எஸ்.டி. மசோதா போன்ற பல்வேறு பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்ற கோரிக்கை கூட வைக்காமல் இந்த தேர்தலில் வாக்களித்திருப்பது மத்திய அரசுக்கு அ.தி.மு.க. அடி பணிந்துள்ளதை காட்டுகிறது.

    தமிழகத்தில் மட்டும்தான் ஊழல் நடக்கிறது என்றில்லாமல் சிறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி கொடுத்து கர்நாடகாவிலும் ஊழல் நடக்கிறது என்பதை வெளிக்கொண்டு வந்து அந்த மாநிலத்திலும் சசிகலா குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளார். அதற்காக சசிகலாவை நான் பாராட்ட விரும்புகிறேன். இந்த ஊழலை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபாவையும் நாம் பாராட்ட வேண்டும்.

    முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அ.தி.மு.க.விற்கு சரியான தலைமை இல்லை. அ.தி.மு.க.வில் எத்தனை அணிகள் உள்ளன என்பதே தெரியவில்லை. கட்சியின் இரட்டை இலை சின்னத்தை பறிகொடுத்து விட்டனர். தற்போது தலையில்லாத முண்டமாக இருக்கிறது அ.தி.மு.க. முதுகெலும்பு இல்லாத அரசாக தமிழக அரசு உள்ளது. அ.தி.மு.க. தற்போது அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்க நிர்வாகி சிங்காரவேலு உடனிருந்தார்.
    `விவேகம்' படத்தின் மூன்றாவது பாடலாக நாளை வெளியாக இருக்கும் "காதலாட" பாடலில் முக்கிய பிரபலங்கள் இடம்பெற்றுள்ளனர்.
    சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் `விவேகம்'. அஜித் நடித்துள்ள படங்களிலேயே அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படமும் `விவேகம்' தான். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்தாலும், பெரும்பாலும் பல்கேரியாவில் உள்ள பிரபல ஸ்டூடியோவிலேயே படமாக்கப்பட்டுள்ளது.

    சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் நல்ல வரவேற்பை பெற்றதுடன், `கபாலி', `தெறி' உள்ளிட்ட படங்களின் டீசர் சாதனைகளையும் முறியடித்துள்ளது.

    அனிருத் இசையில் "சர்வைவா" மற்றும் "தலை விடுதலை" பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், `விவேகம்' மூன்றாவது பாடல் நாளை வெளியாகும் என்று அனிருத் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். அஜித் - காஜல் அகர்வாலுக்கு இடையேயான காதல் பாடலாக இது இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

    இந்த பாடலின் சிறப்பம்சம் என்னவென்றால், இந்த பாடலை கபிலன் வைரமுத்து எழுதியிருக்கிறார். முதல்முறையாக அனிருத், சிவாவுடன் கபிலன் இணைந்திருக்கிறார். அஜித்துக்காக கபிலன் எழுதியுள்ள முதல் பாடல் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. "காதலாட" என்ற வார்த்தையுடன் தொடங்கும் இந்த பாடல் ஒரு மெல்லிசை பாடலாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பாடலை பிரதீப் குமார் - சாஷா திரிபாதி இணைந்து பாடி இருக்கின்றனர்.

    காஜல் அகர்வால், விவேக் ஓபராய், அக்‌ஷரா ஹாசன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படம் வருகிற ஆகஸ்டு மாதம் 10-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
    ”அமையாது அலைபவர்க்கும் அமைந்த என் தோழர்க்கும், விரைவில் ஒரு விளி கேட்கும்” என்று தன்மீது குற்றச்சாட்டு தெரிவித்த அமைச்சர்களுக்கு நடிகர் கமலஹாசன் பதிலடி கொடுத்துள்ளார்.
    சென்னை:

    ”அமையாது அலைபவர்க்கும் அமைந்த என் தோழர்க்கும், விரைவில் ஒரு விளி கேட்கும்” என்று தன்மீது குற்றச்சாட்டு தெரிவித்த அமைச்சர்களுக்கு நடிகர் கமலஹாசன் பதிலடி கொடுத்துள்ளார்.

    தமிழக அரசியலில் ஊழல் நிறைந்துள்ளது என நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்ததற்கு தமிழக அமைச்சர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. பல அமைச்சர்கள் கமல்ஹாசனை விமர்சித்து காரசாரமாக பேட்டியளித்தனர். இதனையடுத்து, நடிகர் கமல்ஹாசனுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பில் இருந்து கருத்துக்கள் வெளியானது.

    தன் மீது குற்றம் சுமத்தியவர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக டுவிட்டர் பக்கத்தில் இன்று சில கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.

    அதில், ”அமையாது அலைபவர்க்கும் அமைந்த என் தோழர்க்கும், விரைவில் ஒரு விளி கேட்கும். கேட்டு அமைதி காப்பீர். உண்மை வெயிலில் காயும் நேற்றைய மழைக்காளான்” என்று முதலில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.

    மேலும்,

    இடித்துரைப்போம் யாருமினி மன்னரில்லை
    துடித்தெழுவோம் மனதளவில் உம்போல் யாம் மன்னரில்லை
    தோற்றிறந்தால் போராளி
    முடிவெடுத்தால் யாம் முதல்வர்
    அடிபணிவோர் அடிமையரோ?
    முடிதுறந்தோர் தோற்றவரோ?
    போடா மூடா எனலாம் அது தவறு
    தேடாப் பாதைகள் தென்படா
    வாடா தோழா என்னுடன்
    மூடமை தவிர்க்க முனைவரே தலைவர்

    அன்புடன் நான்

    என்று ஒரு கவிதையையும் அவர் பதிவிட்டுள்ளார். இதனால், விரைவில் கமலஹாசன் முக்கிய அறிவிப்பு ஒன்றை கூறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நூறு படங்களுக்கு மேல் நடித்தவர் விஜயகுமாரி. பள்ளியில் படிக்கும்போது, சினிமா என்றாலே அவருக்கு எட்டிக்காய் கசப்பு! அப்படிப்பட்டவர் சினிமாவில் நடித்து பெரும் புகழ் பெற்றார்.
    நூறு படங்களுக்கு மேல் நடித்தவர் விஜயகுமாரி. பள்ளியில் படிக்கும்போது, சினிமா என்றாலே அவருக்கு எட்டிக்காய் கசப்பு! அப்படிப்பட்டவர் சினிமாவில் நடித்து பெரும் புகழ் பெற்றார்.

    விஜயகுமாரியின் சொந்த ஊர் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம். தந்தை ராமசாமி கவுண்டர். தாயார் தங்கலட்சுமி அம்மாள்.

    விஜயகுமாரிக்கு ஒரு அக்காள், ஒரு தங்கை.

    விஜயகுமாரி மிகவும் அமைதியானவர். யாரிடமும் அதிகம் பேசமாட்டார். பள்ளிக்கூடத்தில் நடைபெறும் விளையாட்டுப்போட்டி, பாட்டுப்போட்டி, நடனப்போட்டி எதிலும் கலந்து கொள்வதில்லை. தான் உண்டு தன் படிப்பு உண்டு என்று இருப்பார்.

    ஒரு சமயம், விஜயகுமாரியை பள்ளி ஆசிரியை அழைத்து, "இந்த வருடம் பள்ளி ஆண்டு விழாவில் நீ கட்டாயம் நடனம் ஆடவேண்டும். தட்டிக் கழிக்க எந்தக் காரணமும் சொல்லக்கூடாது'' என்று கண்டிப்புடன் கூறிவிட்டார்.

    ஆட மறுத்தால், ஆசிரியை தன்னை நிச்சயம் பெயிலாக்கி விடுவார் என்று விஜயகுமாரி பயந்தார். என்றாலும், எந்த நடனத்தை எப்படி ஆடுவது என்று புரியவில்லை. இதுபற்றி ஆசிரியையிடம் கூற, "வேதாள உலகம்'' படத்தில் பத்மினி ஆடிய "வாசமுள்ள பூப்பறிப்பேனே'' என்ற நடனத்தை ஆட பயிற்சி அளித்தார்கள்.

    பள்ளி ஆண்டு விழாவில் பயந்து கொண்டேதான் ஆடினார், விஜயகுமாரி. ஆனால் நடனம் சிறப்பாக இருந்ததாகக் கூறி, பரிசும் வழங்கினார்கள்!

    ஒரு வாரம் கழிந்தது. விஜயகுமாரியை ஆசிரியை அழைத்தார். "நீ அழகாக இருக்கிறாய். ஆகவே சினிமாவில் நடிக்க முயற்சி செய். சிறந்த நடிகையாக வருவாய்'' என்றார்.

    அவர் மீது விஜயகுமாரிக்கு ரொம்பகோபம். காரணம், அவருக்கு சினிமா என்றாலே பிடிக்காது! அம்மா சினிமாவுக்கு அழைத்துப் போனால், அழுதுகொண்டே போவார். படம் பார்க்கும்போது, தூங்கி விடுவார்!

    ஆனால் ஆசிரியை விட்டபாடில்லை. `சினிமாவில் நடி. வாழ்க்கையில் முன்னேறலாம்' என்று உபதேசித்தபடி இருந்தார்.

    இதனால் மெல்ல மெல்ல, விஜயகுமாரி மனதில் சினிமா ஆசை துளிர்விட ஆரம்பித்தது.

    ஒரு நாள் தன் மனதைத் திடப்படுத்திக் கொண்டு, "அப்பா! நான் சினிமாவில் நடிக்க வேண்டும்!'' என்று தந்தையிடம் கூறினார். அவ்வளவுதான். அப்பா `பளார்' என்று விட்ட அறையில், விஜயகுமாரியின் கன்னம் வீங்கிவிட்டது!

    "உன்னை பள்ளியில் ஆடவிட்டதே தவறு. சினிமா கேட்கிறதா, சினிமா! இனிமேல் நீ பள்ளிக்குப் போகவேண்டாம்!'' என்று கோபத்துடன்

    கூறினார்.அன்று விஜயகுமாரி சாப்பிடவில்லை. அழுதுகொண்டே இருந்தார். காய்ச்சல் வேறு வந்துவிட்டது.

    அதை பார்த்துவிட்டு அவர் அம்மாவும் அழ ஆரம்பித்துவிட்டார்.

    அந்தக் காலத்தில் சில குடும்பங்களில் யாருக்காவது உடல் நலம் இல்லை என்றால், டாக்டரைக் கூப்பிடுவதற்குப் பதில் ஜோதிடரைக் கூப்பிடுவார்கள்!

    விஜயகுமாரியின் அப்பா ஒரு ஜோதிடரை அழைத்தார். விஜயகுமாரியின் ஜாதகத்தை அவரிடம் கொடுத்து, "சினிமாவில் நடிக்க வேண்டும் என்று அடம் பிடிக்கிறாள்'' என்ன செய்யலாம் என்று ஜாதகத்தைப் பார்த்து சொல்லுங்கள்'' என்றார்.

    ஜாதகத்தை ஆராய்ந்த ஜோசியர், "உங்கள் மகள் நிச்சயமாக சினிமாவில் நடிப்பாள். பேரும் புகழும் பெறுவாள்'' என்று அடித்துச்

    சொன்னார்.ஏவி.எம். விளம்பரம்

    அந்த சமயத்தில் பத்திரிகைகளில் ஏவி.எம். நிறுவனத்தின் விளம்பரம் ஒன்று பிரசுரமாகியிருந்தது. "புது முகங்கள் தேவை. போட்டோவுடன் விண்ணப்பிக்கவும்'' என்று குறிப்பிடப்பட்டிருந்த அந்த விளம்பரத்தை, பெற்றோரிடம் காண்பித்தார், விஜயகுமாரி.

    அப்பா, அம்மா இருவரும் கலந்து பேசி, மகள் விருப்பத்துக்கு தடை போடவேண்டாம் என்று முடிவு செய்தார்கள். விஜயகுமாரியை போட்டோ ஸ்டூடியோவுக்கு அழைத்துச் சென்று சில படங்கள் எடுத்து, ஏவி.எம். நிறுவனத்துக்கு தபாலில் அனுப்பி வைத்தார்கள்.

    இதன் பிறகு நடந்தது பற்றி விஜயகுமாரி கூறுகிறார்:-

    "நான் தீவிர அம்மன் பக்தை. எங்கள் ஊர் மேட்டுப்பாளையத்தில் இருக்கும் வனபத்திரகாளி அம்மனையும், எங்கள் குல தெய்வம் முருகனையும் தினம் தினம் வேண்டிக் கொண்டிருந்தேன், ஏவி.எம். ஸ்டூடியோவில் இருந்து கடிதம் வரவேண்டும் என்று! எப்போதும் வாசலிலேயே உட்கார்ந்து கொண்டு, ஒவ்வொரு நாளும் தபால் காரரை எதிர்பார்த்துக் கொண்டிருப்பேன்.

    ஒருநாள் ஏவி.எம்.மிலிருந்து கடிதம் வந்தது. அதில் எங்களை ஏவி.எம்.மிற்கு வரும்படி அழைத்திருந்தார்கள். எனக்கு அளவில்லாத மகிழ்ச்சி.

    நானும், என் பெற்றோரும் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றோம். அங்கிருந்து ஏவி.எம். ஸ்டூடியோவிற்கு சென்றோம்.

    அங்கு மானேஜர் வாசுமேனன் அவர்களைப் போய்ப் பார்த்தோம். வாசுமேனன் என்னைப் பார்த்ததும், "போட்டோவில் பெரிய பெண் போல் தெரிகிறாய். நேரில் சின்னப் பெண்ணாக இருக்கிறாயே!'' என்று சிரித்துக் கொண்டே கூறினார்.

    பிறகு, "உனக்கு டான்ஸ் ஆடத்தெரியுமா?'' என்று கேட்டார். எனக்கு தெரிந்த அந்த ஒரே நடனம் - பள்ளியில் ஆடியதுதான். அந்த நடனத்தை நானே பாடிக்கொண்டு ஆடினேன்.

    "சரி. ஊருக்குப் போங்கள். நாங்கள் மறுபடியும் கடிதம் போடுகிறோம்'' என்று வாசுமேனன் கூறினார்.

    எங்களுக்கு ஒரே குழப்பம். `என்ன நடக்குமோ' என்ற கவலையுடன் ஊருக்குத் திரும்பினோம். எனக்கு வாய்ப்பு கிடைக்காது என்று என் பெற்றோர்கள் நினைத்தனர். "இனிமேல் ஏவி.எம்.மிலிருந்து கூப்பிட மாட்டார்கள். நீ பள்ளிக்குப் போய் படி. ஒருவேளை ஏவி.எம்.மிலிருந்து கடிதம் வந்தால் நாம் போவோம்'' என்று சமாதானம் சொல்வது போல சொல்லி, என்னை பள்ளிக்கு அனுப்பி வைத்தார்கள்.''

    இவ்வாறு விஜயகுமாரி கூறினார். 
    ஏ.ஆர்.முருகதாஸ் - மகேஷ் பாபு கூட்டணி உருவாகி வரும் ஸ்பைடர் படத்தில் முக்கிய பிரபலம் ஒருவர் இணைந்திருக்கிறார்.
    மகேஷ் பாபு தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் `ஸ்பைடர்' படத்தில் நடித்து முடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இப்படம் தசராவை முன்னிட்டு வருகிற செப்டம்பர் மாதம் 27-ஆம் தேதி வெளியாகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    `ஸ்பைடர்' மூலமாக மகேஷ் பாபு தமிழில் நேரடியாக அறிமுகமாகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இதில் ஹாரிஸ் இசையில், பிரிஜேஷ் சாண்டில்யா பாடல் ஒன்றை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஹிந்தி பட உலகில் சக்கை போடு போட்ட 'தனு வெட்ஸ் மனு: ரிட்டர்ன்ஸ்' படத்தில் மாபெரும் ஹிட்டான 'பண்ணோ' பாடலை பாடி புகழின் உச்சிக்கு சென்றவர் பிரிஜேஷ் சாண்டில்யா என்பது குறிப்பிடத்தக்கது.

    இது குறித்து பிரிஜேஷ் சாண்டில்யா கூறும்போது,

    ''ஏ.ஆர்.முருகதாஸ், மகேஷ் பாபு மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற ஜாம்பவான்களோடு பணிபுரிவது எனது கனவாகும். சினிமாவில் பல சாதனைகளை செய்துள்ள இவர்கள் இன்னமும் எளிமையாக இருப்பதை கண்டு வியந்தேன். இந்த வாய்ப்பினை எனக்கு அளித்ததிற்காக அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இசைக்கு மொழிகளோ, எல்லைகளோ இல்லவே இல்லை என்பதை நம்பும் எனக்கு, இப்பாடல் மூலம் தென்னிந்திய சினிமாவில் நுழைவதில் மட்டற்ற மகிழ்ச்சி.

    ஹாரிஸ் ஜெயராஜ் சாரின் இசையில் நான் பாடியிருக்கும் இப்பாடல் மிகவும் அருமையாக இருக்கிறது. இது ஒரு மாபெரும் ஹிட் பாடல் ஆகும் என உறுதியாக கூறுவேன். இசை பற்றியும் அதன் நுணுக்கங்கள் பற்றியும் ஹாரிஸ் சாரிடம் நிறைய கற்றுக்கொண்டேன். அவருடன் பணிபுரிந்ததில் எனக்கு பெருமை. இப்பாடல் ரசிகர்களை நிச்சயம் கவர்ந்து மயக்கும் என நம்புகிறேன்"

    இவ்வாறு கூறினார்.
    ×