தொழில்நுட்பம்

ஆப்பிள் ஏர்பாட்ஸ் 2 வெளியீட்டு விவரம்

Published On 2018-12-04 09:33 GMT   |   Update On 2018-12-04 09:33 GMT
ஆப்பிள் நிறுவனத்தின் புது ஏர்பாட்ஸ் 2 இயர்போன் வெளியீட்டு விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. #Apple #airpods2


ஆப்பிள் நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறை ஏர்பாட்ஸ் சாதனம் இந்த ஆண்டு செப்டம்பரில் புது ஐபோன் மாடல்களுடன் அறிமுகம் செய்யப்படலாம் என அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. பின் அக்டோபர் 30ம் தேதி நடைபெற்ற விசேஷ விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

இரு எதிர்பார்ப்புகளும் பொய்யாகி விட்ட நிலையில், பிரபல ஆப்பிள் வல்லுநரான மிங்-சி கியோ ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட்ஸ் 2 அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் அறிமுகமாகும் என தெரிவித்திருக்கிறார்.

இதைத் தொடர்ந்து முற்றிலும் புது வடிவமைப்பு கொண்ட ஏர்பாட்ஸ் இயர்போன் 2020ம் ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என அவர் தெரிவித்திருக்கிறார். மேம்படுத்தப்பட்ட புது இயர்போன்களின் விற்பனை அதிகரிக்கும் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.



தற்சமயம் ஐபோன் பயன்படுத்துவோரில் 5 சதவிகிதத்திற்கும் குறைவானோர் மட்டுமே ஏர்பாட்ஸ் பயன்படுத்தி வருகின்றனர். உலகம் முழுக்க சுமார் 100 கோடிக்கும் அதிகமானோர் ஐபோன் மாடல்களை பயன்படுத்தி வரும் நிலையில், ஏர்பாட்ஸ் இயர்போன்களின் விற்பனை அதிகரிக்கலாம் என தெரிகிறது.

முன்னதாக மேம்படுத்தப்பட்ட ஏர்பாட்ஸ் சாதனம் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என கியோ தெரிவித்திருந்தார். எனினும் ஏர்பவர் சார்ஜிங் மேட் சாதனத்தில் ஏற்பட்ட தாமதம் காரணமாக ஏர்பாட்ஸ் அறிமுகம் தள்ளிவைக்கப்பட்டது. #Apple #airpods2
Tags:    

Similar News