தொழில்நுட்பம்

டிக்டாக் என பெயர் மாற்றப்பட்ட மியூசிக்கல்.லி

Published On 2018-08-03 11:20 GMT   |   Update On 2018-08-03 11:20 GMT
பிரபல மியூசிக்கல்.லி செயலி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் பயனர்கள் தற்சமயம் டிக்டாக் சேவைக்கு மாற்றப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. #musically #TikTok


இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் மியூசிக்கல்.லி செயலி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் பயனர்கள் டிக்டாக் என்ற சேவைக்கு மாற்றப்படுகின்றனர். டிக்டாக் செயலியும் மியூசிக்கல்.லி போன்றே சிறிய அளவிலான வீடியோ பகிர்ந்து கொள்ளும் செயலி தான். 

சீனாவை சேர்ந்த இன்டர்நெட் நிறுவனமான பைட் டான்ஸ் மியூசிக்கல்.லி செயலியை கடந்த ஆண்டு நவம்பரில் கைப்பற்றியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஏற்கனவே குறிப்பிடப்பட்டதை போன்று மியூசிக்கல்.லி செயலியின் பயனர்கள், தரரவுகள் மற்றும் பின்தொடர்வோர் புதிய டிக்டாக் செயலிக்கு மாற்றப்படுவர்.

பைட் டான்ஸ் வெளியிட்டிருக்கும் தகவல்களின் படி டிக்டாக் செயலியை உலகம் முழுக்க சுமார் 50 கோடி பேர் பயன்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளது. முன்னதாக ஜூன் மாதத்தில் மியூசிக்கல்.லி தனது நேரலை செயலியான லைவ்.லி செயலியை மூடுவதாக அறிவித்து பயனர்களை சீட்டா மொபைலின் லைவ்மி செயலிக்கு மாற அறிவுறுத்தியது.



மியூசிக்கல்.லி செயலியில் பயனர்கள் தங்களது முக பாவனைகளை வீடியோவாக பதிவு செய்து, அவற்றின் பின்னணியில் பாடல்கள் அல்லது ஆடியோ போன்றவற்றை சேர்த்து, அவற்றை பகிர்ந்து கொள்ள வழி செய்தது. அந்த வகையில் புதிய டிக்டாக் செயலியில் பயனர்களுக்கு புதிய அம்சங்கள் சேர்க்கப்படுகிறது. 

அதன்படி ரியாக்ஷன் எனும் அம்சம் பயனர்கள் தங்களது நண்பர்களின் பதிவுகளுக்கு தங்களது கருத்துக்களை ஜெஸ்ட்யூர் ஃபில்ட்டர் வடிவில் சேர்க்க முடியும். இத்துடன் ஃபன்-ஹவுஸ் மிரர் கேமரா எஃபெக்ட்கள், கிரீன்ஸ்கிரீன் போன்ற எஃபெக்ட்கள் வழங்கப்படுகின்றன. 

புதிய டிக்டாக் செயலியை டவுன்லோடு செய்ய விரும்புவோர் அதன் கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்யலாம். ஏற்கனவே மியூசிக்கல்.லி செயலியை பயன்படுத்துவோருக்கு ஏற்கனவே இந்த செயலி டிக்டாக் என அப்டேட் செய்யப்பட்டு இருக்கும். #musically #TikTok
Tags:    

Similar News