தொழில்நுட்பம்
கோப்பு படம்

மனித குரல்களை புரிந்து கொள்ள ஏ.ஐ. நிறுவனத்தை வாங்கும் ஃபேஸ்புக்

Published On 2018-07-04 08:13 GMT   |   Update On 2018-07-04 08:13 GMT
லண்டனை சேர்ந்த ப்ளூம்ஸ்பரி ஏ.ஐ. எனும் செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தை ஃபேஸ்புக் கைப்பற்றுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



லண்டனை சேர்ந்த ப்ளூம்ஸ்பரி ஏ.ஐ. (Bloomsbury AI) நிறுவனத்தை கைப்பற்றுவதாக ஃபேஸ்புக் அறிவித்துள்ளது. இந்நிறுவனம் இயற்கை குரல் செயலாக்கம் செய்வதில் இயங்குகிறது. ஃபேஸ்புக்கின் அதிகாரப்பூர்வ அகாடெமிக்ஸ் பக்கத்தில், ப்ளூம்ல்பரி நிறுவனத்தின் பலம் ஃபேஸ்புக்கின் இயற்கை குரல் செயலாக்கம் செய்யும் திட்டத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

செயற்கை நுண்ணறிவு சார்ந்த சமூகத்தை பொருத்த வரை ஃபேஸ்புக் மிகப்பெரிய நிறுவனமாக அறியப்படுகிறது. ஃபேஸ்புக்கின் சொந்த செயற்கை நுண்ணறிவு ஆய்வு மையம் அல்லது FAIR அமைப்பு டீப் லெர்னிங் தொழில்நுட்பம் சார்ந்து அதிநவீன சென்சார்கள், இயற்கை குரல் செயலாக்கம் மற்றும் இதர துணை பிரிவுகளில் தொடர் ஆய்வுகளை செய்து வருகிறது. இந்த பிரிவுக்கென ஃபேஸ்புக் அதிக நிதி ஒதுக்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் வார்த்தைகளை மிக துல்லியமாக புரிந்து கொள்ளும் திறன் கொண்ட வகையில் செயற்கை நுண்ணறிவு உருவாக்க வேண்டும் என்பதே ஃபேஸ்புக் நிறுவனத்தின் இலக்காக இருக்கிறது. இதை கொண்டு சமூக வலைத்தளம் மற்றும் அதன் இதர பண்புகளை மொத்தமாக மாற்றியமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.



தற்சமயம் ஃபேஸ்புக் தரவுகளை கூர்ந்து கவனிக்க பல்வேறு பணியாளர்களை வெளிநாடுகளில் ஃபேஸ்புக் ஒப்பந்த அடிப்படையில் நியமித்துள்ளது. இந்த பணியாளர்கள் ஃபேஸ்புக்கில் போலி செய்திகள், ஆபாச தரவுகள் என பயனர்கள் குறிப்பிடும் தகவல்கள் அனைத்தையும் ஆய்வு செய்கின்றனர். மேலும் அவை ஃபேஸ்புக் விதிமுறைகளை மீறுகிறதா என்ற வகையிலும் தகவல்கள் ஆய்வு செய்யப்படுகின்றன.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் ஃபேஸ்புக் அதிக கவனம் செலுத்தி வரும் நிலையில், இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்காலத்தில் அல்காரிதம்களை பயன்படுத்த ஃபேஸ்புக் தி்ட்டமிட்டுள்ளது. எனினும், இதனை வெற்றிகரமாக செயல்படுத்த புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் எழுத்துக்களை மிக துல்லியமாக அறிந்து கொள்ளும் மென்பொருளை ஃபேஸ்புக் கண்டறிய வேண்டும். இந்த மென்பொருள் அதிநவீன செயற்கை நுண்ணறிவு கொண்டிருப்பதோடு மிகவும் சிக்கலான பிரச்சனைகளையும் கண்டறியும் திறன் கொண்டிருக்க வேண்டும்.
Tags:    

Similar News