தொழில்நுட்பம்
புகைப்படம் நன்றி: Reuters

வைரலாகும் கேம்பிரிட்ஜ் அனாலிடிகா - தொடர்ந்து வெளியாகும் உண்மை விவரங்கள்

Published On 2018-03-22 05:04 GMT   |   Update On 2018-03-22 05:04 GMT
அமெரிக்காவில் நடைபெற்ற 2016 அதிபர் தேர்தலில் ஃபேஸ்புக் தலையீடு குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி வருகிறது.
கலிஃபோர்னியா:

அமெரிக்க அதிபரை தேர்வு செய்ய 2016-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஃபேஸ்புக் தலையிட்டிருப்பது குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. அதிபர் தேர்தலில் ஃபேஸ்புக் சேவையை பயன்படுத்தி வரும் சுமார் ஐந்து கோடி பேரின் தகவல்கள் ரகசியமாக திருடப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. 

கேம்பிரிட்ஜ் அனாலிடிகா என்ற தலைப்பில் உலகம் முழுக்க பூதாகரமாய் உருவெடுத்திருக்கும் இந்த பிரச்சனை குறித்த அனைத்து கேள்விகளுக்குமான பதில்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது.

கேம்பிரிட்ஜ் அனாலிடிகா என்பது லண்டனை தலைமையகமாக கொண்டு இயங்கி வரும் அரசியல் பிரச்சார நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் ஃபேஸ்புக் பயன்படுத்தும் சுமார் ஐந்து கோடி பயனர்களின் தகவல்களை அவர்களுக்கு தெரியாமல் எடுத்துக் கொண்டு பரிந்துரைகளை வழங்கி வந்திருந்தது தெரியவந்துள்ளது.



ஃபேஸ்புக் தளத்துடன் இணைந்த கேம்பிரிட்ஜ் அனாலிடிகா பல்வேறு செயலிகளின் மூலம் பயனர் தரவுகளை சேமித்து வந்திருக்கிறது. கேம்பிரிட்ஜ் அனாலிடிகாவில் பணியாற்றிய, பணியாற்றி வரும் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஃபேஸ்புக் பயனர் தகவல்களை நூதனமாக பறித்துக் கொள்ள ஏதுவாக வேலை செய்யும் படி பிரத்யேக செயலிகளை உருவாக்கியுள்ளனர். 

இவ்வாறு கேம்பிரிட்ஜ் அனாலிடிகா சேமித்த பயனர் தகவல்களை கொண்டு, ஒவ்வொரு பயனரின் ஃபேஸ்புக் நியூஸ் ஃபீட் முழுக்க குறிப்பிட்ட தேர்தல் வேட்பாளர் குறித்த நல்ல செய்திகளையும், இவருக்கு போட்டியான வேட்பாளருக்கு எதிரான தகவல்களை அதிகளவு தெரியும்படி செய்திருக்கிறது.

அமெரிக்காவில் நடைபெற்ற 2016 அதிபர் தேர்தலில் இந்த வழிமுறையை பின்பற்றியே டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை தொடர்ந்து தேர்தல் சமயத்தில் டொனால்டு டிரம்ப்புக்கு ஆதரவாக செயல்பட்ட ஸ்டிராடஜிக் கம்யூனிகேஷன்ஸ் லேபாரட்டரீஸ் மற்றும் கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனங்களுடனான ஒப்பந்தத்தை நிறுத்திக் கொள்வதாக ஃபேஸ்புக் அறிவித்திருக்கிறது.



இரு நிறுவனங்களும் 2016 அதிபர் தேர்தலில் ஃபேஸ்புக் வாக்காளர்களை குறிவைத்து பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது. தேர்தல் பிரச்சாரங்களில் தரவுகள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டன என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை என ஃபேஸ்புக் தெரிவித்திருக்கிறது. இது குறித்து கேம்பிரிட்ஜ் அனாலிடிகா எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை.

பிரச்சனை தொடர்ந்து பெரிதாகி வருவதால் ஃபேஸ்புக் சார்பில் டிஜிட்டல் தடயவியல் குழு நியமித்துள்ளது. இந்த குழுவினர் வழங்கிய தகவல்களின் படி கேம்பிரிட்ஜ் அனாலிடிகா ஃபேஸ்புக் விதிமுறைகளை மீறியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவன சர்வர்களை சோதனை செய்ய பிரிட்டன் தகவல் ஆணையர் அலுவலக அதிகாரிகள் அனுமதி கோரியுள்ளனர். 

பல்வேறு தரப்பில் இருந்தும் ஃபேஸ்புக் மற்றும் கேம்பிரிட்ஜ் அனாலிடிகா மீதான குற்றச்சாட்டுகள் வலுத்து வரும் நிலையில், ஃபேஸ்புக் பயனர் தரவுகள் திருடப்பட்டது உண்மையென ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பெர்க் உறுதி செய்துள்ளார். ஃபேஸ்புக்கில் அரங்கேறி இருக்கும் பிழைக்கு மன்னிப்பு கோரியுள்ள அவர், கேம்பிரிட்ஜ் அனாலிடிகா விவகாரத்தை சரி செய்வதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News