உலகம்
அமெரிக்கா பாராளுமன்றம்

லைவ் அப்டேட்ஸ் - உக்ரைனுக்கு ரூ.3 லட்சம் கோடி கூடுதல் நிதி- அமெரிக்கா பாராளுமன்றம் ஒப்புதல்

Published On 2022-05-10 19:06 GMT   |   Update On 2022-05-11 09:04 GMT
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இரு மாதங்களுக்கு மேலாகிறது. போரினால் உக்ரைன் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளது. உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் ரஷிய ராணுவம் கடும் தாக்குதலை முன்னெடுத்து வருகிறது.
11.5.2022

14:00: ரஷியாவின் இயற்கை எரிவாயுவை குழாய் மூலம் உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள நோவோப்ஸ்கோவ் மையம் வழியாக, ஐரோப்பிய நாடுகளுக்கு சப்ளை செய்யும் நிறுவனம், தனது சப்ளையை நிறுத்தி உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடங்கிய பின்னர் இயற்கை எரிவாயு விநியோகம் முதன்முறையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

13:00: கருங்கடலில் உள்ள பாம்பு தீவில் ரஷிய படைகளை உக்ரைன் குறிவைக்கிறது. இதன்மூலம், கருங்கடலில் தனது செல்வாக்கை அதிகரிக்கும் ரஷியாவின் முயற்சிக்கு சவாலாக இருக்கும் என்று பிரிட்டன் ராணுவம் கூறுகிறது.

12:00: கார்கிவ் அருகே வடக்கு மற்றும் வடகிழக்கில் உள்ள சில பகுதிகளை ரஷிய படைகள் கைப்பற்றி இருந்தது. இந்த பகுதிகளை கடும் போராட்டத்திற்கு பிறகு மீண்டும் கைப்பற்றி விட்டதாக உக்ரைன் தெரிவித்து உள்ளது.

09.25: உக்ரைனுக்கு ரூ.3 லட்சம் கோடி அளவிலான நிதி உதவியை வழங்க அமெரிக்க பாராளுமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதன்மூலம் உக்ரைனுக்கு ராணுவ மற்றும் பொருளாதார ரீதியான உதவிகள் வழங்கப்படும். அப்பிராந்தியத்தில் உள்ள உக்ரைன் ஆதரவு படைகளுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும். உலக உணவு பற்றாக்குறையை போக்க உக்ரைனில் உள்ள உணவுப்பொருட்களை ஏற்றுமதி செய்யவும் இந்த நிதி உதவும் என கூறப்பட்டுள்ளது.

06.50: ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போருக்கு பின் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிற போராக உக்ரைன் போர் மாறி உள்ளது. இதுவரை இந்தப் போர் 80 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை இடம் பெயர வைத்துள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது.

இந்தப் போரில் இதுவரையில் 26 ஆயிரம் ரஷிய படை வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளனர் என உக்ரைன் அரசு தெரிவித்தது.

03.45: உக்ரைன் நாட்டின் அண்டை நாடான மால்டோவாவுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

உக்ரைனில் இருந்து வெளியேறி மால்டோவாவில் அகதிகளாக
குடியேறியவர்களை ஐ.நா. சபை பொதுச் செயலாளர் சந்தித்தார். மேலும், அகதிகள் வசிக்கும் வீடுகளையும் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

00.30: போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசில் உள்ள ஈபிள் டவர் நீலம் மற்றும் மஞ்சள் வண்ண மின் விளக்குளால் ஒளிர வைக்கப்பட்டது.

உக்ரைன் நாட்டின் தேசியக் கொடியை பிரதிபலிக்கும் வகையில் இந்த நிறங்களில் ஒளிர வைக்கப்பட்டது. இதன்மூலம் உக்ரைன் மக்களுக்கு பிரான்ஸ் உறுதுணையாக இருப்பதாக தெரிவித்துள்ளது. 
Tags:    

Similar News