உலகம்
ஷபாஸ் ஷெரீப், பிரதமர் மோடி

இந்தியாவுடன் சிறந்த உறவை பாகிஸ்தான் விரும்புகிறது- புதிய பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தகவல்

Published On 2022-04-12 12:26 GMT   |   Update On 2022-04-12 12:26 GMT
பிரதமர் மோடியின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்துள்ள ஷபாஸ் ஷெரீப் இரு நாடுகள் இடையே உள்ள பிரச்சினைகளை அமைதியான முறையில் தீர்த்து வைப்பது இன்றியமையாதது என தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றதால், இம்ரான்கான் அரசு கவிழ்ந்தது. இதை அடுத்து, புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்ட எதிர்க்கட்சி தலைவரான ஷபாஷ் செரீப் நேற்று பதவியேற்றுக் கொண்டார்.

அவருக்கு பிரதமர் மோடி தமது டுவிட்டர் பதிவின் மூலம் வெளியிட்ட வாழ்த்து செய்தியில்,  இந்த பிராந்தியத்தில் பயங்கரவாதம் இல்லாத அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை இந்தியா விரும்புகிறது. இதன்மூலம் நமது வளர்ச்சி மற்றும் சவால்களில் கவனம் செலுத்தி, நமது மக்களின் நல்வாழ்வையும் செழிப்பையும் உறுதி செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் வாழத்துக்கு நன்றி தெரிவித்துள்ள  ஷபாஷ் செரீப், இந்தியாவுடன் சிறந்த உறவை பாகிஸ்தான் விரும்புகிறது என்று தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.  

இந்தியாவுடன் அமைதியான மற்றும் கூட்டுறவு உறவுகளை பாகிஸ்தான் விரும்புகிறது. ஜம்மு - காஷ்மீர் உள்ளிட்ட நிலுவையில் உள்ள பிரச்சினைகளை அமைதியான முறையில் தீர்த்து வைப்பது இன்றியமையாதது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிடுவதில் பாகிஸ்தானின் தியாகங்கள் நன்கு அறியப்பட்டவை. அமைதியைப் பாதுகாப்போம் மற்றும் நமது மக்களின் சமூக-பொருளாதார மேம்பாட்டில் கவனம் செலுத்துவோம், என்று பாகிஸ்தான் புதிய பிரதமர் ஷபாஸ் செரீப் கூறியுள்ளார்.

Tags:    

Similar News