search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shehbaz Sharif"

    • செலவினங்களை குறைக்கும் நோக்கத்துடன் தேவையற்ற செலவுகளை நிறுத்துவது என பாகிஸ்தான் முடிவுசெய்தது.
    • அரசு நிகழ்ச்சிகளில் சிவப்பு கம்பளங்களை பயன்படுத்துவதற்கான தடை அங்கு அமலுக்கு வருகிறது.

    இஸ்லாமாபாத்:

    விலைவாசி உயர்வு, பொருளாதார மந்தநிலை ஆகியவற்றால் அண்டை நாடான பாகிஸ்தான் கடுமையாக பாதிப்படைந்துள்ளது.

    கடந்த பிப்ரவரி 8-ம் தேதி நடந்த பொது தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி இல்லாத சூழலில் கூட்டணி ஆட்சி அமைந்தது. இதன்படி, பிரதமராக ஷபாஸ் ஷெரீப் பொறுப்பேற்று கொண்டார். அவரது தலைமையிலான மத்திய மந்திரி சபை 16 உறுப்பினர்களுடன் கடந்த 11-ம் தேதி புதிதாக உருவாக்கப்பட்டது.

    இதற்கிடையே, முதல் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் ஷபாஸ் ஷெரீப் பேசுகையில், நட்பு நாடுகளிடம் இருந்து இனி கடன்களை கேட்கமாட்டேன். ஆனால் முதலீடுகளை மேற்கொள்ளும்படி கேட்பேன் என வெளிநாடுகளின் தூதர்களிடம் கூறியுள்ளேன். நாம் நமக்குள் சண்டையிட்டு கொள்வதற்கு பதிலாக, வறுமையை எதிர்த்து போராட வேண்டும். நாங்கள் சர்வதேச நாணய நிதிய அமைப்பை சார்ந்து இருப்பதில் இருந்து விலகி இருப்போம். வெளிநாட்டு கடன்களிலிருந்து பாகிஸ்தானை மீட்க உறுதி எடுத்துள்ளோம் என தெரிவித்தார்.

    இந்நிலையில், பண நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானில் செலவினங்களைக் குறைக்கும் நோக்கத்துடன் தேவையற்ற செலவுகளை நிறுத்துவது என அரசு முடிவு செய்துள்ளது.

    அதன்படி, அரசு நிகழ்ச்சிகளில் சிவப்பு கம்பளங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது. மத்திய மந்திரிகள் மற்றும் மூத்த அதிகாரிகள் வருகையின்போது இவற்றை பயன்படுத்துவது இனி நிறுத்தப்படும். பிரதமர் ஷெரீப்பின் உத்தரவின்கீழ் இந்த தடை அமலுக்கு வரும் என மந்திரி சபை பிரிவு தெரிவித்துள்ளது.

    ஆனாலும், அரசு நடைமுறையின்படி வெளிநாட்டு தலைவர்கள் வருகையின்போது சிவப்பு கம்பளங்கள் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பிரதமரை சந்தித்து உரையாடிய காட்சிகளை அந்த சிறுவன் தனது யூ-டியூப் சேனல் மற்றும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
    • வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி 50 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.

    பாகிஸ்தானின் கில்கிட்- பால்டிஸ்தானில் உள்ள கப்லு கிராமத்தை சேர்ந்த 6 வயது சிறுவன் முகம்மது ஷிராஸ். இவர் சமூக வலைதளங்களில் பிரபலமானவராக திகழ்கிறார். அவரது யூ-டியூப் சேனல் மற்றும் இன்ஸ்டாகிராமை 1 லட்சத்திற்கும் அதிகமான பயனர்கள் பின்தொடர்கின்றனர்.

    இந்நிலையில் அந்த சிறுவன் இஸ்லாமாபாத்தில் உள்ள பிரதமர் இல்லத்தில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை சந்தித்துள்ளார். முகம்மது ஷிராஸ் தனது சகோதரி முஸ்கானுடன் சென்று பிரதமரை சந்தித்து உரையாடிய காட்சிகளை அந்த சிறுவன் தனது யூ-டியூப் சேனல் மற்றும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

    அதில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், சிறுவன் முகம்மது ஷிராசை தனது நாற்காலியில் அமர வைத்த காட்சிகளும் உள்ளது. மேலும் சிறுவனுடன் பிரதமர் சிரித்து பேசி உரையாடிய காட்சிகள் பயனர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. அதில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் சிறுவன் ஷிராசிடம் எனது பெயர் என்ன? என்று விளையாட்டுத்தனமாக கேட்கிறார். அதற்கு ஷிராஸ், அப்பாவித்தனமாக 'ஷெபாஸ் ஷெரீப் மாமா' என்று கூறுகிறார்.

    இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி 50 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.

    • அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி நீடித்து வந்தது.
    • கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்தன.

    பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியின் தலைவர் ஷெபாஸ் ஷெரிப் பாகிஸ்தானின் 24-வது பிரதமராக பதவியேற்றார். இஸ்லாமாபாத்தில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் குடியரசு தலைவர் ஆரிப் ஆல்வி ஷெபாஸ் ஷெரிப்-க்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சி மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சியை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கடந்த மாதம் 8-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதன் காரணமாக அந்நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி நீடித்து வந்தது.

    எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததை அடுத்து பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்தன. அதன்படி கூட்டணி ஆட்சியில் பிரதமராக ஷெபாஸ் ஷெரிப் தேர்வு செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாகவே ஷெபாஸ் ஷெரிப் பிரதமராக பதவியேற்றுள்ளார்.

    • தேர்தலில் மோசடிகளும், முறைகேடுகளும் நடைபெற்றதாக செய்திகள் வெளிவந்தன
    • இம்ரான் கான் கட்சியின் உறுப்பினர்களின் "சன்னி இதெஹத் கவுன்சில்", ஒமர் அயுப் கானுக்கு ஆதரவளித்தது

    241 மில்லியன் மக்கள் தொகை கொண்ட பாகிஸ்தானில், பிப்ரவரி 8 அன்று, தேர்தல் நடைபெற்றது.

    பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் "பாகிஸ்தான் தெஹ்ரிக்-ஏ-இன்சாஃப்" (PTI) கட்சி போட்டியிட "பாகிஸ்தான் தேர்தல் ஆணையம்" (PEC) தடை விதித்தது. இதனை தொடர்ந்து அக்கட்சியின் வேட்பாளர்களில் பலர் சுயேட்சையாக போட்டியிட்டனர்.

    இந்த தேர்தலில் பெரிய அளவிலான மோசடிகளும், முறைகேடுகளும் நடைபெற்றதாக செய்திகள் வெளிவந்தன.

    பெரும் சர்ச்சைக்கு இடையே நடந்த இந்த தேர்தலுக்கு பிறகு, முடிவுகளை அறிவிப்பதிலும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தாமதம் ஏற்பட்டது.

    பிடிஐ கட்சியின் சுயேச்சை வேட்பாளர்கள் 93 இடங்களில் வென்றனர். இக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், "சன்னி இதெஹத் கவுன்சில்" (Sunny Ittehad Council) எனும் அமைப்பை உருவாக்கினர்.

    முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பிஎம்எல்-என் (PML-N) கட்சி 75 இடங்களிலும், பிலாவல் பூட்டோவின் "பாகிஸ்தான் மக்கள் கட்சி" (PPP) 54 இடங்களிலும் வெற்றி பெற்றது.


    தனிப்பெரும்பான்மை இல்லாததால் பிரதமர் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படுவதில் சிக்கல் நீடித்து வந்தது.

    இந்நிலையில் இன்று, "நேஷனல் அசெம்பிளி" (National Assembly) என அழைக்கப்படும் பாராளுமன்றத்தின் கீழ்சபை (Lower House) பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக கூடியது.

    இந்த கூட்டத்தில் பெரும்பாலான உறுப்பினர்கள் முன்னாள் பிரதமர் ஷெபாஸ் ஷரீப் (Shehbaz Sharif) மீண்டும் பிரதமராக வாக்களித்தனர்.

    இதையடுத்து, பாகிஸ்தானின் பிரதமராக இரண்டாம் முறை ஷெபாஸ் ஷரீப் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதாக சபாநாயகர் அயாஸ் சாதிக் (Ayaz Sadiq) தெரிவித்தார்.

    336 உறுப்பினர்களை கொண்ட நேஷனல் அசெம்பிளியில் 201 வாக்குகள் பெற்று ஷெபாஸ் ஷரீப், 92 வாக்குகள் பெற்ற ஒமர் அயுப் கான் எனும் போட்டி வேட்பாளரை வென்றார்.

    "சன்னி இதெஹத் கவுன்சில்" ஒமர் அயுப் கானுக்கு ஆதரவளித்தது.

    பிரதமர் பதவிக்கு குறைந்தபட்சம் 169 ஆதரவு தேவைப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ஷெபாஸ் ஷரீப், பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் (PML-N) கட்சியை தொடங்கியவரும், 3 முறை பாகிஸ்தான் பிரதமராகவும் இருந்தவருமான நவாஸ் ஷெரீப்-பின் இளைய சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வாக்கு எண்ணிக்கையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
    • இரு கட்சிகளிடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது.

    பாகிஸ்தானின் இரண்டு பிரதான அரசியல் கட்சிகள் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் (PML - N) மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPP) அந்நாட்டில் கூட்டணி அரசாங்கத்தை அமைக்க முடிவு செய்துள்ளன. இது தொடர்பாக இரு கட்சிகளிடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    பெரும் பதற்றம் மற்றும் அரசியல் பரபரப்புக்கு இடையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் பாகிஸ்தானில் பொது தேர்தல் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்று தெரிகிறது. அந்த வரிசையில், பாகிஸ்தானில் எந்த கட்சி ஆட்சி அமைக்கப்போகிறது மற்றும் அந்நாட்டின் புதிய பிரதமர் யார் என்ற கேள்விகள் தொடர்ந்து நீடித்து வந்தன.

    இந்த நிலையில், பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க இருப்பதாக தெரிவித்துள்ளன. இரு கட்சிகளை சேர்ந்த முன்னணி தலைவர்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.

    அதன்படி பாகிஸ்தானின் புதிய பிரதமர் வேட்பாளராக ஷெபாஸ் ஷெரிப், அதிபர் வேட்பாளராக ஆசிப் அலி சர்தாரி அறிவிக்கப்படுவதாக பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி தெரிவித்துள்ளார்.

    "பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையை வைத்திருக்கின்றன," என்று பாகிஸ்தான் மக்கள் கட்சியின் பிலாவல் பூட்டோ தெரிவித்தார்.

    • பாகிஸ்தான் மக்கள் கட்சியின் பிலாவல் பூட்டோ பிரதமர் பதவிக்கு போட்டியில்லை என அறிவிப்பு.
    • நவாஸ் ஷெரீப் கட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுப்பதாக அறிவித்தார்.

    பாகிஸ்தான் நாட்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவிற்கான தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. ஏற்கனவே பாகிஸ்தான் பொருளாதார சிக்கலில் தவித்து வருகிறது.

    இந்த நிலையில் ஸ்திரதன்மையான அரசியலை உருவாக்கி பாகிஸ்தானை காப்பாற்ற நாவஸ் ஷெரீப்- பிலாவல் பூட்டோ ஆகியோர் கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்தனர். மேலும் சில கட்சிகளை தங்களது கூட்டணியில் சேர்க்க முடிவு செய்யப்பட்டது.

     

    ஆனால் யார் பிரதமர் போன்ற விவாதம் கிளம்பியது. இந்த நிலையில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் பிலாவல் பூட்டோ மற்றும் அவரது தந்தை சர்தாரி ஆகியோர் பிரதமர் பதவிக்கு போட்டியிடவில்லை. மந்திரி சபையிலும் இடம் பெற போவதில்லை. வெளியில் இருந்து நவாஸ் ஷெரீப் கட்சிக்கு ஆதரவு கொடுப்பதாக தெரிவித்தனர்.

     இந்த நிலையில் நவாஸ் ஷெரீப், அவரது சகோதரரான ஷெபாஸ் ஷெரீப்-ஐ பிரதமர் வேட்பாளராக பரிந்துரை செய்துள்ளார். அதேவேளையில் நாவஸ் ஷெரீப் அவரது மகளை பஞ்சாப் மாநில முதல்வர் வேட்பாளராகவும் பரிந்துரை செய்துள்ளார்.

    இதை கூட்டணி கட்சிகள் ஏற்றக்கொண்டால், பாகிஸ்தான் நாட்டின் அடுத்த பிரதமாக ஷெபாஸ் ஷெரீப் பதவி ஏற்பார்.

    பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி ஆட்சி அமைக்க ஆதரவு கொடுத்த கட்சிகளுக்கு நவாஸ் ஷெரீப் நன்று தெரிவித்துள்ளா். இந்த முடிவால் பாகிஸ்தான் நெருக்கடியில் இருந்து வெளியே வரும் என நம்புவதாக தெரிவித்தார்.

    • மாநாட்டிற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வருகை தந்தபோது மழை பெய்தது.
    • சமூக ஊடக பயனர்கள் பிரதமரை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டனர்.

    உலகளாவிய நிதி ஒப்பந்தம் தொடர்பாக பாரிசில் இரண்டு நாள் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கலந்துகொண்டார். நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானுக்கு கடன் திட்டத்தை பெறுவதற்கான முயற்சியாக பாரிஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்றார்.

    இந்நிலையில், மாநாட்டிற்கு ஷெபாஸ் ஷெரீப் வருகை தந்தபோது மழை பெய்தது. காரில் இருந்து இறங்கியபோது அவருக்கு பெண் ஊழியர் ஒருவர் குடைபிடித்து சென்றார். அப்போது அந்த ஊழியரிடம் இருந்து ஷெபாஸ் ஷரீப் குடையை வாங்கி, தான் மட்டும் தனியாக சென்றார். அந்த பெண் மழையில் நனைந்தபடி பின்தொடர்ந்தார். இந்த வீடியோவை பிரதமர் அலுவலகம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

    இந்த வீடியோவை பலரும் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர். வீடியோவைப் பார்த்த பலரும் பாகிஸ்தான் பிரதமரை ட்ரோல் செய்தவண்ணம் உள்ளனர். சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. பாகிஸ்தான் சமூக ஊடக பயனர்கள் தங்கள் பிரதமரின் இந்த நடவடிக்கையை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டனர்.

    சவூதி மன்னர் சல்மான் பின் அப்துல்அஜிஸ், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா எல்-சிசி போன்ற உலகத் தலைவர்களையெல்லாம் ஷெபாஸ் ஷெரீப் சந்தித்தார். இந்த சந்திப்புகள் தொடர்பான வீடியோக்களை விட, அவர் மாநாட்டிற்கு வந்தடையும் வீடியோதான் இப்போது டிரெண்டிங்கில் உள்ளது. 

    • பணமோசடி வழக்கில் பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் தகுதி நீக்கம் செய்தது
    • நவாஸ் ஷெரீப் தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார்

    பாகிஸ்தானின் தற்போதைய பிரதமர் ஷாபாஸ் ஷெரீப். இவர் முன்னாள் பாகிஸ்தான் அதிபர் நவாஸ் ஷெரீப் அவர்களின் சகோதரர் ஆவார். நவாஸ் ஷெரீப், உடல்நல காரணங்களுக்காக நவம்பர் 2019 முதல், லண்டனில் வசித்து வருகிறார். பாகிஸ்தானுக்கு மீண்டும் வருவதற்கு மறுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் (PML-N) கட்சியின் முன்னாள் தலைவர் நவாஸ் ஷெரீப், மீண்டும் நாட்டிற்கு திரும்பி, தேர்தல் பிரச்சாரத்தை வழிநடத்தி, நான்காவது முறையாக பிரதமராக வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் கட்சியின் மத்திய பொதுக்குழு கூட்டத்தில் உரையாற்றிய ஷெரீப் தெரிவித்ததாவது:-

    மூத்த சகோதரர் நவாஸ் ஷெரீப் பாகிஸ்தானுக்கு திரும்பிய பிறகு கட்சி கூட்டத்தை நடத்தி, PML-Nன் தலைவர் பொறுப்பையும் அவரிடம் ஒப்படைப்பதற்காக காத்திருக்கிறேன். விரைவில் நடத்தப்பட வேண்டிய சூழ்நிலை ஏறுபட்டுள்ளதால் இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது. நவாஸ் ஷெரீப் பாகிஸ்தானுக்கு திரும்பியதும் அரசியலின் வரைபடமே மாறுவதை நீங்கள் காண்பீர்கள். கட்சிக்கு இளம் தலைமை தேவை. மரியம் நவாஸின் கடின உழைப்பை நான் பாராட்டுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஷெபாஸ் ஷெரீப் கட்சி தலைவராவதற்கு முன்பு, மூன்று முறை பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் அதன் தலைவராக இருந்தார். ஆனால் உச்சநீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டு அவர் கட்சிப் பதவி வகிக்க தடை விதிக்கப்பட்டதையடுத்து, ஷெபாஸ் கட்சி தலைமைப் பதவியை ஏற்றார்.

    பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிஃப் அல்வி "உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் உத்தரவுகள் சட்டம் 2023"ல் கையெழுத்திட்ட சில வாரங்களுக்குப் பிறகு இந்த அறிக்கை வருகிறது. இதன் மூலம் நவாஸ் ஷெரீப், 60 நாட்களுக்குள் உச்சநீதிமன்றத்தின் வாழ்நாள் தகுதி நீக்கத்திற்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்கான உரிமையை பயன்படுத்துவதற்கான முதல்படி தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

    சட்டப்பிரிவு 184(3)ன் கீழ் வரும் வழக்குகளில் நீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய இந்த புதிய சட்டம் வழி வகுக்கிறது. இந்த சட்டம் கடந்த கால தீர்ப்புகளுக்கும் பொருந்தும். பாகிஸ்தான் உச்சநீதிமன்றம், பனாமா ஆவணங்கள் தொடர்பான வழக்கில், நவாஸ் ஷெரீப்பை ஜூலை 28, 2017 அன்று தகுதி நீக்கம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    பிரபலமான பனாமா பேப்பர் வழக்கில், தனது மகனிடமிருந்து பெறப்பட்ட சம்பளத்தை மறைத்ததற்காக, நவாஸ் ஷெரீப்பிற்கு வாழ்நாள் முழுவதும் எந்த ஒரு பொதுப் பதவியையும் வகிக்க கூடாதென பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தடைவிதித்தது.

    ஒரு வருடம் கழித்து, தேர்தல்கள் சட்டம் 2017-ஐ எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பில், உச்சநீதிமன்றம், 62 மற்றும் 63 பிரிவின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஒருவர், எந்த அரசியல் கட்சியின் தலைமை பொறுப்பையும் ஏற்க கூடாது என்றும் தீர்ப்பளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை துணை ராணுவத்தினர் கைது செய்தனர்.
    • கைதை கண்டித்து சாலைகளில் திரண்ட இம்ரான் ஆதரவாளர்கள் கோஷமிட்டபடி மறியலில் ஈடுபட்டனர்.

    லாகூர்:

    பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைதை அடுத்து அவரது கட்சியினர் நாடு முழுவதும் போராட்டத்தில் குதித்தனர். சாலைகளில் திரண்ட அவர்கள் இம்ரான் கான் கைதை கண்டித்து கோஷமிட்டபடி மறியலில் ஈடுபட்டனர்.

    இந்தப் போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. போலீஸ் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைக்கப்பட்டன. பல இடங்களில் போலீசாருக்கும், போராட்டகாரர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. போலீசார் மீது கற்கள் வீசப்பட்டது. இதையடுத்து போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன.

    இந்நிலையில், நேற்று நள்ளிரவில் இம்ரான் கான் ஆதரவாளர்கள் லாகூரில் உள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீப் அலுவலக வீட்டை முற்றுகையிட்டுனர். அவர்கள் பெட்ரோல் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் பிரதமர் அலுவலக இல்லத்தில் பதற்றம் அதிகரித்து வருகிறது.

    • ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டு நேரத்தையும், வளத்தையும் வீணடிப்பாதா? என்பது நம் கைகளில் தான் உள்ளது.
    • இரு நாடுகளுக்கும் இடையே போர் ஏற்பட்டால், மிகப்பெரிய இழப்பு ஏற்படும் என பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார்

    இஸ்லாமாபாத்:

    கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பாகிஸ்தானில் அரசுக்கு எதிராக மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். தடைசெய்யப்பட்ட அமைப்பான தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தானின் பயங்கரவாத தாக்குதல்களை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இந்தியாவுடன் நடந்த போரில், பல பாடங்களை கற்றுக் கொண்டோம் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.

    இது தொடர்பாக 'அல் அரேபியா' டிவி சேனலுக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு:

    பாகிஸ்தான் அமைதியையே விரும்புகிறது. நம்மிடம் பொறியாளர்கள், டாக்டர்கள் மற்றும் திறன் வாய்ந்த தொழிலாளர்கள் உள்ளனர். இந்த விலைமதிப்பற்ற சொத்துகளை முறையாக பயன்படுத்தி, வளர வேண்டும் என்பது எங்களது விருப்பம். அமைதியாக வாழ்ந்து வளர்ச்சி பெறுவதா அல்லது ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டு நமது நேரத்தையும், வளத்தையும் வீணடிப்பாதா? என்பது நம் கைகளில் தான் உள்ளது.

    நாங்கள் இந்தியாவுடன் மூன்று போர்களை நடத்தியுள்ளோம், மேலும் அவை மக்களுக்கு அதிக துன்பம், வறுமை மற்றும் வேலையின்மை ஆகியவற்றை மட்டுமே கொண்டு வந்துள்ளன. போரின் மூலம் பல பாடங்களை நாங்கள் கற்றுக்கொண்டோம்.

    அமைதியாக வாழ்ந்து, இந்தியாவுடன் உள்ள பிரச்சனையை சுமூகமாக தீர்த்துக்கொள்ள விரும்புகிறேன். எங்கள் வளங்களை, வெடிகுண்டுகள் மற்றும் வெடிமருந்துகள் மூலம் வீணடிக்க விரும்பவில்லை. இரு நாடுகளும் அணு ஆயுத நாடுகள் தான். இரு நாட்டு ராணுவங்களிடமும் பல அதிநவீன ஆயுதங்கள் உள்ளன. இரு நாடுகளுக்கும் இடையே போர் ஏற்பட்டால், மிகப்பெரிய இழப்பு ஏற்படும். யாராலும் உயிர் பிழைக்க முடியாது. எனவே இந்தியாவுடன் அமைதியான உறவை விரும்புகிறோம். அப்போது தான் இரு நாடுகளும் வளர முடியும். காஷ்மீர் போன்ற பல்வேறு பிரச்சனைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் நேர்மையாக பேச வேண்டும். இந்திய பிரதமர் மோடிக்கு எனது செய்தி என்னவென்றால், காஷ்மீர் போன்ற பிரச்சினைகளை தீர்க்க நேர்மையான பேச்சுக்களை நடத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மூன்றாவது முறையாக பிரதமருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது.
    • பிரதமர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்யும்படி அமைச்சர் வேண்டுகோள்

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபுக்கு (வயது 71) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். எகிப்தில் நடந்த பருவநிலை மாநாட்டில் பங்கேற்ற அவர் அங்கிருந்து, தனது மூத்த சகோதரர் நவாஸ் ஷெரீப்பை சந்திக்க லண்டனுக்கு சென்று அங்கிருந்து பாகிஸ்தான் திரும்பிய மறுநாள் கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

    கடந்த இரண்டு நாட்களாக பிரதமர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மரியம் அவுரங்கசீப் தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்யும்படி நாட்டு மக்கள் மற்றும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியினரை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    மூன்றாவது முறையாக பிரதமருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. முன்னதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜனவரி மற்றும் 2020 ஜூன் மாதத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    பாகிஸ்தானும், இந்தியாவும் பரஸ்பர நன்மை உண்டாகும் வர்த்தகத்தில் இருந்து நிறைய பலன்களை பெற வேண்டும்.

    இஸ்லாமபாத்:

    பாகிஸ்தான் பிரதமராக ஷபாஸ் ஷெரீப் கடந்த ஏப்ரல் மாதம் பதவியேற்றார். அவர் சமீபத்தில் நாட்டு மக்களுக்கு முதல் முதலாக உரையாற்றியபோது, இந்தியாவுடன் பாகிஸ்தான் நல்லுறவை விரும்புகிறது.

    ஆனால் காஷ்மீர் பிரச்சினையை தீர்க்கும் வரை பேச்சுவார்த்தைக்கு சாத்தியமில்லை என்று தெரிவித்தார்.

    இந்த நிலையில், ஷபாஸ் ஷெரீப் துருக்கியை சேர்ந்த ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, இந்தியாவுடன் பாகிஸ்தான் புவிசார் பொருளாதார கூட்டாண்மைகளை உருவாக்க விரும்புகிறது. பாகிஸ்தானும், இந்தியாவும் பரஸ்பர நன்மை உண்டாகும் வர்த்தகத்தில் இருந்து நிறைய பலன்களை பெற வேண்டும்.

    இந்தியாவுடனான ஆரோக்கியமான வர்த்தக நடவடிக்கை மூலம் கிடைக்கும் பொருளாதார நன்மைகளை பற்றி நாங்கள் அறிவோம். இரு நாடுகளும் இணைந்து வர்த்தகத்தில் ஈடுபட வேண்டும் என்றார்.

    எல்லையில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சிக்கிறார்கள். மேலும் பாகிஸ்தான் ராணுவமும் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.

    உரி, மதன்கோட் மற்றும் புல்வாமா பயங்கரவாத தாக்குதல்களால் இந்தியா-பாகிஸ்தான் இடைேயயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. பேச்சு வார்த்தையும், பயங்கரவாதமும் ஒன்றாக பயணிக்க முடியாது என்று இந்தியா தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×