search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஷபாஸ் ஷெரீப்"

    • செலவினங்களை குறைக்கும் நோக்கத்துடன் தேவையற்ற செலவுகளை நிறுத்துவது என பாகிஸ்தான் முடிவுசெய்தது.
    • அரசு நிகழ்ச்சிகளில் சிவப்பு கம்பளங்களை பயன்படுத்துவதற்கான தடை அங்கு அமலுக்கு வருகிறது.

    இஸ்லாமாபாத்:

    விலைவாசி உயர்வு, பொருளாதார மந்தநிலை ஆகியவற்றால் அண்டை நாடான பாகிஸ்தான் கடுமையாக பாதிப்படைந்துள்ளது.

    கடந்த பிப்ரவரி 8-ம் தேதி நடந்த பொது தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி இல்லாத சூழலில் கூட்டணி ஆட்சி அமைந்தது. இதன்படி, பிரதமராக ஷபாஸ் ஷெரீப் பொறுப்பேற்று கொண்டார். அவரது தலைமையிலான மத்திய மந்திரி சபை 16 உறுப்பினர்களுடன் கடந்த 11-ம் தேதி புதிதாக உருவாக்கப்பட்டது.

    இதற்கிடையே, முதல் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் ஷபாஸ் ஷெரீப் பேசுகையில், நட்பு நாடுகளிடம் இருந்து இனி கடன்களை கேட்கமாட்டேன். ஆனால் முதலீடுகளை மேற்கொள்ளும்படி கேட்பேன் என வெளிநாடுகளின் தூதர்களிடம் கூறியுள்ளேன். நாம் நமக்குள் சண்டையிட்டு கொள்வதற்கு பதிலாக, வறுமையை எதிர்த்து போராட வேண்டும். நாங்கள் சர்வதேச நாணய நிதிய அமைப்பை சார்ந்து இருப்பதில் இருந்து விலகி இருப்போம். வெளிநாட்டு கடன்களிலிருந்து பாகிஸ்தானை மீட்க உறுதி எடுத்துள்ளோம் என தெரிவித்தார்.

    இந்நிலையில், பண நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானில் செலவினங்களைக் குறைக்கும் நோக்கத்துடன் தேவையற்ற செலவுகளை நிறுத்துவது என அரசு முடிவு செய்துள்ளது.

    அதன்படி, அரசு நிகழ்ச்சிகளில் சிவப்பு கம்பளங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது. மத்திய மந்திரிகள் மற்றும் மூத்த அதிகாரிகள் வருகையின்போது இவற்றை பயன்படுத்துவது இனி நிறுத்தப்படும். பிரதமர் ஷெரீப்பின் உத்தரவின்கீழ் இந்த தடை அமலுக்கு வரும் என மந்திரி சபை பிரிவு தெரிவித்துள்ளது.

    ஆனாலும், அரசு நடைமுறையின்படி வெளிநாட்டு தலைவர்கள் வருகையின்போது சிவப்பு கம்பளங்கள் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பாராளுமன்றத்தை கலைக்கும்படி பிரதமர் ஷபாஸ் ஷெரீப் கடிதம் எழுதினார்.
    • அவரது பரிந்துரையை ஏற்று அதிபர் ஆரிப் ஆல்வி பாராளுமன்றத்தைக் கலைத்தார்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் பாராளுமன்றத்தின் பதவிக் காலம் வரும் 12-ம் தேதி நிறைவடைகிறது. பதவிக் காலம் முடியும் முன்பாகவே பாராளுமன்றம் கலைக்கப்படும் என பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தெரிவித்திருந்தார்.

    இதையடுத்து, பாராளுமன்றத்தைக் கலைக்க கோரி பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அதிபருக்கு கடிதம் எழுதினார். இது தொடர்பாக அவர் கூறுகையில், பாராளுமன்றத்தை கலைக்கும்படி அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளேன். பின்னர் இடைக்கால அரசாங்கம் பொறுப்பேற்கும் என தெரிவித்தார்.

    இந்நிலையில், பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பின் பரிந்துரையை ஏற்று பாகிஸ்தான் பாராளுமன்றத்தை நேற்று நள்ளிரவு கலைத்து அதிபர் ஆரிப் ஆல்வி உத்தரவிட்டுள்ளார்.

    பாராளுமன்றம் முன்கூட்டியே கலைக்கப்பட்டதால் தேர்தல் நடத்த 90 நாட்கள் அவகாசம் வழங்கப்படுகிறது.

    • கடந்த 75 ஆண்டுகளில் பாகிஸ்தான் மூன்று போர்களை நடத்தியுள்ளது.
    • நாங்கள் அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கனிமவள உச்சி மாநாட்டில் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    வறுமை மற்றும் வேலையில்லா திண்டாட்டத்தை எதிர்த்து போராடும் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் போர் ஒரு விருப்பமல்ல. இந்தியாவுடன் போரை நடத்த விரும்பவில்லை.

    அனைத்து தீவிரமான மற்றும் நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம். அர்த்தமுள்ள விவாதங்கள் மூலம் நமது தீவிரமான பிரச்சினைகள் புரிந்த கொள்ளப்படா விட்டால் அண்டை நாடுடன் நட்பாக இருக்க முடியாது என்பதை அண்டை நாடுகளும் புரிந்து கொள்வது முக்கியம்

    பாகிஸ்தானின் அணு சக்தி, தற்காப்பு நோக்கத்திற்காகவே உள்ளது. அது ஆக்கிரமிப்புக்காக அல்ல. ஏனென்றால் அணு ஆயுதத்தை பயன்படுத்தினால் என்ன நடந்தது என்பதை சொல்ல யார் வாழ்வார்கள்? எனவே போர் ஒரு விருப்ப மல்ல.

    கடந்த 75 ஆண்டுகளில் பாகிஸ்தான் மூன்று போர்களை நடத்தியுள்ளது. இதன் காரணமாக பொருளாதார இழப்பு மற்றும் வளங்கள் பற்றாக்குறை ஏற்பட்டது.

    நாங்கள் அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம். பரஸ்பர மரியாதை, நம்பிக்கையின் அடிப்படையில் அமெரிக்காவுடன் சிறந்த உறவுகளை வைத்திருக்க விரும்புகிறோம். நாங்கள் ஒருவரையொருவர் ஏமாற்ற முயற்சிக்க மாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் முழுவதுமாக கை விடும்வரை பேச்சுவார்த்தைக்கு தயார் இல்லை என்று இந்தியா தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாகிஸ்தானில் பெரும்பாலான பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டது.
    • கராச்சி உள்பட பல்வேறு முக்கிய நகரங்கள் இருளில் மூழ்கின.

    இஸ்லாமாபாத் :

    பாகிஸ்தானில் மின்பகிர்மான கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அந்த நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று முன்தினம் மின்வெட்டு ஏற்பட்டது.

    இதனால் தலைநகர் இஸ்லாமாபாத், பொருளாதார நகரமான கராச்சி உள்பட பல்வேறு முக்கிய நகரங்கள் இருளில் மூழ்கின. இதனால் மக்களின் இயல்புவாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு, பல லட்சம் பேர் பரிதவிப்புக்கு ஆளாகினர்.

    கிட்டத்தட்ட 24 மணி நேரத்துக்கு பிறகு நேற்று காலை நாடு முழுவதும் மின்இணைப்பு திரும்பியதாக தகவல்கள் வெளியாகின.

    இந்த நிலையில் மின்வெட்டு காரணமாக ஏற்பட்ட சிரமத்திற்காக நாட்டு மக்களிடம் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் மன்னிப்பு கேட்டார்.

    இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், "நேற்று மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் நமது குடிமக்கள் அனுபவித்த சிரமத்திற்கு எனது அரசாங்கத்தின் சார்பாக நான் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். எனது உத்தரவின் பேரில் மின்வெட்டுக்கான காரணங்களைக் கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது" என தெரிவித்துள்ளார்.

    • தனது தாயை இழந்து தவிக்கும் பிரதமர் மோடிக்கு எனது அனுதாபங்கள்.
    • உலகத்தலைவர்கள் பலரும் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்.

    இஸ்லாபாத் :

    பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி மறைவுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அனுதாபம் தெரிவித்துள்ளார். இதையொட்டி அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், "ஒருவருக்கு அவரது தாயின் இழப்பைக் காட்டிலும் பெரிதான இழப்பு என்று எதுவும் இருந்து விட முடியாது. தனது தாயை இழந்து தவிக்கும் பிரதமர் மோடிக்கு எனது அனுதாபங்கள்" என தெரிவித்துள்ளார்.

    இதேபோன்று ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு, நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசந்தா, பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங், இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே என உலகத்தலைவர்கள் பலரும் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்.

    • அவர் லண்டனில் தஞ்சம் புகுந்தார்.
    • 4 ஆண்டுகளுக்கு பிறகு சுலைமான் ஷெஹ்பாஸ் நாடு திரும்பினார்.

    இஸ்லாமாபாத் :

    பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பின் மகன் சுலைமான் ஷெஹ்பாஸ். கடந்த 2018-ம் ஆண்டு இம்ரான்கான் பிரதமராக இருந்தபோது இவர் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் தொடரப்பட்டன. இதையடுத்து அவரை கைது செய்ய வாரண்டு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் சுலைமான் ஷெஹ்பாஸ் நாட்டை விட்டு தப்பி ஓடினார். அவர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தஞ்சம் புகுந்தார்.

    இதற்கிடையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் இம்ரான்கான் பதவி பறிக்கப்பட்டு ஷபாஸ் ஷெரீப் பாகிஸ்தான் பிரதமராக பொறுப்பேற்ற பிறகு அவரது குடும்பத்தினர் மீதான ஊழல் வழக்குகளின் விசாரணை மந்தமாகின. இந்த சூழலில் ஊழல் வழக்கில் சுலைமான் ஷெஹ்பாசை கைது செய்வதற்கு இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு தடை விதித்தது. அதே சமயம் இந்த வழக்கில் ஜாமீன் பெற 13-ந் தேதிக்குள் அவர் கோர்ட்டில் சரணடைய வேண்டும் எனவும் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இந்த நிலையில் லண்டனுக்கு தப்பியோடிய 4 ஆண்டுகளுக்கு பிறகு சுலைமான் ஷெஹ்பாஸ் நேற்று நாடு திரும்பினார். விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், தன் மீது பொய்யான வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும், எனவே தனது பாதுகாப்பிற்காக பாகிஸ்தானை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் கூறினார்.

    • பாகிஸ்தான் பிரதமர், சீனாவில் 2 நாள் அரசு முறை சுற்றுப் பயணம்.
    • சீன அதிபருடன், பாகிஸ்தான் பிரதமர் பேச்சுவார்த்தை.

    பெய்ஜிங்:

    பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் செரீப் முதன்முறையாக இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக சீனா சென்றுள்ளார். அவருடன் அந்நாட்டு அமைச்சர்கள் அடங்கிய உயர்மட்டக்குழுவும் பயணம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் தலைநகர் பெய்ஜிங்கில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்த பாகிஸ்தான் பிரதமர் இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது பாகிஸ்தானில் சீனா செயல்படுத்தி வரும் திட்டங்களில் பணியாற்றி வரும் தங்கள் நாட்டு பணியாளர்களை குறி வைத்து தாக்குதல் நடத்தப்படுவது குறித்து ஷபாஸ் செரீப்பிடம் ஜி ஜின்பிங் கவலை தெரிவித்ததாக இரு நாட்டு தலைவர்கள் சந்திப்பு குறித்து வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பாகிஸ்தானில் சீனர்கள் மீது அதிகரித்து வரும் தாக்குதல்களை அடுத்து, போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படாதது குறித்து அப்போது பாகிஸ்தான் பிரதமரிடம் எடுத்துரைக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதையடுத்து பாகிஸ்தானில் உள்ள அனைத்து சீன பணியாளர்கள், செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் சீன நிறுவனங்களுக்கான பாதுகாப்பை ஷபாஸ் செரீப் உறுதிபடுத்தியதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் இரு நாடுகள் இடையே அனைத்து தரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த குறித்தும், பல்வேறு துறைகளில் தற்போதைய ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் இரு தரப்பிலும் கருத்துக்கள் பரிமாறப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • அமைதியான பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.
    • தெற்காசியாவில் அமைதிக்கான உறுதிப்பாட்டில் நாங்கள் நிலையாக இருக்கிறோம்.

    நியூயார்க்:

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐ.நா.பொதுச் சபை கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:

    இந்தியா உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் பாகிஸ்தான் அமைதியை விரும்புகிறது. இரு நாடுகளிலும் ஆயுதங்கள் இருந்தாலும், போர் ஒரு விருப்பமல்ல. அமைதியான பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.

    1947 முதல் மூன்று போர்களை சந்தித்துள்ளோம். இதன் விளைவாக, இரு தரப்பிலும் துன்பம், வறுமை மற்றும் வேலையின்மை மட்டுமே அதிகரித்துள்ளது. தெற்காசியாவில் அமைதிக்கான எங்கள் உறுதிப்பாட்டில் நாங்கள் நிலையாக இருக்கிறோம் என்று உலக மன்றத்திற்கு நான் உறுதியளிக்கிறேன்.

    ஆக்கப்பூர்வமான சூழலை உருவாக்க இந்தியா நியாயமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஜம்மு காஷ்மீரில் தனது ராணுவ நிலைகளை இந்தியா அதிகரித்துள்ளது. இதனால் அது உலகிலேயே மிகவும் ராணுவ மயமாக்கப்பட்ட மண்டலமாக மாற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    முன்னதாக ஜம்மு காஷ்மீர் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருக்கும் என்று பாகிஸ்தானிடம் இந்தியா பலமுறை கூறியுள்ளது. பயங்கரவாதம், மற்றும் வன்முறை இல்லாத சூழலில் பாகிஸ்தானுடன் இயல்பான உறவை விரும்புவதாக இந்தியா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த 2019-ம் ஆண்டு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது.
    • இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேலும் பாதிக்கப்பட்டது.

    இஸ்லாமாபாத்:

    கடந்த 2019-ம் ஆண்டு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேலும் பாதிக்கப்பட்டது. பாகிஸ்தான் பயங்கரவாதத்தை கைவிட்டால் மட்டுமே அந்நாடுடன் சுமூக உறவை மேம்படுத்த முடியும் என்று இந்தியா திட்டவட்டமாக கூறி வருகிறது.

    இந்நிலையில், இந்தியாவுடன் நல்லுறவை பேண விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

    ஹார்வேர்டு பல்கலைக்கழக மாணவர்களுடன் நடந்த கலந்துரையாடலில் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    பரஸ்பர நம்பிக்கை, நீதி, சமத்துவம் ஆகிய கொள்கை அடிப்படையில் இந்தியாவுடன் அமைதியான உறவு ஏற்படுவதை பாகிஸ்தான் விரும்புகிறது.

    ஐக்கிய நாடுகள் சபை தீர்மானம் மற்றும் காஷ்மீர் மக்களின் விருப்பங்கள் அடிப்படையில் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் அமைதியான தீர்வு காண விரும்புகிறோம். இந்த விவகாரத்தில் சர்வதேச சமூகம் ஆக்கப்பூர்வமாக பணியாற்ற வேண்டும்.

    தெற்கு ஆசியா பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை ஏற்பட இந்தியா, பாகிஸ்தான் இடையே நல்லுறவு நிலவுவது அவசியமானது என தெரிவித்தார்.

    • ஹம்சா ஷபாஸ் முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்பட்டு உடனடியாக பதவியேற்றார்.
    • இம்ரான்கானின் பி.டி.ஐ. கட்சியினர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

    லாகூர் :

    பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதல்-மந்திரியாக பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பின் மகன் ஹம்சா ஷபாஸ் தேர்வு செய்யப்பட்ட விவகாரத்தில் கட்சி தலைமையின் முடிவுக்கு எதிராக வாக்களித்ததாக இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பி.டி.ஐ.) கட்சியை சேர்ந்த 20 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

    அதை தொடர்ந்து அண்மையில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் இம்ரான்கானின் கட்சி 15 இடங்களில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 369 உறுப்பினர்களை கொண்ட பஞ்சாப் சட்டசபையில் பி.டி.ஐ. கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 178 ஆக உயர்ந்தது. அதன் கூட்டணி கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (க்யூ) கட்சிக்கு 10 உறுப்பினர்கள் உள்ளனர். ஆட்சி அமைப்பதற்கு 185 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இதனால் இம்ரான்கானின் கட்சி எளிதில் ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    இந்த நிலையில் பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுபடி நேற்று முன்தினம் பஞ்சாப் மாகாண முதல்-மந்திரியை தேர்வு செய்வதற்கான ஓட்டெடுப்பு சட்டசபையில் நடந்தது.

    இதில் பி.டி.ஐ. கட்சியின் சார்பில் களம் இறங்கிய சவுத்ரி பர்வேஷ் இலாஹிக்கு 186 ஓட்டுகள் கிடைத்தன. ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஹம்சா ஷபாசுக்கு ஆதரவாக 179 பேர் ஓட்டுப்போட்டனர்.

    எனினும் சவுத்ரிக்கு ஆதரவாக வாக்களித்த பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (க்யூ) கட்சி உறுப்பினர்களின் 10 ஓட்டுகள் செல்லாது என துணை சபாநாயகர் தோஸ்த் முகம்மது மசாரி அறிவித்தார். அதை தொடர்ந்து ஹம்சா முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்பட்டு, உடனடியாக பதவியேற்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இம்ரான்கானின் பி.டி.ஐ. கட்சியினர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

    • இம்ரான்கான் ஆட்சியில் சிக்கல்கள் நிறைந்த பொருளாதாரத்தை நாடு பெற்றிருக்கிறது.
    • பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வழியாக உரையாற்றினார்.

    இஸ்லாமாபாத் :

    பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் நேற்று முன்தினம் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வழியாக உரையாற்றினார். கடந்த இம்ரான்கான் அரசில் இருந்து சிக்கல்கள் நிறைந்த பொருளாதாரத்தை நாடு பெற்றிருக்கிறது என கூறி உரையைத் தொடங்கினார்.

    சர்வதேச நிதியத்துடன் (ஐஎம்எப்) செய்து கொண்ட ஒப்பந்தத்தை முந்தைய அரசு காலில் போட்டு மிதித்து எங்களுக்காக கண்ணி வெடிகளைப் போட்டது என்று சாடினார். இம்ரான்கான் அரசு தனது கடைசி வாரங்களில் அரசின் கஜானாக்கள் காலியாக இருந்தாலும் எரிபொருட்கள் விலையைக் குறைத்து, எங்களது அரசு சிக்கலில் விழுமாறு செய்தது என்றும் குற்றம்சாட்டினார்.

    தனது புதிய அரசு பதவி ஏற்று, கனத்த இதயத்துடன்தான் சர்வதேச சந்தையில் ஏற்பட்ட விலை உயர்வுக்கு ஏற்ப தாங்களும் விலையை உயர்த்தியதாக குறிப்பிட்டார்.

    ஆனாலும் தற்போது கடவுளின் ஆசியுடன் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்து வருவதாகவும், கடவுளின் கருணையால் விலையை குறைக்க வாய்ப்பு ஏற்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

    இதையடுத்து பெட்ரோல் லிட்டருக்கு ரூ.18.50-ம், டீசல் லிட்டருக்கு ரூ.40.54-ம் குறைக்கப்படுவதாக அறிவித்து மக்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தினார். இது நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்து விட்டது.

    ×