உலகம்
உலக சுகாதார அமைப்பு

ஏழை நாடுகளுக்கு 100 கோடி கொரோனா தடுப்பூசிகள்- உலக சுகாதார அமைப்பு சாதனை

Published On 2022-01-17 08:07 GMT   |   Update On 2022-01-17 08:07 GMT
ருவாண்டாவுக்கு கடந்த 15-ந்தேதி 11 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. இதன் மூலம் இந்த தடுப்பூசிகளின் எண்ணிக்கை 100 கோடியை எட்டியுள்ளது.

நியூயார்க்:

கொரோனா நோய் தொற்று தொடங்கிய பிறகு பல ஏழை நாடுகள் அதற்கான தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

அந்த நாடுகளுக்கு உதவும் வகையில் ஐ.நா. சபை ‘கோவேக்ஸ்’ என்ற உலகளாவிய தடுப்பூசி திட்டத்தை கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கியது.

வளர்ந்த மற்றும் பணக்கார நாடுகள் இந்த திட்டத்தின் கீழ் நன்கொடையாக அளித்த தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு வழங்கி வருகிறது. தடுப்பூசிகள் வினியோகத்தில் சமத்துவமின்மை நிலவுவதாக நீண்ட நாட்களாக குற்றம்சாட்டி வரும் உலக சுகாதார அமைப்பு, பிற நாடுகளும் கோவேக்ஸ் திட்டத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.


கடந்த 13-ந்தேதி நிலவரப்படி 194 உறுப்பு நாடுகளில் 36 நாடுகள் 10 சதவீதத்துக்கு குறைவாகவும், 88 நாடுகள் 40 சதவீதத்துக்கு குறைவாகவும் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கடந்த மாதம் கூறுகையில், ‘‘வருகிற ஜூலைக்குள் அனைத்து நாடுகளும் 70 சதவீதம் தடுப்பூசி செலுத்திக் கொள்வதாக இலக்கு நிர்ணயித்து புத்தாண்டு தீர்மானமாக எடுத்துக் கொள்ள வேண்டும்’’ என்றார்.

இந்தநிலையில் ஐ.நா. சபை மூலம் ஏழை நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் கோவேக்ஸ் திட்டத்தின் கீழ் இதுவரை 100 கோடி டோஸ் தடுப்பூசிகள் வழங்கி சாதனை படைத்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு நேற்று தெரிவித்தது.

ருவாண்டாவுக்கு கடந்த 15-ந்தேதி 11 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. இதன் மூலம் இந்த தடுப்பூசிகளின் எண்ணிக்கை 100 கோடியை எட்டியுள்ளது.

இதையும் படியுங்கள்... குடியரசு தின விழாவில் பங்கேற்க தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பு

Tags:    

Similar News