செய்திகள்
தலிபான் தலைவர்கள்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் புதிய அரசு பதவி ஏற்பு விழா ரத்து

Published On 2021-09-11 10:49 GMT   |   Update On 2021-09-11 10:49 GMT
அமெரிக்காவும் அதன் நேட்டோ கூட்டாளிகளும் அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல் தினத்தில் தலிபான்கள் அரசு பதவி ஏற்கும் விழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன.
காபூல்:

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறியதை அடுத்து அங்கு ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் மீண்டும் கைப்பற்றினர்.

கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி அமெரிக்காவின் இரட்டை கோபுரம் மீது விமானங்கள் மூலம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் ஈடுபட்ட அல்-கொய்தா தீவிரவாதிகளுக்கு தலிபான்கள் அடைக்கலம் கொடுத்ததால் அவர்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியது.

அப்போது ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த தலிபான்களை அப்புறப்படுத்தி 2004-ம் ஆண்டு தேர்தல் நடத்தி புதிய அரசு அமைக்கப்பட்டது.

இதற்கிடையே 20 ஆண்டுகளுக்கு பிறகு ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை சாதகமாக பயன்படுத்தி ஆட்சியை தலிபான்கள் மீண்டும் பிடித்தனர்.

சமீபத்தில் இடைக்கால அரசையும் அறிவித்தனர். பிரதமராக முல்லா ஹசன் நியமிக்கப்பட்டார். துணை பிரதமராக முல்லா பராதரும், அப்துல் சலாம் ஹனாபி ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் 33 பேர் கொண்ட புதிய அமைச்சரவையும் வெளியிடப்பட்டது. இதில் ஐ.நா. சபையில் அறிவிக்கப்பட்ட தீவிரவாதிகளும் மந்திரிகளாக உள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் புதிய அரசு பதவி ஏற்கும் விழா அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல் தினமான செப்டம்பர் 11-ந் தேதி நடைபெறும் என்று அறிவித்தனர். மேலும் பதவி ஏற்பு விழாவுக்கு ரஷியா, ஈரான், சீனா, கத்தார், பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு தலிபான்கள் அழைப்பு விடுத்திருந்தனர்.

இந்த நிலையில் தலிபான்களின் புதிய அரசு பதவி ஏற்கும் விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவும் அதன் நேட்டோ கூட்டாளிகளும் அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல் தினத்தில் தலிபான்கள் அரசு பதவி ஏற்கும் விழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன.

மனிதாபிமானமற்ற முறையில் ஆட்சியை தலிபான்கள் பிடித்தது தவறு என்பதாலும், இரட்டை கோபுர தாக்குதல் தினத்தில் பதவி ஏற்பது சரியில்லை என்பதாலும், பதவி ஏற்பு விழாவை நிறுத்தி வைக்க தலிபான்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்று கத்தார் அரசிடம் அமெரிக்கா வலியுறுத்தியது.

இதையடுத்து தலிபான் புதிய அரசு பதவி ஏற்பு விழா இன்று ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து ஆப்கான் அரசின் கலாசார ஆணைய உறுப்பினர் இனாமுல்லா சமங்கனி டுவிட்டரில் கூறும்போது, ‘ஆப்கானிஸ்தானின் புதிய அரசாங்கம் பதவி ஏற்கும் விழா சில தினங்களுக்கு முன்பே ரத்து செய்யப்பட்டது. மக்களை மேலும் குழப்ப வேண்டாம் என்பதற்காக அமைச்சரவையில் ஒரு பகுதி மட்டும் பதவி ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

அமைச்சரவை ஏற்கனவே தனது பணிகளை தொடங்கி விட்டது’ என்று தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News