செய்திகள்
கோப்புப்படம்

ஏமனில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து 25 பேர் பலி - 175 பேரின் கதி என்ன?

Published On 2021-06-15 22:15 GMT   |   Update On 2021-06-15 22:15 GMT
சட்டவிரோதமாக மற்றும் அபாயகரமான முறையில் மேற்கொள்ளப்படும் இந்த கடல் பயணங்கள் பல நேரங்களில் விபத்தில் முடிந்து விடுகிறது.
ஏடன்:

உள்நாட்டுப் போர் மற்றும் வறுமையால் வாடும் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் வாழ்வாதாரம் தேடி பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். அந்த வகையில் எத்தியோப்பியா மற்றும் சோமாலியா நாடுகளைச் சேர்ந்த மக்கள் கடல் வழியாக படகுகளில் சட்டவிரோதமாக பயணம் செய்து சவுதி அரேபியாவில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். இவர்கள் ஏமன் நாட்டின் பாப் அல் மண்டாப் ஜலசந்தி வழியாக பயணித்து சவுதி அரேபியா செல்ல வேண்டியுள்ளது. சட்டவிரோதமாக மற்றும் அபாயகரமான முறையில் மேற்கொள்ளப்படும் இந்த கடல் பயணங்கள் பல நேரங்களில் விபத்தில் முடிந்து விடுகிறது.

இந்த நிலையில் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த அகதிகள் சுமார் 200 பேரை ஏற்றிக்கொண்டு படகு ஒன்று பாப் அல் மண்டாப் ஜலசந்தி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் படகு கடலில் கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கினர். விபத்து நடந்த பல மணி நேரங்களுக்கு பின்னர் அந்த வழியாக படகுகளில் வந்த மீனவர்கள் கடலில் படகு கவிழ்ந்து கிடப்பதை கண்டு உடனடியாக மீட்புப் பணியில் இறங்கினர்.

எனினும் அவர்களால் 25 பேரை பிணமாகத்தான் மீட்க முடிந்தது. 175 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
Tags:    

Similar News