செய்திகள்
போரிஸ் ஜான்சன்

அடுத்த ஆண்டுக்குள் உலக மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி - போரிஸ் ஜான்சன்

Published On 2021-06-06 22:52 GMT   |   Update On 2021-06-06 22:52 GMT
அடுத்த ஆண்டு இறுதிக்குள் உலக மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட்டு முடிக்க உறுதி எடுத்துக்கொள்ளுமாறு ‘ஜி-7’ உச்சி மாநாட்டில் பிரதமர் போரிஸ் ஜான்சன் வலியுறுத்துகிறார்.
லண்டன்:

அடுத்த ஆண்டு இறுதிக்குள் உலக மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட்டு முடிக்க உறுதி எடுத்துக்கொள்ளுமாறு ‘ஜி-7’ உச்சி மாநாட்டில் உலகத்தலைவர்களிடம் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வலியுறுத்துகிறார்.

உலகின் வளர்ந்த நாடுகளான கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பை கொண்டு ‘ஜி-7’ என்ற அமைப்பு செயல்படுகிறது.

உலகம் கொரோனா தொற்றுக்கு எதிராக வலிமையுடன் போராடி வருகிற இந்த தருணத்தில் ‘ஜி-7’ அமைப்பின் உச்சிமாநாடு, இங்கிலாந்தில் கார்ன்வாலில் உள்ள ஒரு கடலோர கிராமத்தில் (கார்பிஸ் பே) வருகிற 11-ந் தேதி முதல் 13-ந்தேதி வரை நடக்கிறது.



இங்கிலாந்து நடத்துகிற இந்த உச்சி மாநாடுதான் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பின்னர் முதன்முதலாக உலக தலைவர்கள் நேரில் கலந்து கொள்கிற மாநாடாக அமைகிறது. இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல், இத்தாலி பிரதமர் மரியோ டிராகி, ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா, ஐரோப்பிய கூட்டமைப்பின் சார்பில் ஐரோப்பிய கமிஷனின் தலைவர் உர்சுலா வான்டெர் லேயன், ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

உலக மக்கள் அனைவருக்கும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு உறுதி எடுத்துக்கொள்ளுமாறு உலகத்தலைவர்களை வேண்டிக்கொள்ள இந்த உச்சி மாநாட்டை ஒரு வாய்ப்பாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பயன்படுத்துவார் என தகவல்கள் கூறுகின்றன.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

போருக்குப் பிந்தைய சகாப்தத்தின் மாபெரும் சவாலாக உயர உலகம் நம்மை எதிர்நோக்கி உள்ளது. கொரோனாவை தோற்கடித்து உலகளாவிய பொருளாதார மீட்புக்கு வழிநடத்த வேண்டியதிருக்கிறது.

அடுத்த ஆண்டு இறுதிக்குள் உலகிற்கு கொரோனா தடுப்பூசி போடுவது மருத்துவ வரலாற்றில் மிகப்பெரிய சாதனையாக அமையும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

ஏற்கனவே இங்கிலாந்தின் உபரி தடுப்பூசிகளை உலக நாடுகளுக்கு வழங்குவதற்காக கோவேக்ஸ் அமைப்புக்கு வழங்குவதாக கடந்த பிப்ரவரி மாதம் அந்த நாடு உறுதி எடுத்துக்கொண்டுள்ளது.

ஆனால் எவ்வளவு தடுப்பூசி என கூறவில்லை. 7 கோடி மக்களைக் கொண்ட இங்கிலாந்து, 40 கோடி தடுப்பூசிக்கு ஆர்டர் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா உபரியாக உள்ள 8 கோடி தடுப்பூசிகளை இந்த மாத இறுதிக்குள் கோவேக்ஸ் அமைப்பின் வழியாக உலகுக்கு வழங்க திட்டமிட்டுள்ளது.
Tags:    

Similar News