செய்திகள்
ஐநா பொதுசெயலாளரை சந்தித்த வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்

ஐ.நா. பொது செயலாளருடன் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

Published On 2021-05-25 20:47 GMT   |   Update On 2021-05-25 20:51 GMT
ஐ.நா. பொது செயலாளரை சந்தித்த மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் கொரோனா பாதிப்பு மற்றும் பயங்கரவாதம் பற்றி ஆலோசனை நடத்தினார்.
நியூயார்க்:

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் அமெரிக்காவுக்கு 5 நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.  இதற்காக கடந்த 24-ம் தேதி அவர் அமெரிக்கா சென்றடைந்த அவர், இன்று (26-ம் தேதி) வரை நியூயார்க் நகரில் தங்குகிறார். அதன்பின் வாஷிங்டன் டி.சி.க்கு சென்று அரசு நிர்வாகத்துடனான இருதரப்பு கூட்டங்களில் கலந்து கொள்கிறார்.

இந்நிலையில், ஐ.நா. பொது செயலாளர் அன்டோனியோ குட்டரசை மத்திய வெளியுறவுத் துறை மந்திரி எஸ். ஜெய்சங்கர் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பில் கொரோனா பாதிப்பு, உலகளாவிய தடுப்பூசிக்கான தீர்வுகளை கண்டறிதல் மற்றும் பயங்கரவாதம் பற்றி ஆலோசனை மேற்கொண்டார்.

இதுதொடர்பாக ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள டுவிட்டரில் கூறியுள்ளதாவது:

ஐ.நா. பொது செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் உடன் நடந்த சந்திப்பில் விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

அதில், கொரோனா பாதிப்பின் சவாலான சூழல், அவசர மற்றும் திறன் வாய்ந்த உலகளாவிய தடுப்பூசிக்கான தீர்வுகளை கண்டறிவதன் அவசியம் ஆகியவை அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டது.

பருவகால செயல்பாடுகள் பற்றிய பார்வைகளைப் பரிமாறிக் கொண்டோம். இதுபோன்ற பெரிய நோக்கங்களுக்கு பெரிய அளவிலான வளங்கள் அவசியப்படுகின்றன. நம்முடைய தீவிரத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை நிதி ஒதுக்கீடே முடிவு செய்ய முடியும். இந்த சந்திப்பில் பயங்கரவாத ஒழிப்பு பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.

ஐ.நா. பொது செயலாளரின் தலைமைத்துவத்திற்கு, குறிப்பிடும்படியாக இதுபோன்ற சவாலான தருணங்களில் இந்தியா மதிப்பளிக்கிறது. 2-வது முறையாக ஐ.நா. பொது செயலாளராவதற்கு குட்டரெசுக்கு இந்தியா ஆதரவு வழங்குகிறது என அவரிடம் தெரிவித்தோம் என பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News