செய்திகள்
மாரத்தானில் பங்கேற்ற வீரர்கள்

மாரத்தான் வீரர்களை நிலைகுலைய வைத்த இயற்கை சீற்றம்... சீனாவில் 21 பேர் பலி

Published On 2021-05-23 04:02 GMT   |   Update On 2021-05-23 05:13 GMT
மாரத்தான் போட்டியின்போது திடீரென தாக்கிய தீவிர தட்பவெப்பநிலையால் வீரர்கள் தொடர்ந்து முன்னேற முடியாமல் சிக்கிக்கொண்டனர்.
பீஜிங்:

சீனாவின் கன்சூ மாகாணம், பேயின் நகர் அருகே உள்ள சுற்றுலா தலத்தில் 100 கி.மீ. தொலைவுக்கான மாரத்தான் ஓட்ட பந்தய போட்டி நடைபெற்றது.  இதில், 172 பேர் கலந்து கொண்டனர். மலைப்பகுதியை கடக்கும் சவால் நிறைந்த இந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்ற வீரர்கள் ஆர்வத்துடன் தங்கள் இலக்கை நோக்கி ஓடிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை மற்றும் பனி மழை பெய்தது. வெப்பநிலையும் கடுமையாக குறைந்தது.

திடீரென தாக்கிய இந்த தீவிர தட்பவெப்பநிலையால் வீரர்கள் தொடர்ந்து முன்னேற முடியாமல் சிக்கிக்கொண்டனர். சில வீரர்கள் போட்டி அமைப்பாளர்களுக்கு தகவல் அனுப்பினர். 



இதையடுத்து மீட்புக்குழுவினர் விரைந்து சென்று வீரர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மாரத்தான் போட்டி நிறுத்தப்பட்டது. இந்த இயற்கை சீற்றத்தின் தாக்கம் காரணமாக, 21 போட்டியாளர்கள் உயிரிழந்து உள்ளனர். மற்றவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். அவர்களில் சிலரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

பந்தய தூரத்தின் 20 கிலோ மீட்டரில் இருந்த 30 கிலோ மீட்டர் வரை திடீரென பேரழிவு தரும் வானிலை நிலவியதாகவும், குறுகிய நேரத்தில் ஆலங்கட்டி மழை மற்றும் பனி மழை பெய்ததால் வெப்பநிலை கடுமையாக குறைந்ததாகவும் பேயின் நகர மேயர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News