செய்திகள்
பெஞ்சமின் நேட்டன்யாஹூ

இஸ்ரேலில் ஆட்சி அமைக்க பெஞ்சமின் நேட்டன்யாஹூவுக்கு வழங்கிய காலக்கெடு முடிந்தது

Published On 2021-05-06 00:19 GMT   |   Update On 2021-05-06 00:19 GMT
இஸ்ரேலில் 2019-ம் ஆண்டிலிருந்து 3 முறை, பொதுத்தேர்தல் நடைபெற்றும் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் கடந்த மார்ச் மாதம் 4-வது முறையாக பொதுத்தேர்தல் நடந்தது.
ஜெருசலேம்:

இஸ்ரேலில் கடந்த 2019-ம் ஆண்டிலிருந்து 3 முறை, பொதுத்தேர்தல் நடைபெற்றும் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி 4-வது முறையாக பொதுத்தேர்தல் நடந்தது.

இதிலும் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூவின் லிக்குட் கட்சி வெற்றி பெற்றபோதிலும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்கவில்லை.‌ அதேபோல் எதிர்க்கட்சிகளுக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இதனால் பெஞ்சமின் நேட்டன்யாஹூ ஆட்சி அமைப்பதற்கு சிறிய கட்சிகளின் ஆதரவை பெற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார். இந்தநிலையில் இஸ்ரேல் அதிபர் ருவன் ரிவ்லின், ஆட்சி அமைக்க பெஞ்சமின் நேட்டன்யாஹூவுக்கு 28 நாள் காலக்கெடு விதித்தார்.

இதனையடுத்து பெஞ்சமின் நேட்டன்யாஹூ கூட்டணி அரசை எதிர்ப்பதற்கு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். ஆனால் எந்த ஒரு கட்சியும் அவருக்கு ஆதரவு அளிக்க முன்வரவில்லை.

இந்தநிலையில் ஆட்சி அமைப்பதற்கு பெஞ்சமின் நேட்டன்யாஹூவுக்கு வழங்கப்பட்ட 28 நாள் காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது.

இனி அதிபர் ருவன் ரிவ்லின், நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் லிக்குட் கட்சிக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தைப் பிடித்த யேஷ் அதித் கட்சியின் தலைவர் யெய்ர் லாப்பிட்டுக்கு புதிய அரசு அமைக்க 28 நாள் காலக்கெடு வழங்குவார்.

அவரும் 28 நாட்களுக்குள் ஆட்சி அமைக்கத் தவறினால், நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஒரு மனதாக தேர்வு செய்யப்படும் ஒரு வேட்பாளரிடம் பெரும்பான்மையை நிரூபிக்க அதிபர் ருவன் ரிவ்லின் கேட்பார்.

அதுவும் நடக்கவில்லை என்றால் மீண்டும் பொதுத்தேர்தலை நடத்த அதிபர் ருவன் ரிவ்லின் உத்தரவிடுவார். அப்படி நடந்தால் அது இஸ்ரேலில் 2 ஆண்டுகளில் நடக்கும் 5-வது பொதுத்தேர்தலாக இருக்கும்.
Tags:    

Similar News