செய்திகள்
கோப்புப்படம்

தூதரக உறவில் விரிசல் - செக் குடியரசு தூதர்கள் 20 பேரை வெளியேற்றும் ரஷியா

Published On 2021-04-19 23:40 GMT   |   Update On 2021-04-19 23:40 GMT
2014-ம் ஆண்டு ஆயுதக் கிடங்கு தாக்குதலுக்கு உளவுத் தகவல்களை வழங்கியதாக குற்றம் சாட்டி தூதரக அதிகாரிகள் 18 பேரை செக்குடியரசு அரசு கடந்த வாரம் வெளியேற்றியது.
மாஸ்கோ:

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான செக் குடியரசு நாட்டில் கடந்த 2014-ம் ஆண்டு காட்டுக்குள் உள்ள ஆயுத கிடங்கில் பயங்கர வெடி விபத்து நேரிட்டது. இதில் அங்கு வேலை பார்த்து வந்த 2 ஊழியர்கள் பலியாகினர்.

ஆரம்பத்தில் இது ஒரு விபத்து என கருதப்பட்ட நிலையில், உளவுத்துறையின் தீவிர விசாரணையில் இது ஒரு திட்டமிட்ட தாக்குதல் என்பது தெரியவந்தது. மேலும் இந்த தாக்குதலின் பின்னணியில் ரஷியா இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. அப்போது முதலே இரு நாடுகளுக்கும் இடையே உரசல் போக்கு நீடித்து வருகிறது.

இந்த நிலையில் செக் குடியரசு நாட்டில் பணியாற்றி வரும் ரஷிய தூதரக அதிகாரிகள், 2014-ம் ஆண்டு ஆயுதக் கிடங்கு தாக்குதலுக்கு உளவுத் தகவல்களை வழங்கியதாக குற்றம் சாட்டி தூதரக அதிகாரிகள் 18 பேரை செக்குடியரசு அரசு கடந்த வாரம் வெளியேற்றியது.

இந்த விவகாரம் ரஷியா மற்றும் செக் குடியரசு இடையிலான தூதரக உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் செக் குடியரசு நாட்டின் நடவடிக்கைக்கு பதிலடியாக ரஷியாவில் உள்ள அந்த நாட்டின் தூதர்கள் 20 பேரை நாட்டை விட்டு வெளியேற ரஷிய அரசு உத்தரவிட்டுள்ளது.

செக் குடியரசு தூதர்கள் 72 மணி நேரத்துக்குள் ரஷியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரஷிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘தூதர்களை வெளியேற்றும் செக் குடியரசு நாட்டின் முடிவு முன்னோடியில்லாதது, இது ஒரு விரோத செயல். ரஷியாவுக்கு எதிரான சமீபத்திய அமெரிக்க பொருளாதார தடைகளின் பின்னணியில் அமெரிக்காவை மகிழ்விப்பதற்காக செக் குடியரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்’’ எனக் கூறப்பட்டுள்ளது
Tags:    

Similar News