செய்திகள்
முன்னாள் ஜனாதிபதி சிறிசேனா

ஈஸ்டர் தின தாக்குதல் குறித்து முன்னரே தகவல் கிடைக்கவில்லை - சிறிசேனா

Published On 2021-03-27 00:16 GMT   |   Update On 2021-03-27 00:16 GMT
இலங்கையில் 2019 ஈஸ்டர் தினத்தில் தேவாலயங்களில் பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் 11 இந்தியர்கள் உள்பட 258 பேர் கொல்லப்பட்டனர்.
கொழும்பு:

இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி ஈஸ்டர் தினத்தில் கொழும்பில் உள்ள 3 தேவாலயங்கள், 3 ஆடம்பர விடுதிகள் ஆகியவற்றில் பயங்கரவாதிகள் தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களை நிகழ்த்தினர்.

இந்த கொடூர தாக்குதலில் 11 இந்தியர்கள் உள்பட 258 பேர் கொல்லப்பட்டனர். அப்போது இலங்கை பிரதமராக இருந்தவர் ரணில் விக்கிரமசிங்க. ஜனாதிபதியாக இருந்தவர் சிறிசேனா.

இதற்கிடையே, தாக்குதல் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு தனது விசாரணை அறிக்கையை கடந்த மாதம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில் முன்னாள் ஜனாதிபதி சிறிசேனா, தாக்குதல் குறித்து முன்னரே அறிந்து இருந்ததாகவும், அது தொடர்பான தகவலை அப்போதைய பிரதமரிடம் உரிய முறையில் பகிரவில்லை என்றும்கூறப்பட்டிருந்தது. இதுதொடர்பாக எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் சிறிசேனா மவுனம் காத்து வந்தார்.

இந்நிலையில், இலங்கை பாராளுமன்றத்தில் சிறிசேனா நேற்று பேசினார். அப்போது அவர் தன் மீதான குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்தார். 

இதுகுறித்து அவர் கூறுகையில், தனிப்பட்ட முறையில் தாக்குதல் குறித்து நான் முன்கூட்டியே எதையும் அறிந்திருக்கவில்லை. 
உளவுத்துறை தகவல்கள் பற்றி எனக்கு தெரிந்திருந்தால், நான் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி, தேவாலயங்களைப் பாதுகாத்து, அவர்களை கைது செய்து தாக்குதல்களை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுத்து இருப்பேன். நான் தாக்குதல் குறித்து முன்னரே அறிந்திருந்தேன், எனது பொறுப்புகளை புறக்கணித்தேன் எனக் கூறும் யாவரும் மனநலம் சரியில்லாதவர்களாக இருப்பார்கள் என தெரிவித்தார்.
Tags:    

Similar News