செய்திகள்
மியான்மரில் ராணுவ சட்டம் அமல்

மியான்மரில் ராணுவ சட்டம் அமல்- பதற்றம் அதிகரிப்பு

Published On 2021-03-16 03:40 GMT   |   Update On 2021-03-16 03:40 GMT
யாங்கூனின் ஹலிங் தார் யார் மற்றும் ஸ்வேபிதா நகரங்களில் ராணுவ சட்டம் அமல்படுத்துவதாக ராணுவம் அறிவித்துள்ளது.‌
யாங்கூன்:

தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியுள்ளது. மேலும் நாடு முழுவதும் ஓராண்டுக்கு அவசரநிலையை ராணுவம் அறிவித்துள்ளது. ஆங் சான் சூகி உள்பட முக்கிய அரசியல் தலைவர்களும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மியான்மர் ராணுவத்தின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர்.

மக்களின் தன்னெழுச்சி போராட்டத்தை மியான்மர் ராணுவம் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது.ஆனாலும் மியான்மரில் போராட்டம் ஓய்ந்தபாடில்லை. அதேபோல் போராட்டக்காரர்கள் மீது ராணுவம் வன்முறையை கட்டவிழ்த்து விடுவதும் தொடர்கிறது. நேற்று நடைபெற்ற போராட்டத்தில் ராணுவம் துப்பாக்கிச்சூடு  நடத்தியது. இதில், போராட்டக்காரர்கள் 38 பேர் பலியாகினர்.

இதனிடையே, மியான்மர் ராணுவத்துக்கு சீனா  ஆதரவாக இருப்பதாக கூறி அந்நாட்டு நிறுவனங்களை போராட்டக்காரர்கள் சேதப்படுத்தினர். இதையடுத்து,  வன்முறைகளை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மியான்மர் அரசை கேட்டுக் கொண்ட சீன தூதரகம் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் சட்டத்திற்கு உட்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியது.

மேலும் மியான்மரில் உள்ள சீன நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களின் உயிர் மற்றும் உடமைகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று மியான்மர் ராணுவத்தை சீன வலியுறுத்தியது. சீன அரசின் இந்த கோரிக்கையை தொடர்ந்து யாங்கூனின் ஹலிங் தார் யார் மற்றும் ஸ்வேபிதா நகரங்களில் ராணுவ சட்டம் அமல்படுத்துவதாக ராணுவம் அறிவித்துள்ளது.‌

Tags:    

Similar News