செய்திகள்
டிரம்ப் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்

இவ்வளவு நடந்தும் நிறுத்தவில்லை... நாடு முழுவதும் டிரம்ப் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2021-01-07 07:10 GMT   |   Update On 2021-01-07 07:10 GMT
ஜோ பைடன் வெற்றியை எதிர்த்து நாடு முழுவதும் டிரம்ப் ஆதரவாளர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வாஷிங்டன்:

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனின், தேர்தல் வெற்றியை அதிகாரப்பூர்வமாக அறிவித்து, அதற்கான சான்றிதழை வழங்கும் பணிகள் பாராளுமன்றத்தில் தொடங்கியது. அப்போது, இந்த பணிகளை தடுத்து நிறுத்த டிரம்ப் ஆதரவாளர்கள் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். 

ஒரு கட்டத்தில் டிரம்ப் ஆதரவாளர்கள், தடுப்புகளை மீறி பாராளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். அவர்களை வெளியேற்ற முயன்றபோது, போலீசாருக்கும் டிரம்ப் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் உருவானது. 

வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் பெண் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்துள்ளனர். பின்னர் டிரம்ப் ஆதரவாளர்கள் விரட்டியடிக்கப்பட்டு, பாராளுமன்ற வளாகம் முழுவதும் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் வந்தது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மீண்டும் பாராளுமன்ற கூட்டம் தொடங்கியது. 

பாராளுமன்ற வளாக வன்முறை தொடர்பாக 52 பேரை போலீசார் கைது செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வன்முறையின் மூலம் ஆட்சியை கவிக்க அதிபர் டிரம்ப் சதி செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதிபர் டிரம்பால் இத்தகைய வன்முறையா என உலகத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பாராளுமன்ற வளாகத்தில் வன்முறை கட்டுப்படுத்தப்பட்டாலும், நாடு முழுவதும் டிரம்ப் ஆதரவாளர்களின் போராட்டம் நீடிக்கிறது. குறிப்பாக மாநில தலைநகரங்களில் நூற்றுக்கணக்கானோர் திரண்டு பைடனின் வெற்றியை எதிர்த்து முழக்கங்கள் எழுப்பியவண்ணம் உள்ளனர்.

கொரோனா பரவல் அதிகம் உள்ள போதிலும், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளவர்களில் பெரும்பாலானோர் முககவசம் அணியவில்லை. ஒஹியோ, கலிபோர்னியா உள்ளிட்ட சில மாநிலங்களில் டிரம்ப் ஆதரவாளர்களுக்கு எதிராகவும் போராட்டம் நடந்ததால், இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சில இடங்களில் கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News