செய்திகள்
குத்தகைக்கு விடப்படும் ஓட்டல்

கொரோனாவால் கடும் நஷ்டம்- அமெரிக்காவில் மேலும் 10,000 ஓட்டல்கள் மூடப்படுகின்றன

Published On 2020-12-09 05:13 GMT   |   Update On 2020-12-09 05:13 GMT
அமெரிக்காவில் இந்த ஆண்டு ஏற்கனவே ஒரு லட்சத்து 10 ஆயிரம் ஓட்டல்கள் மூடப்பட்டுள்ள நிலையில், விரைவில் மேலும் 10000 ஓட்டல்கள் மூடப்படலாம் என்று தேசிய உணவக சங்கம் தெரிவித்துள்ளது.
வாஷிங்டன்:

கொரோனா தொற்று உலக நாடுகளின் பொருளாதாரத்தை புரட்டிப் போட்டுள்ளது. கொரோனாவால் அதிக அளவில் பாதிப்பை சந்தித்துள்ள அமெரிக்காவில், ஓட்டல்களுக்கு வாடிக்கையாளர்கள் வருகை அடியோடு குறைந்ததால் கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு சம்பளம்கூட கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டதால் ஏராளமான ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளன. ஓட்டல்களை குத்தகைக்கு கொடுக்கவும், விற்பனை செய்யவும் பலர் விளம்பரம் செய்துள்ளனர். 

இந்நிலையில் ஓட்டல்களின் நிலை குறித்து தேசிய உணவக சங்கம் ஒரு ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வு முடிவை வெளியிட்டு, அரசுக்கு தனது கோரிக்கையையும் வைத்துள்ளது.

இதுபற்றி தேசிய உணவக சங்கம் கூறியதாவது:-

கொரோனா தொற்றுநோயால் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக, இந்த ஆண்டு நாட்டில் உள்ள 110000 ஓட்டல்கள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளன. வரும் மூன்று வாரங்களில் மேலும் 10000 ஓட்டல்கள் மூடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

எனவே, தொற்றுநோயால் கடும் பொருளாதார சிக்கலில் உள்ள ஓட்டல் தொழில்துறைக்கு உதவ அரசு புதிய நிதித்தொகுப்பை வெளியிட வேண்டும். நிவாரணத்திற்காக இனியும் காத்திருக்க முடியாது. உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

6,000 உணவக ஆபரேட்டர்களிடம் நடத்திய இந்த ஆய்வில், 87 சதவீத முழு சேவை உணவகங்களில் சராசரியாக 36% வருவாய் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து தொழிலை மீட்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதால்,  83 சதவீத உணவகங்கள் அடுத்த மூன்று மாதங்களில் விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News