செய்திகள்
அந்தோணி பிளிங்கன்

வெளியுறவுத் துறை மந்திரியாக அந்தோணி பிளிங்கனை தேர்வு செய்கிறார் பைடன்

Published On 2020-11-23 09:30 GMT   |   Update On 2020-11-23 09:30 GMT
அமெரிக்காவின் அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடன், நாளை தனது முதல் சுற்று அமைச்சரவை அறிவிப்புகளை வெளியிட உள்ளார்.
வாஷிங்டன்:

அமெரிக்காவின் 46-வது அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடன், ஜனவரி 20 ஆம் தேதி அதிபராக பொறுப்பேற்க உள்ளார். தேர்தல் பிரச்சாரத்தின்போது, அமெரிக்காவை பிரதிபலிக்கும் வகையில் தமது அமைச்சரவை அமைந்திருக்கும் என ஜோ பைடன் குறிப்பிட்டிருந்தார். அவரது அமைச்சரவையில் இடம்பெறக் கூடிய முக்கிய தலைவர்கள் குறித்து தொடர்ந்து தகவல் வெளியான வண்ணம் உள்ளது. நாளை தனது முதல் சுற்று அமைச்சரவை அறிவிப்புகளை வெளியிட பைடன் தயாராக உள்ளார்.

இந்நிலையில் அமைச்சரவையின் முக்கிய பொறுப்பான வெளியுறவுத் துறை மந்திரி பதவிக்கு, தனது நம்பகமான வெளியுறவுக் கொள்கை ஆலோசகர் அந்தோணி பிளிங்கனை பைடன் நியமிக்க விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதேபோல் ஜேக் சல்லிவனை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக தேர்வு செய்ய விரும்புவதாகவும் ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

58 வயதான பிளிங்கன், ஒபாமாவின் இரண்டாவது பதவிக்காலத்தில் அவரது அமைச்சரவையில் வெளியுறவுத்துறை துணை மந்திரியாகவும், பைடன் துணை அதிபராக இருந்தபோது தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாடு கொண்டுள்ள பிளிங்கன் நியமனத்தால், இந்தியா -அமெரிக்கா நட்புறவு மேலும் வலுப்பெறும் என கூறப்படுகிறது. 
Tags:    

Similar News