செய்திகள்
கோப்பு படம்

ஏர் இந்தியா விமானம் மூலம் சீனாவின் வுகான் நகருக்கு சென்ற 19 இந்தியர்களுக்கு கொரோனா

Published On 2020-11-02 16:21 GMT   |   Update On 2020-11-02 16:21 GMT
சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே சமீபத்தில் விமான போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கப்பட்டது.
வுகான்:

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் லட்சக்கணக்கில் மனித உயிர்களை காவுவாங்கி வருகிறது. இந்தியாவிலும், வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஆனால், வைரஸ் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட சீனாவில் தற்போது கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்த பின்னர் வெளிநாடுகளுடனான விமான போக்குவரத்திற்கு சீனா தடை விதித்தது. ஆனால், தற்போது அங்கு நிலைமை சீரடைந்ததையடுத்து, ஒரு சில நாடுகளின் விமான போக்குவரத்திற்கு சீனா அனுமதி வழங்கியுள்ளது.

அந்த வகையில், இந்தியாவுடன் விமான போக்குவரத்திற்கு சீனா சமீபத்தில் அனுமதி வழங்கியது. இதையடுத்து, சீனாவில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கவும், இந்தியாவில் உள்ளவர்கள் சீனாவுக்கு செல்லவும் வந்தேபாரத் திட்டத்தின் கீழ் விமான போக்குவரத்து நடைபெற்று வருகிஅது. இதுவரை 5 முறை ஏர் இந்தியா விமானம் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், வந்தேபாரத் திட்டத்தின் கீழ் கடந்த வெள்ளிக்கிழமை கொரோனாவுக்கு பின் முதல்முறையாக ஏர் இந்தியா விமானம் வுகான் நகரத்திற்கு பயணம் மேற்கொண்டது. இந்த விமானத்தில் 277 பயணிகள் பயணம் மேற்கொண்டனர்.

ஏர் இந்தியா விமானத்தில் சீனாவின் வுகான் நகரை சென்றடைந்தவர்களிடம் வுகான் விமான நிலையத்தில் வைத்து அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். அந்த பரிசோதனையில் விமானத்தில் வந்த 19 இந்தியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், 39 பேருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதும் தெரியவந்தது. 

இதையடுத்து, அவர்கள் அனைவரும் சீன நடைமுறைபடி தனிமைப்படுத்தப்பட்டனர். இந்தியாவில் இருந்து வந்தவர்களுக்கு கொரோனா உறுதியானதையடுத்து அடுத்தடுத்த வந்தேபாரத் சிறப்பு விமான போக்குவரத்து திட்டங்களுக்கு சீனா அனுமதி அளிப்பதில் சிக்கல் ஏற்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.   
Tags:    

Similar News