செய்திகள்
வெள்ளை மாளிகையின் பால்கனியில் நின்றபடி தனது நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் டிரம்ப் உரையாற்றியபோது

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பால் பிறருக்கு கொரோனா பரவும் அபாயம் இல்லை - வெள்ளை மாளிகை தலைமை மருத்துவர் தகவல்

Published On 2020-10-11 20:48 GMT   |   Update On 2020-10-11 20:48 GMT
அமெரிக்க ஜனாதிபதி டிரம்பால் பிறருக்கு கொரோனா பரவும் அபாயம் இல்லை என வெள்ளை மாளிகையின் தலைமை மருத்துவர் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்:

அமெரிக்காவில் கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் அடுத்த மாதம் 3-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கிறது.

இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் 2-வது முறையாக போட்டியிட அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் களம் இறக்கப்பட்டுள்ளார். தேர்தலுக்காக கொரோனா அச்சுறுத்தலையும் மீறி ஒவ்வொரு மாகாணமாக சென்று சூறாவளி பிரசாரம் செய்து வந்த டிரம்ப், கடந்த 1-ந்தேதி கொரோனா தொற்றுக்கு ஆளானார்.

இதையடுத்து மறுநாளே அவர் மேரிலேண்ட் மாகாணத்தில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுக் கொண்டே அலுவலக பணிகளை கவனித்து வந்த டிரம்ப், 4 நாட்களுக்கு பிறகு கடந்த 5-ந் தேதி வெள்ளை மாளிகைக்கு திரும்பினார்.

ஆஸ்பத்திரியில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டாலும் டிரம்ப் கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக மீண்டுவிட்டாரா என்பதை அவரது மருத்துவர்கள் தெளிவுபடுத்தாமல் இருந்து வந்தனர். இந்த சூழலில் டிரம்புக்கு அளிக்கப்பட்டு வந்த சிகிச்சை முடிவடைந்ததாகவும் சனிக்கிழமை முதல் அவர் தனது அரசு பணிகளை மீண்டும் தொடங்குவார் என்றும் வெள்ளை மாளிகையின் தலைமை மருத்துவர் சீன் கான்லி கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

அதே சமயம் டிரம்புக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு அதில் அவருக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதா என்பதை மருத்துவர் சீன் கான்லி தெளிவுபடுத்தவில்லை.

எனவே டிரம்ப் உடல்நிலை குறித்த உண்மையான மற்றும் முறையான தகவல்களை வெள்ளை மாளிகை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என ஜனநாயகக் கட்சியினர் கோரிக்கை விடுத்தனர்.

இந்தநிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 10 நாட்களுக்கு பிறகு ஜனாதிபதி டிரம்ப் முதல் முறையாக, நேற்றுமுன்தினம் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். வெள்ளை மாளிகையில் ‘அமைதி போராட்டம்’ என்கிற பெயரில் நடந்த நிகழ்வில் ஜனாதிபதி டிரம்ப் தனது நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் தோன்றி உரையாற்றினார்.

அப்போது தனக்காக பிரார்த்தனை செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்ட டிரம்ப், தான் மிகவும் நலமாக இருப்பதாகவும், இப்போது கொரோனாவுக்காக மருந்து எதையும் எடுத்துக் கொள்ளவில்லை என்றும் தெரிவித்தார். இதனிடையே டிரம்ப் கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக மீண்டு விட்டாரா என்பது உறுதி செய்யப்படாத நிலையில் அவர் வெள்ளை மாளிகையில் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு ஜனநாயக கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

ஜனநாயக கட்சியின் மூத்த எம்.பி. ஆடம் ஷிப், “வெள்ளை மாளிகையில் நேற்று நடந்தது சாதாரண நிகழ்ச்சி அல்ல, கொரோனா வைரசை பரப்புவதற்கான மாபெரும் பேரணி” என சாடினார்.

இந்தநிலையில் ஜனநாயகக் கட்சியினரின் இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக வெள்ளை மாளிகையின் தலைமை மருத்துவர் சீன் கான்லி நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் விதிமுறைப்படி ஜனாதிபதி டிரம்ப் தனிமைப்படுத்தலை பாதுகாப்பாக நிறைவு செய்தார் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். அவருக்கு நடத்தப்பட்ட தொடர்ச்சியான சோதனைகள் வைரஸ் சுமைகள் குறைந்ததை நிரூபித்துள்ளன. இதன் மூலம் டிரம்பிடம் இருந்து மற்றவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இல்லை என்பது உறுதி செய்யப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News