செய்திகள்
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 11 பேர் பலி

Published On 2020-09-28 23:21 GMT   |   Update On 2020-09-28 23:21 GMT
இந்தோனேசியா நாட்டில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.
ஜகர்தா:

இந்தோனேசியா பல்வேறு பல்வேறு தீவுக்கூட்டங்களை கொண்ட நாடு. இங்கு நிலநடுக்கம், கனமழை, வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்கள் அடிக்கடி நிகழ்வது வழக்கம். இந்த இயற்கை பேரிடர்களால் அந்நாட்டு மக்கள் பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில், அந்நாட்டின் தீவுக்கூட்டங்களில் ஒன்றான போர்னியோ தீவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக அப்பகுதிகளில் அவ்வப்போது நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. 

குறிப்பாக போர்னியோ தீவின் தரகன் பகுதியின் நேற்று பெய்த கனமழை காரணமாக திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அப்பகுதியில் இருந்த சில வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. மேலும், வீடுகளில் தங்கி இருந்த பலரும் உயிருடன் மண்ணுக்குள் புதைந்தனர்.

இந்த நிலச்சரிவு குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இதில் 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். 

ஆனாலும், இந்த நிலச்சரிவில் சிக்கி 5 குழந்தைகள் உள்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், சிலர் மண்ணுக்குள் புதைந்து இருக்கலாம் என அஞ்சப்படுவதால் மீட்புபணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

Tags:    

Similar News