செய்திகள்
ஷாபாஸ் ஷெரீப்

பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஊழல் வழக்கில் கைது

Published On 2020-09-28 22:06 GMT   |   Update On 2020-09-28 22:06 GMT
பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷாபாஸ் ஷெரீப் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார்.
இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் இளைய சகோதரரான ஷாபாஸ் ஷெரீப் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(நவாஸ்) கட்சியின் தலைவராக உள்ளார். இவர் கடந்த 2008 முதல் 2018-ம் ஆண்டு வரை பஞ்சாப் மாகாணத்தின் முதல்-மந்திரியாக பதவி வகித்துள்ளார். தற்போது பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக உள்ள ஷாபாஸ் ஷெரீப் மீது 2 ஊழல் வழக்குகள் உள்ளன.


இதில் பஞ்சாப் மாகாண முதல்-மந்திரியாக இருந்தபோது அவர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி 41.9 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.309 கோடி) கையாடல் செய்த வழக்கில் அவரை கைது செய்ய தேசிய பொறுப்புடமை முகமை அனுமதி கோரியது. அதனைத்தொடர்ந்து இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்கக்கோரி ஷாபாஸ் ஷெரீப் லாகூர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஷாபாஸ் ஷெரீப் நேரில் ஆஜரானார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ஷாபாஸ் ஷெரீப்புக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து அவரது மனுவை தள்ளுபடி செய்தார். அதனைத் தொடர்ந்து தேசிய பொறுப்புடமை முகமை அதிகாரிகள் கோர்ட்டு வளாகத்தில் வைத்தே அவரை கைது செய்தனர்.
Tags:    

Similar News