செய்திகள்
ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே

ஜப்பானின் அடுத்த பிரதமர் யார்? இன்று தேர்வு செய்யப்படுகிறார்

Published On 2020-09-13 23:02 GMT   |   Update On 2020-09-13 23:02 GMT
ஜப்பானின் அடுத்த பிரதமர் யார் என்பது குறித்து தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.
டோக்கியோ:

ஜப்பானின் நீண்டகால பிரதமர் என்கிற பெருமைக்கு சொந்தக்காரரான ஷின்ஜோ அபே, தனது உடல் நலனை கருத்தில் கொண்டு அண்மையில் தனது பதவியை ராஜினாமா செய்தார். எனினும் புதிய பிரதமரை நாடாளுமன்றம் தேர்வு செய்யும் வரை பதவியில் நீடிப்பேன் என அவர் அறிவித்துள்ளார்.

முன்னாள் வெளியுறவு மந்திரி பமியோ கிஷிடா, முன்னாள் ராணுவ மந்திரி ஷிகெரு இஷிபா மற்றும் ஜப்பானின் தலைமை அமைச்சரவைச் செயலாளரும், ஷின்ஜோ அபேயின் விசுவாசியுமான யோஷிஹைட் சுகா ஆகியோர் பிரதமர் போட்டிக்கான களத்தில் உள்ளனர்.

இவர்கள் 3 பேரில் யோஷிஹைட் சுகாவுக்கு ஆளும் தாராளவாத ஜனநாயகக் கட்சியினரிடையே செல்வாக்கு இருப்பதால் அவர் பிரதமராகத் தேர்வு செய்யப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஜப்பானைப் பொறுத்தவரையில் ஆளும் கட்சியின் தலைவர் பொறுப்பை வகிக்கும் நபரே நாட்டின் பிரதமராகவும் இருப்பார்.

அந்த வகையில் ஆளும் தாராளவாத ஜனநாயகக் கட்சியின் தலைவரை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.

ஜப்பான் நாடாளுமன்றத்தில் உள்ள 535 உறுப்பினர்களும், 47 மாகாணங்களை சேர்ந்த ஆளும் தாராளவாத ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகளும் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்ய உள்ளனர்.

ஆளும் தாராளவாத ஜனநாயகக் கட்சியின் ஆட்சி அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் முடிவடையும் நிலையில், இன்று தேர்வு செய்யப்படும் தலைவர் ஓர் ஆண்டுக்கு கட்சியையும், ஆட்சியையும் வழி நடத்துவார்.
Tags:    

Similar News