செய்திகள்
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி

பிரணாப் முகர்ஜி மறைவுக்கு வங்காளதேசத்தில் துக்கம் அனுசரிப்பு

Published On 2020-09-02 21:41 GMT   |   Update On 2020-09-02 21:41 GMT
பிரணாப் முகர்ஜியின் மறைவுக்கு வங்காளதேசத்தில் நேற்று துக்கம் அனுசரிக்கப்பட்டது. டிரம்ப், ராஜபக்சே ஆகியோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
டாக்கா:

‘பாரத ரத்னா’ விருது பெற்ற முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடந்த திங்கட்கிழமை மரணம் அடைந்தார். அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் நேற்று முன்தினம் தகனம் செய்யப்பட்டது.

பிரணாப் முகர்ஜி மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்தவர். இந்த மாநிலத்தையொட்டி வங்காளதேசம் அமைந்து உள்ளது. பிரணாப் முகர்ஜியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா, பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.

இந்த நிலையில் பிரணாப் முகர்ஜியின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் வங்காளதேசத்தில் நேற்று ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்பட்டது. இது தொடர்பாக மேற்கு வங்காள அரசு வெளியிட்ட அறிக்கையில், பிரணாப் முகர்ஜி வங்காளதேசத்தின் உண்மையான நண்பராக விளங்கியவர் என்றும், வங்காளதேசம் விடுதலை பெற்றதில் அவரது பங்களிப்பு மறக்கமுடியாதது என்றும், இந்தியா-வங்காளதேசம் இடையேயான உறவை மேம்படுத்த பாடுபட்டவர் என்றும் கூறப்பட்டு உள்ளது.

ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்பட்டதை தொடர்ந்து, அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள வங்காளதேச தூதரகங்களில் வங்காளதேச கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டு இருந்தது.

பிரணாப் முகர்ஜியின் மறைவுக்கு இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ஏற்கனவே இரங்கல் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் இலங்கை பிரதமர் மகிந்தா ராஜபக்சே நேற்று கொழும்பு நகரில் உள்ள இந்திய தூதரகத்துக்கு சென்று பிரணாப் முகர்ஜியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தினார். அங்கு வைக்கப்பட்டு இருந்த இரங்கல் குறிப்பு புத்தகத்தில், பிரணாப் முகர்ஜி இலங்கைக்கும், இலங்கை மக்களுக்கும் உண்மையான நண்பராக விளங்கியவர் என்று எழுதி உள்ளார்.

பிரணாப் முகர்ஜியின் மறைவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இரங்கல் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “இந்திய முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மறைவு பற்றிய செய்தி அறிந்ததும் மிகவும் துயரம் அடைந்தேன். அவரது மறைவு அவரது குடும்பத்தினருக்கும், இந்திய மக்களுக்கும் பேரிழப்பு ஆகும். அவர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறி இருக்கிறார்.

இதேபோல், அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோவும் இரங்கல் தெரிவித்து உள்ளார். அவர் தனது இரங்கல் செய்தியில், பிரணாப் முகர்ஜியின் தொலைநோக்கு பார்வை உலக அரங்கில் இந்தியாவின் வளர்ச்சிக்கும், இந்திய-அமெரிக்க உறவு பலப்படவும் உதவியது என்று கூறி உள்ளார்.
Tags:    

Similar News