செய்திகள்
துப்பாக்கிச்சூடு

அமெரிக்காவில் கருப்பினத்தவர் மீது போலீஸ் சரமாரி துப்பாக்கிச்சூடு

Published On 2020-08-25 00:29 GMT   |   Update On 2020-08-25 00:29 GMT
அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட் சம்பவத்தை போன்று கருப்பினத்தவர் மீது போலீசார் நிகழ்த்திய துப்பாக்கிச்சூடு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வா‌ஷிங்டன்:

அமெரிக்காவில் கடந்த மே மாதம் மினசோட்டா மாகாணத்தில் கறுப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட்டின் கழுத்தில் ஒரு வெள்ளை இன போலீஸ் அதிகாரி தனது முழங்காலை வைத்து நெரித்துக்கொன்ற சம்பவத்தால் மாபெரும் போராட்டம் வெடித்தது. அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஜார்ஜ் பிளாய்ட் கொலைக்கு நீதிகேட்டு போராட்டங்கள் நடைபெற்றன.

இந்த நிலையில், அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட் சம்பவத்தை போன்று தற்போது மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. மினசோட்டாவின் அண்டை மாகாணமான விஸ்கான்சினில் நேற்று முன்தினம் ஜேக்கப் பிளேக் என்ற ஆப்பிரிக்க அமெரிக்கரை போலீசார் பலமுறை துப்பாக்கியால் சுட்டனர்.

இதுதொடர்பாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், ஜேக்கப் பிளேக், வேனுக்குள் ஏற முயற்சிக்கும்போது, அவரை ஆயுதங்கள் ஏந்தி பின்தொடர்ந்த 2 போலீஸ் அதிகாரிகளில் ஒருவர், அவரை நகரவிடாமல் சட்டையை பிடித்துக்கொண்டு, பின்னாலிருந்து சுட முயற்சிக்கிறார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

7 முறை சுடப்பட்டதாக உள்ளூர்வாசிகள் கூறியதாக அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஜேக்கப் பிளேக் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அப்பகுதியில் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது.

சம்பவம் நடந்த இடத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு போலீசாரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது.
Tags:    

Similar News