செய்திகள்
கொரோனா தடுப்பூசி (கோப்புப்படம்)

அமீரகத்தில், கொரோனா தடுப்பு மருந்து 3-வது கட்ட பரிசோதனை

Published On 2020-08-14 11:08 GMT   |   Update On 2020-08-14 11:08 GMT
அமீரகத்தில் கொரோனா தடுப்பு மருந்து 3-வது கட்ட பரிசோதனையில் 15 ஆயிரம் தன்னார்வலர்கள் பங்கேற்றுள்ளனர்.
அபுதாபி:

அமீரக சுகாதாரம் மற்றும் தடுப்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அமீரகத்தில் கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க பல்வேறு கட்ட சோதனைகள் தனியார் சுகாதார நிறுவனம் ஒன்றுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த தடுப்பு மருந்து பரிசோதனை கடந்த மாதம் ஜூலை 16-ந் தேதி முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பரிசோதனையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளனர். குறிப்பாக அபுதாபி சுகாதாரத்துறையின் தலைவர் ஷேக் அப்துல்லா பின் முகம்மது அல் ஹமத் தன்னை முதல் ஆளாக பதிவு செய்து இந்த பரிசோதனையில் ஈடுபடுத்திக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது 3-வது கட்ட பரிசோதனையானது மிகவும் மும்முரமாக மேற்கொள்ளப்படுகிறது. இந்த பரிசோதனையில் 15 ஆயிரம் தன்னார்வலர்கள் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் 102 நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதில் 4 ஆயிரத்து 500 பேர் அமீரகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பரிசோதனையை 140-க்கும் மேற்பட்ட டாக்டர்கள், 300 நர்சுகள் மற்றும் மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்கள் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர். இந்த பரிசோதனையில் பங்கேற்று வரும் தன்னார்வலர்கள் தொடர்ந்து மருத்துவத்துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனையானது செய்யப்பட்டு வருகிறது.

இந்த பரிசோதனையில் ஆர்வத்துடன் பங்கேற்க விரும்புவோர் இணையதளம் மூலம் தங்களது விருப்பத்தை பதிவு செய்யலாம். உலகம் முழுவதும் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க அமீரக தலைவர்கள் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த பணிக்கு உதவிட அமீரகத்தில் இருந்து வரும் பல்வேறு நாட்டினரும் தங்களை தன்னார்வலர்களாக பரிசோதனையில் ஈடுபடுத்திக் கொள்ள அதிகமாக விரும்புகின்றனர். இந்த பரிசோதனைக்கு ஆர்வத்துடன் பங்கேற்க விரும்புவோருக்கு தொடர்ந்து மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து அமீரக சுகாதாரம் மற்றும் தடுப்புத்துறை மந்திரி டாக்டர் அப்துல் ரஹ்மான் பின் முகம்மது அல் ஒவைஸ் கூறும்போது, ‘‘இந்த பரிசோதனைகள் மிகவும் பெருமிதம் அளிக்கும் நிகழ்வாக இருந்து வருகிறது. இதற்கு பொதுமக்கள் பலரும் ஆர்வமாக ஒத்துழைப்பு அளித்து வருகிறார்கள்’’ என்று தெரிவித்தார்.
Tags:    

Similar News