செய்திகள்
ஆயுதங்களுடன் பயங்கரவாதிகள் (கோப்பு படம்)

ஆப்கானிஸ்தானில் 6500 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் உள்ளனர் -ஐ.நா. தகவல்

Published On 2020-07-26 08:33 GMT   |   Update On 2020-07-26 08:33 GMT
ஆப்கானிஸ்தானில் 6500 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இருப்பதாகவும், அவர்களால் இரண்டு நாடுகளுக்கும் அச்சுறுத்தல் இருப்பதாகவும் ஐநா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூயார்க்:

ஐ.எஸ்.ஐ.எஸ்., அல்-கொய்தா மற்றும் அந்த அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் மற்றும் நிறுவனங்கள் மீதான தடை குறித்த 26-வது அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது. அதில் பல்வேறு நாடுகளில் உள்ள பயங்கரவாதிகள் நடமாட்டம் குறித்த தகவல் விரிவாக வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்பாக ஆப்கானிஸ்தானில் 6000 முதல் 6500 வரையிலான பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த பயங்கரவாதிகளில் பெரும்பாலானோர் தெஹ்ரிக் தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்களால் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் என இரண்டு நாடுகளுக்குமே அச்சுறுத்தல் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தற்போதுள்ள பெரிய பயங்கரவாதக் குழுவான டி.டி.பி, அமீர் நூர் வாலி மெஹ்சுத் தலைமையில் செயல்படுகிறது. துணைத் தலைவராக காரி அம்ஜாத்தும், செய்தித் தொடர்பாளராக முகமது கோரசானியும் செயல்படுகின்றனர் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நாடு தனது மண்ணில் பயங்கரவாதிகளுக்கு தொடர்ந்து தங்குமிடம் மற்றும் ஆதரவளித்து வருகிறது என்பதை இந்த அறிக்கை மீண்டும் நிரூபித்துள்ளது.

இதேபோல் கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தில் குறிப்பிடத்தகுந்த அளவு எண்ணிக்கையில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாகவும் ஐ.நா. அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News