செய்திகள்
வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்

வடகொரியாவில் கொரோனா வைரசா? - மிகுந்த விழிப்புடன் இருக்க கிம் ஜாங் அன் எச்சரிக்கை

Published On 2020-07-04 16:11 GMT   |   Update On 2020-07-04 16:11 GMT
கொரோனா வைரசுக்கு எதிரான போரின் வீரியம் சற்று குறைந்தாலும் மீள முடியாத நெருக்கடியில் தள்ளப்படுவோம் என கிம் ஜாங் அன் தெரிவித்துள்ளார்.
பியாங்யாங்:

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய உயிர்கொல்லி வைரஸ் 6 மாதத்துக்கும் மேலாக உலக நாடுகளை ஆட்டிப் படைத்து வருகிறது. இந்த கொடிய வைரசை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் அனைத்தும் திணறி வருகின்றன.அதேசமயம் சர்ச்சைகளுக்கு பெயர்போன கிழக்கு ஆசிய நாடான வட கொரியாவில் தற்போது வரை ஒருவருக்கு கூட கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்படவில்லை என அந்நாட்டு அரசு கூறுகிறது.

சீனாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதுமே எல்லைகள் அனைத்தையும் மூடியதோடு, சர்வதேச பயணிகளுக்கு தடை விதித்ததால் இது சாத்தியமானதாக வடகொரியா கூறுகிறது.ஆனால் இந்த விவகாரத்தில் சர்வதேச நிபுணர்கள் தொடர்ந்து சந்தேகம் எழுப்பி வருகின்றனர். வடகொரியாவில் சுகாதார கட்டமைப்பு மோசமாக இருப்பதோடு அங்கு மருந்துப் பொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுவதால் நிச்சயமாக அந்த நாட்டில் வைரஸ் பாதிப்பு இருக்கக்கூடும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வடகொரியாவின் ஆளும் தொழிலாளர் கட்சியின் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் ‘‘கொரோனா வைரசால் உலகளாவிய சுகாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கும் சூழலிலும், கொடிய கொரோனா வைரசை வடகொரியாவில் கால்பதிக்க விடாமல் தடுத்து விட்டோம்’’ எனக் கூறினார்.

ஆனாலும் கொரோனா வைரஸ் விவகாரத்தில் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் என அதிகாரிகளை அவர் அறிவுறுத்தினார். இதுபற்றி அவர் கூறுகையில் ‘‘கொரோனா வைரசுக்கு எதிரான போரின் வீரியம் சற்று குறைந்தாலும் கற்பனை செய்து பார்க்க முடியாத மற்றும் மீள முடியாத நெருக்கடியில் தள்ளப்படுவோம்’’ என எச்சரித்தார்.
Tags:    

Similar News