செய்திகள்
ஜனநாயக ஆர்வலர் நாதன் லா

ஹாங்காங்கிற்கு பாதுகாப்பு அதிகாரியை நியமித்த சீனா - வெளிநாடு தப்பிச்சென்ற ஜனநாயக ஆர்வலர்

Published On 2020-07-03 21:53 GMT   |   Update On 2020-07-03 21:53 GMT
ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்புச்சட்டம் அமல்படுத்தப்பட்டதையடுத்து முக்கிய ஜனநாயக ஆர்வலர் நாதன் லா வெளிநாடு தப்பி சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹாங்காங்:

ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்புச்சட்டத்தை சீனா அமல்படுத்தியது. இந்த சட்டத்தின் முக்கிய அம்சமாக ஹாங்காங் அரசின் அனுமதி இல்லாமல் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை சீனா நேரடியாக மேற்கொள்ளலாம். 

ஆகையால் ஹாங்காங்கின் சுதந்திர சுயாட்சிக்கு முடிவு கட்டப்படும் என்று ஜனநாயக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும், ஒரு நாடு
இரண்டு அமைப்பு என்ற சீன-ஹாங்காங்கின் ஆட்சி நடைமுறை இனி ஒரே நாடு, ஒரே அமைப்பு என்ற நிலைக்கு செல்கிறது.

குறிப்பாக 'சுதந்திரமான ஹாங்காங்’ என்ற வார்த்தையை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தேசிய பாதுகாப்புச்சட்டம் அமல்படுத்தப்பட்டது முதல் நூற்றுக்கணக்கானவர்கள் ஹாங்காங்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், ஹாங்காங்கின் தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டதையடுத்து நகரின் பாதுகாப்பு படை தலைவராக ஜங்ஜியாங் என்ற அதிகாரியை சீனா புதிதாக நியமனம் செய்துள்ளது.

இந்த அதிகாரி போராட்டக்காரர்களை கொடூரமாக ஒடுக்கும் முறையை பின்பற்றுபவர் என பரவலாக கருத்துக்கள் வெளிவந்தவண்ணம் உள்ளது.

இந்நிலையில், ஹாங்காங்கின் மிகவும் பிரபலமான ஜனநாயக ஆர்வலர் நாதன் லா தான் நகரை விட்டு வெளியேறிவிட்டதாக தெரிவித்துள்ளார். 2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அம்ரல்லா முவ்மெண்ட் (குடை போராட்டம்) என்ற போராட்டத்தின் முக்கிய நபராக செயல்பட்ட லா ஜனநாயக ஆதரவு டெமோசிஸ்டோ என்ற கட்சி ஹாங்காங்கில் தொடங்கியவர் ஆகும்.



தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள தேசிய பாதுகாப்புச்சட்டத்தால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதால் ஹாங்காங்கை விட்டு வெளியேறி விட்டதாக பேஸ்புக் பதிவில் அவர் இதை தெரிவித்துள்ளார்.

மேலும், தான் தற்போது எந்த நாட்டில் இருக்கிறேன் என்ற தகவலை அவர் கூற மறுத்து விட்டார். தான் ஹாங்காங்கை விட்டு சென்றபோது ஜனநாயகத்துக்கு ஆதரவாக தொடர்ந்து போராடுவேன் என அவர் தெரிவித்துள்ளார்.

ஹாங்காங்கில் அமல்படுத்தப்பட்ட பாதுகாப்பு சட்டத்தால் ஆயிரக்கணக்கான ஜனநாயக ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படலாம் என உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த சமூக செயல்பாட்டாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். 
Tags:    

Similar News