செய்திகள்
கீதா கோபிநாத்

கொரோனாவுக்கு பிந்தைய பொருளாதார மீட்பு நிச்சயமற்றது - சர்வதேச நிதியம் சொல்கிறது

Published On 2020-07-01 08:21 GMT   |   Update On 2020-07-01 08:21 GMT
கொரோனா வைரஸ் தொற்று காலத்துக்கு பிந்தைய பொருளாதார மீட்பில் நிச்சயமற்ற நிலைமை உள்ளதாக சர்வதேச நிதியத்தின் ஆராய்ச்சி இயக்குனர் கீதா கோபிநாத் குறிப்பிட்டார்.
வாஷிங்டன்:

கொரோனா வைரஸ் தொற்று நோயைத் தடுப்பதற்காக உலகின் பெரும்பான்மையான நாடுகள் நீண்டகால ஊரடங்குகளை அறிவித்து அமல்படுத்தியதால் தொழில், வர்த்தகதுறைகள் முடங்கி விட்டன. இதன்காரணமாக பெருமளவில் வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளன. உலக பொருளாதாரம், இந்த நூற்றாண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு அதலபாதாளத்துக்கு சென்றுள்ளது.

இந்த ஆண்டில் வல்லரசு நாடான அமெரிக்காவும் சரி, பிற வளர்ந்த நாடுகளும் சரி, பொருளாதார வளர்ச்சியில் பிற்போக்கான நிலையில்தான் இருக்கும் என்று சர்வதேச நிதியம் (ஐஎம்எப்) கணித்தது. அந்த வகையில் 4.9 சதவீதம் என்ற அளவுக்கு பொருளாதார வளர்ச்சி சுருங்கிப்போய் விடும் என்று அந்த அமைப்பு கூறியது.

12 லட்சம் கோடி டாலர் அளவுக்கு (சுமார் ரூ.900 லட்சம் கோடி) உலக பொருளாதாரம் சரிவை சந்திக்கும். 2019-ம் ஆண்டின் அளவுக்கு உலகளாவிய உற்பத்தி திரும்புவதற்கு 2 ஆண்டுகள் ஆகும் எனவும் அந்த அபைப்பு கணித்து கூறியது.

இந்த நிலையில் மூலோபோயம் மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையம் நடத்திய நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில், சர்வதேச நிதியத்தின் ஆராய்ச்சி பிரிவு இயக்குனர் கீதா கோபிநாத் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு பிந்தைய காலம் பற்றி கூறியதாவது:-



கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு பின்னர் உலகளாவிய பொருளாதார மீட்பு எப்படி இருக்கும் என்று உறுதியாக கூற முடியவில்லை. தற்போதைய மீட்பு நிலை, நாங்கள் விரும்பியதை விட பலவீனமாகவே இருக்கிறது. மீட்புக்கான பாதை எப்படி இருக்கும் என்பது குறித்து இன்னும் மிகப்பெரிய நிச்சயமற்ற நிலைதான் உள்ளது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி, பயணங்களுக்கு வரவேற்பு இல்லாமை ஆகியவற்றால் பொருளாதார மீட்பு என்பது மெதுவாகத்தான் சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக முன்னணி பொருள் ஏற்றுமதியாளர்கள் மெதுவான பொருளாதார மீட்பைத்தான் கண்டு வருகின்றனர். மார்ச் மற்றும் ஏப்ரல் மாத நிலைமையில் இருந்து நாம் மீண்டுள்ளோம். ஆனால் கச்சா எண்ணெய்க்கான பாதை நாங்கள் கொரோனா வைரஸ் தொற்றுநோய் நெருக்கடிக்கு முன்பு கணித்ததை விட குறைவாகவே உள்ளது.

சர்வதேச நிதியத்தின், ஏழ்மையான நாடுகளுக்கான ஜி-20 கடன் நிவாரண முயற்சி, இந்த ஆண்டு இறுதிக்கு பின்னரும் நீட்டிக்கப்பட வேண்டிய தேவை எழுந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News