செய்திகள்
கோப்புப்படம்

கொரோனாவை கட்டுப்படுத்த பொது இடங்களில் தெளிக்க இஸ்ரேலிய கிருமிநாசினி- மத்திய அரசு முடிவு

Published On 2020-06-30 08:23 GMT   |   Update On 2020-06-30 08:23 GMT
கொரோனாவை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் கிருமிநாசினி வேதிப்பொருளை இஸ்ரேலிடம் இருந்து வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஜெருசலேம்:

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்காக மத்திய-மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்த கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஒரு அங்கமாக, பொது இடங்களில் அடிக்கடி கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்தப்படுகின்றன.

இதற்கு பயன்படுத்தப்படும் கிருமிநாசினி வேதிப்பொருளை இஸ்ரேலிடம் இருந்து வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இஸ்ரேலின் பிரதமர் அலுவலகம் மற்றும் ராணுவ அமைச்சக மேற்பார்வையில் இயங்கி வரும் உயிரியியல் ஆய்வு நிறுவனம் இந்த கிருமிநாசினியை தயாரிக்கிறது. உயிரி ஆயுதங்களை எதிர்கொள்வதற்காக இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்காக தயாரிக்கப்படும் இந்த கிருமிநாசினியை டெரா நோவல் என்ற இஸ்ரேலிய நிறுவனம் இந்தியாவுக்கு வினியோகிக்கிறது. இதற்காக ஒப்பந்தமும் போடப்பட்டு உள்ளது.

இந்த புதிய கிருமிநாசினியானது பாக்டீரியா, கொரோனா போன்ற வைரஸ் உள்ளிட்ட அனைத்து நுண்ணியிர்களும் அண்டவிடாமல் 100 சதவீதம் பாதுகாக்கிறது. மேலும் இந்த கிருமிநாசினி நீண்டநேரம் செயல்புரியும் என்பதும் கண்டறியப்பட்டு உள்ளது.

இந்த கிருமிநாசினியை விமான நிலையங்கள், ஆஸ்பத்திரிகள் மற்றும் பொது போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட பொது இடங்களில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இது, இந்தியாவின் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் முக்கிய அங்கம் வகிக்கும் என மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Tags:    

Similar News