செய்திகள்
துப்பாக்கிச்சூடு

அமெரிக்காவில் நினைவுநாள் கொண்டாட்டங்களில் தொடர் துப்பாக்கிச்சூடு - 9 பேர் பலி

Published On 2020-05-27 06:35 GMT   |   Update On 2020-05-27 06:35 GMT
அமெரிக்காவில் நினைவுநாள் கொண்டாட்டங்களின் போது நடந்த தொடர் துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 9 பேர் கொல்லப்பட்டனர்.
வாஷிங்டன்:

அமெரிக்காவில் ராணுவத்தில் பணியாற்றி உயிர் நீத்த வீரர்களை கவுரவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் கடைசி திங்கட்கிழமை ராணுவ வீரர்களுக்கான நினைவு நாளாக கடைப்பிடிக்கிறது.

இந்த நாளில் அமெரிக்கா முழுவதும் பொது விடுமறை அளிக்கப்படும். மேலும் நினைவு நாளுக்கு முந்தைய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வழக்கமான வார விடுமுறை நாட்கள் ஆகும்.

எனவே இந்த 3 நாள் தொடர் விடுமுறையை அமெரிக்க மக்கள் பூங்கா, கடற்கரை உள்ளிட்ட இடங்களுக்கு சென்று கொண்டாடித்தீர்ப்பார்கள். குறிப்பாக இல்லினாய்ஸ் மாகாணத்தின் தலைநகர் சிகாகோவில் நினைவுநாள் கொண்டாட்டங்கள் களை கட்டும்.



இந்த நிலையில் அமெரிக்காவில் தற்போது கொரோனா வைரஸ் கோரத்தாண்டவமாடி வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அங்குள்ள பெரும்பாலான மாகாணங்களில் ஊரடங்கு அமலில் உள்ளது.

இல்லினாய்ஸ் மாகாணத்திலும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட இருக்கிறது. ஆனால் ஊரடங்குக்கு மத்தியிலும் சிகாகோ நகரில் நினைவு நாள் கொண்டாட்டங்கள் களை கட்டின. மக்கள் கூட்டம் கூட்டமாக பூங்கா மற்றும் கடற்கரைக்கு படையெடுத்தனர்.

இந்த நிலையில் நினைவு நாள் கொண்டாட்டங்களின்போது சிகாகோ நகரில் தொடர் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அரங்கேறின. கடந்த சனிக்கிழமை இரவு சிகாகோவின் வடமேற்கு பகுதியில் உள்ள ஹம்போல்ட் பூங்காவில் ஏராளமான மக்கள் திரண்டு பொழுதை போக்கிக்கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த மர்ம நபர் திடீரென அங்கிருந்தவர்களை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதனால் அங்கு பெரும் பதற்றம் உருவானது. மக்கள் அனைவரும் நாலாபுறமும் சிதறி ஓடினர். எனினும் இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலியாகினர். பலர் காயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் நடந்த அடுத்த ஒரு மணி நேரத்தில் தெற்கு பகுதியில் உள்ள வாஷிங்டன் பூங்காவில் நடந்த மற்றொரு துப்பாக்கிச்சூட்டில் ஒரு சிறுவன் கொல்லப்பட்டான்.

அதனை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை ஹம்போல்ட் பூங்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் 45 வயதான பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

அடுத்த சில மணி நேரத்தில் ரூஸ்மெர் பகுதியில் உள்ள கடற்கரைக்கு அருகே நடந்த துப்பாக்கி துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். பலர் படுகாயம் அடைந்தனர்.

நேற்று முன்தினம் காலை சிகாகோவின் மேற்கு பகுதியில் உள்ள கார்பீல்டு பூங்காவில் திரண்டிருந்த மக்கள் மீது, மர்ம நபர் ஒருவர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 4 பேர் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர்.

இப்படி வார இறுதி நாட்களில் நினைவு நாள் கொண்டாட்டங்களின்போது நடந்த தொடர் துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் மொத்தம் 9 பேர் கொல்லப்பட்டனர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
Tags:    

Similar News