செய்திகள்
இவாங்கா டிரம்ப்

அமெரிக்க அரசின் கட்டுப்பாடுகளை புறக்கணித்த இவாங்கா டிரம்ப்

Published On 2020-04-18 03:08 GMT   |   Update On 2020-04-18 03:08 GMT
அமெரிக்க அரசின் கட்டுப்பாடுகளை புறக்கணித்து விட்டு இவாங்கா டிரம்ப், நியூஜெர்சிக்கு பயணம் மேற்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
வாஷிங்டன்:

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப் (வயது 38).

இவர் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில், ஜனாதிபதியின் மூத்த ஆலோசகராக இருக்கிறார்.

இவரது கணவர் ஜாரெட் குஷ்னரும், ஜனாதிபதியின் ஆலோசகராக இருக்கிறார்.

அமெரிக்காவில் தற்போது கொரோனா வைரஸ் காட்டுத்தீ போல பரவி வருவதை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

வாஷிங்டனில் கடந்த 1-ந்தேதி முதல், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து பயணம் மேற்கொள்ளவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது விருப்ப பயணங்கள் மேற்கொள்ளவும், ஷாப்பிங் பயணங்கள் செய்யவும், சமூக பயணங்கள் செல்லவும் தடை விதிக்கிறது.

“வீடுகளில் தங்கி இருக்கக்கூடிய நிலை ஏற்பட்டிருப்பது அதிர்ஷ்டம்தான். தயவுசெய்து எல்லோரும் வீட்டில் இருங்கள்” என்று இவாங்கா டிரம்ப் ஒரு வீடியோ செய்தியை மார்ச் மாத இறுதியில் வெளியிட்டார்.

சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் அனைவரும் வீடுகளுக்குள் இருக்குமாறு கேட்டுக்கொண்டார், தங்களை தனிமைப்படுத்திக் கொண்டவர்களுக்கு நன்றி தெரிவித்துகொண்டார்.

இது மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் இருப்பதற்கு ஊக்கமாக அமைந்தது.

ஆனால், அரசு பிறப்பித்த கட்டுப்பாடுகளை மீறி, இவாங்கா டிரம்பும், அவரது கணவர் ஜாரெட் குஷ்னரும், தங்களது 3 குழந்தைகளுடன் நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள பெட்மின்ஸ்டர் கோல்ப் கிளப் சொகுசு விடுதிக்கு பயணம் மேற்கொண்டு பாஸ்காவின் (யூத விடுமுறை) முதல் இரவை கொண்டாடி உள்ளனர்.

இதுபற்றிய தகவல்கள் முதலில் நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் வெளியாகி பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஜாரெட் குஷ்னர், நியூஜெர்சி பயணத்தை முடித்துக் கொண்டு வாஷிங்டன் வெள்ளை மாளிகைக்கு திரும்பி விட்டார். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.

ஆனால் இவாங்கா, குழந்தைகளுடன் பெட்மின்ஸ்டரில் தங்கி விட்டார். அங்கிருந்தவாறு தொலைபேசி அழைப்புகளை ஏற்று பேசுகிறார். குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுகிறார்.

இது குறித்து வெள்ளை மாளிகை கருத்து தெரிவிக்கையில், “இவாங்கா டிரம்ப் வர்த்தக ரீதியிலான பயணம் மேற்கொள்ளவில்லை. அவர் குடும்பத்துடன் விடுமுறையை தனிப்பட்ட முறையில் கழிக்க முடிவு செய்தார்” என கூறியது.

நியூஜெர்சியிலும் எல்லோரும் வீடுகளுக்குள் இருக்கிற வகையில் கட்டுப்பாடு போடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News